Skip to main content

இந்தியா போதைப்பொருள் கடத்தல் மையமாக பயன்படுத்தப்படுகிறதா? - உயர் நீதிமன்றம் கேள்வி!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

chennai highcourt

 

போதைப்பொருள் கடத்தல் மண்டலமாக நம்நாடு பயன்படுத்தப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், போதைப்பொருள் கடத்தலை வேரறுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

 

2019-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் வேலூர் மாவட்டம், பொம்மி குப்பத்தை சேர்ந்த விஜயகுமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

 

இந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் வி.எம்.வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரதாப்குமார், இந்த வழக்கில் தொடர்புடைய முதல் மற்றும் இராண்டாவதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சகோதரர்கள் எனவும், அவர்கள் குடும்பத்தினருக்கு சொந்தமான லாரியை கொண்டு சரக்குகளைக் கையாளும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

அப்போது நீதிபதிகள், போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பது மற்றும் அதனால் சமூகம் சீரழிவதை முக்கிய விஷயமாக கருதுவதாக தெரிவித்ததுடன், வழக்கில் மத்திய, மாநில அளவிலான போதைப்பொருள் தடுப்பு பிரிவுகளை, தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்த்தனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், தமிழக உள்துறை செயலாளரும், போதைப்பொருள் தடுப்பு பிரிவுகளும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

 

நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்: 

  • போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை வழக்குகள் பதிவாகி உள்ளன?

     
  • பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் இயல்பு, அளவு என்ன? அவை எப்படி அழிக்கப்படுகிறது?

     
  • வெளிநாட்டவருக்கு இதில் தொடர்பு உள்ளதா?

     
  • போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தடுப்பு காவல் சட்டத்தில் எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? அந்த வழக்குகளிலிருந்து எத்தனை பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்? எந்த காரணத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்?

     
  • இதுபோன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்கள் என்ன பாதிப்புகளை சந்திக்கிறார்கள்? போதைப்பொருள் நுகர்வோரால் என்ன குற்றங்கள் நடக்கின்றன? பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கடுமையான குற்றங்களில் ஈடுபடுகிறார்களா?

     
  • போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்க மையங்கள் ஏதும் உள்ளனவா?

     
  • போதைப்பொருள் கடத்தலுக்கு வேலையில்லா திண்டாட்டம்தான் காரணமா? மாணவர்களும், இளைஞர்களும் இந்த கடத்தலில் ஈடுபடுகிறார்களா?

     
  • போதைப்பொருள் கடத்தல் மையமாக இந்திய நாடு பயன்படுத்தப்படுகிறதா?

     
  • கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் எங்கு விளைவிக்கப்படுகின்றன, அடர்ந்த காடுகளுக்கு உள்ளேயும் கண்காணிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்துள்ள காலத்தில், காவல்துறையிடம் உள்ள ஆளில்லா கேமரா மூலம் கண்காணிக்கவோ, அவற்றை அழிக்கவோ ஏன் முடியவில்லை?

     
  • போதைப்பொருள் கடத்தலில் சட்டவிரோத பணம் சம்பாதிப்பதை தவிர்த்து வேறு காரணங்கள் உள்ளனவா?

     
  • போதைப்பொருள் கடத்தலை வேரறுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன?

     
  • கடந்த 10 ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தலில் எவ்வளவு தொகை ஈடுபடுத்தப்பட்டுள்ளது?

     
  • போதைப்பொருள் தொடர்புடைய வழக்குகள் மற்றும் குற்றங்களை கையாள ஏன் தனிப்பிரிவை உருவாக்கக்கூடாது?

 

இதுகுறித்து 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” - இளையராஜா வழக்கில் நீதிமன்றம் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ilaiayaraaja copyright case update

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள்,  இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து, பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம் என்றும் அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் எக்கோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

இந்த மனு கடந்த மாதம் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பிற்கும் இளையராஜா தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது. 

இந்த நிலையில் இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷஃபிக் முன்பு மீண்டும் விராணைக்கு வந்தது. அப்போது எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இசையமைத்ததற்கு இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்து விடுவதால், அதன் உரிமை தயாரிப்பாளரிடம் சென்றுவிடும். தயாரிப்பாளரிடம் உரிமை பெற்றுள்ளதால் பாடல்கள் தங்களுக்கு சொந்தமாகிவிடும்” என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “இசையமைப்பது என்பது கிரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் பொருந்தாது” என்றார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பாடல் வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” என்ற கேள்வியை முன் வைத்தார்கள். மேலும் பாடல்கள் விற்பனை செய்ததன் மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்குச் சொந்தம்? அவர் பெற்ற தொகை மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தெரிவித்துள்ளனர். அதே போல் பாடலாசிரியருக்கு உரிமை கோருவதற்கு வாய்ப்பிருக்கிறதா, அது குறித்து தங்களின் விளக்கம் என்ன என்று இளையராஜா தரப்பிடம் கேட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்கள். 

Next Story

விஷால் வழக்கில் ஆய்வறிக்கை தாக்கல் 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
vishal lyca case update

நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் படம் வெளியிடும் பணிகளை மேற்கொள்வதாக லைகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தங்களுக்கு செலுத்த வேண்டிய கடனைத் திரும்பச் செலுத்த விஷாலுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ.21.29 கோடியில் ரூ. 15 கோடியை உயர்நீதிமன்றத்தில் விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்தத் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார் விஷால். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். 

இதையடுத்து பல கட்டங்களாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த முறை நடந்த விசாரணையில், உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆஷா, ரத்னம் படத்திற்காக விஷால் வழங்க வேண்டிய நிலுவைச்  சம்பளமான ரூ.2. 60 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த, அந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்த போது, லைகா நிறுவனம் விஷாலின் மனுவிற்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே பல கட்டங்களாக நடந்த விசாரணையின் போது, இந்த வழக்கு தொடர்பாக விஷால் - லைகா இருவருக்கும் இடையிலான பண பரிவர்த்தனை குறித்து ஆய்வறிக்கை சமர்பிக்க ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா என்பவரை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மூன்று ஆண்டுக்கான வருமான வரி கணக்கு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி இருவருக்குமான 
பண பரிவர்த்தனை குறித்த ஆய்வறிக்கையை ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து ஆடிட்டரின் அறிக்கை குறித்து ஆராய வேண்டும் எனக் கோரி, விசாரணையை தள்ளிவைக்க விஷால் தரப்பு கேட்டுக் கொண்டது. பின்பு வழக்கு விசாரனை ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.