ADVERTISEMENT

காசாளரிடம் இருந்து பணம் பறிப்பு; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

10:08 AM Jan 11, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரியில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் காசாளர் ஒருவரை அரிவாளால் தாக்கி விட்டு பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி லாஸ்பேட்டை குமரன் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 64). இவர் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருந்து மொத்த விற்பனை நிறுவனத்தில் காசாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் பணிக்கு வந்த பாலசுப்பிரமணியன், அந்நிறுவனத்தில் முதல் நாள் வசூலான பணம் 1 லட்சத்து 73 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு 100 அடி ரோடு இந்திரா காந்தி சிலை அருகே உள்ள ஒரு வங்கியில் டெபாசிட் செய்வதற்காகத் தனது பைக்கில் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். வண்டியில் பணத்தை வைத்துக் கொண்டு பைக்கில் தனது நிறுவனத்தில் இருந்து வெளியேறிய 50 மீட்டர் தொலைவில் அங்கு முகக் கவசம் அணிந்திருந்த 2 மர்ம நபர்கள் திடீரென வழிமறித்தனர்.

பின்னர் பாலசுப்பிரமணியன் கழுத்தில் கத்தியை வைத்து வசூல் பணத்தைத் தருமாறு கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே பாலசுப்பிரமணியனின் கையில் கத்தியால் தாக்கிவிட்டு அவரது வண்டியில் இருந்த பணம் 1 லட்சத்து 73 ஆயிரத்தைப் பறித்துக் கொண்டு மறைவாக நிறுத்தி வைத்திருந்த பைக்கில் ஏறி தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து பாலசுப்பிரமணியன் கூச்சல் போடவே, அவ்வழியாகச் சென்றவர்கள் உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி கோரிமேடு காவல் நிலையத்துக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உத்தரவின் பேரில் எஸ்.ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

மேலும் பாலசுப்பிரமணியத்திடம் சம்பவம் குறித்து கேட்டறிந்ததோடு அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாலசுப்ரமணியன் தினமும் வசூல் பணத்தை எடுத்துச் செல்வதைப் பல நாட்களாக நோட்டமிட்டு யாராவது இந்த துணிகரத்தில் ஈடுபட்டார்களா அல்லது அந்த நிறுவனத்தில் பணியாற்றி வெளியேறியவர்கள் யாரேனும் வழிப்பறி செய்தார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT