ADVERTISEMENT

இந்தியாவின் எதிர்ப்பை மீறி கனடா பிரதமர் மீண்டும் ஆதரவு! 

11:04 AM Dec 05, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள 'டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி பல தடைகளைக் கடந்து டெல்லி சென்றடைந்தது. டெல்லியின் புராரி பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "நாங்கள் அனைவரும் அங்கிருக்கும் எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறோம். அமைதியான போராட்டக்காரர்களின் உரிமைகளைப் பாதுகாக்க கனடா எப்போதும் துணைநிற்கும் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். பேச்சுவார்த்தை மூலம் முடிவு காண்பதை நாங்கள் நம்புகிறோம். எங்கள் கவலைகளை எடுத்துரைக்கும் விதமாகப் பல வழிகளில் இந்திய அதிகாரிகளை அணுகியுள்ளோம். நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது” எனத் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவிற்கான கனடா தூதரை அழைத்து, கனடா பிரதமரும், அந்நாட்டின் சில அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்திய விவசாயிகள் தொடர்பான பிரச்சனை குறித்து பேசியவை, ஏற்றுக் கொள்ளமுடியாத தலையீட்டை, எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் ஏற்படுத்துகிறது. இதேபோல் தொடர்ந்து நடந்தால், அது இருநாடுக்கும் இடையேயான உறவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ, "கனடா எப்போதும், அமைதியாக போராட்டம் நடத்தும் உரிமைக்காகவும், மனித உரிமைக்காகவும் உலகின் எந்த மூலையிலும் துணை நிற்கும் என கூறியுள்ளார். மேலும் "கனடா, அமைதி திரும்புவதற்கும், பேச்சுவார்த்தை நடத்துவதற்குமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையே விரும்புகிறது" எனவும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT