Skip to main content

'டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகளே இல்லை!' - பா.ஜ.க சீனிவாசன் பேச்சு!

Published on 10/12/2020 | Edited on 11/12/2020

 

 'Those who are fighting in Delhi are not farmers' - BJP Srinivasan speaks!

 

பா.ஜ.கவின் மதுரை மண்டலப் பொறுப்பாளர் சீனிவாசன், இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டம் குறித்த விரிவான விளக்கம் அளித்த அவர், வேளாண் சட்டத்தை எதிர்த்து, டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் யாரும், விவசாயிகள் அல்ல. அவர்கள் மாஃபியாக்களின் தூண்டுதலினால் ஒன்று சேர்ந்த கூட்டம். இந்த வேளாண் சட்டம் முழுமையாக விவசாயிகளுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

அதேபோல் விவசாய நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களால் அபகரிக்கப்படும் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தி.மு.கவால் பரப்பப்பட்ட பொய்யான தகவல். தமிழகத்தில் தி.மு.க மீதுதான் அதிக அளவில் நிலம் கையகப்படுத்தப்பட்ட புகார்கள் அதிகம் உள்ளன. தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற இருந்த பந்த் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. அதற்குக் காரணம் தமிழக விவசாயிகளுக்கு நன்றாகவே இந்தச் சட்டம் குறித்த அறிவும், ஞானமும் இருக்கிறது. தி.மு.க தேர்தல் அறிக்கையில் இந்தப் புதிய வேளாண் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என அவர்களே முன்வைத்துவிட்டு, இன்று அவர்களே அதற்கு எதிராகப் போராட்டம் நடத்துவது என்பது விவசாயிகளை ஏமாற்றுவதாகும்.

 

எனவே இந்த மாதம் 8ஆம் தேதி முதல் 'விவசாயிகளின் நண்பன் மோடி' என்ற ஒரு அமைப்பை தொடங்கி, தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து இந்த வேளாண் சட்டத்தைக் குறித்தும், மத்திய அரசினுடைய திட்டங்கள் குறித்தும் நேரில் அவர்களுக்கு விளக்க இருக்கிறோம். இந்த அமைப்பு கடந்த 8-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கி, இந்த மாதம் இறுதிவரை இந்தப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது எனத் தெரிவித்தார். 

 

மத்திய அரசு ஒருபோதும் இந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லை. சட்டம் குறித்த அனைத்து விளக்கங்களும் அந்தந்த மொழிகளில் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துச் சொல்லப்படும். எனவே உண்மையான விவசாயிகள் யாரும் இதுவரை எந்தப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை. எனவே, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் விவசாயிகள் அல்ல. அவர்கள் காசு கொடுத்துக் கூட்டி வந்த கூட்டம் என்றும் சாடினார் சீனிவாசன்.

 

 

 

சார்ந்த செய்திகள்