ADVERTISEMENT

இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! - ஒரே நாளில் 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு!!

06:02 PM Apr 12, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் திங்கள்கிழமை (ஏப். 12) இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஓரே நாளில் 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வேகமெடுத்துள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது.

தேசிய பங்குச்சந்தையான நிப்டி, திங்கள்கிழமை(ஏப். 12) காலை 14644.65 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 14652.50 புள்ளிகளுக்குச் சென்றது. குறைந்தபட்சமாக 14283.55 புள்ளிகள் வரை சரிந்தது. தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 50 பங்குகளில், வெறும் 4 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே முந்தைய வர்த்தக தினத்தை விட சற்று ஏற்றம் கண்டிருந்தன. 46 நிறுவனப் பங்குகளின் விலைகள் சரிந்து இருந்தன.

நிப்டியில் மிட்கேப் பங்குகள், வங்கித்துறை, நிதி சார்ந்த துறைகளின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சி கண்டன. வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 524.10 புள்ளிகள் (3.44 சதவீதம்) சரிவுடன் 14310.80 புள்ளிகளில் வணிகத்தை நிறைவு செய்தது. அதேபோல், மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ், சரேலென 1707.94 புள்ளிகள் (3.44 சதவீதம்) வரை சரிந்து, 47883.38 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்துக் கொண்டது.

மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளின் மொத்த மதிப்பு ஏப்.9ம் தேதி நிலவரப்படி, 209.60 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், திங்களன்று ஒரே நாளில் அவற்றின் மதிப்பு 200.90 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது. அதாவது, இன்று ஒரே நாளில் பங்குகளின் மதிப்பு 8.70 லட்சம் கோடி ரூபாய் வீழ்ச்சி அடைந்து, முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

‘சந்தை வீழ்ச்சிக்கு இடையிலும் நிப்டியில் 14,950 & 15,000 புள்ளிகளாக சரிவு தடைப்பட்டு இருந்தால், சந்தையில் மேலும் சரிவு ஏற்படாது என்று கணக்கிடப்பட்டு இருந்தது. அதேபோல் 14,250 புள்ளிகளுக்கு கீழே குறியீட்டெண் இறங்குமேயானால் நிப்டி 13,800 & 13,900 புள்ளிகளாக மேலும் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது’ என்கிறார் மணிஷ் ஹதிராமணி. இவர், தீன் தயாள் முதலீட்டு நிறுவனத்தின் பங்குச்சந்தை ஆய்வாளர்.

நிப்டி மற்றும் சென்செக்ஸில் கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே இன்று சிவப்பு வண்ணத்திலேயே வர்த்தத்தை முடித்திருக்கின்றன. குறிப்பாக, வங்கித்துறை பங்குகள் அதிகபட்சமாக 9 சதவீதமும், ஆட்டோ, எனர்ஜி, உட்கட்டமைப்பு மற்றும் உலோக நிறுவனப் பங்குகள் 4 முதல் 5 சதவீதம் வரையிலும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், இண்டஸ் இந்த் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், யுபிஎல் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு இன்று பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், டாக்டர் ரெட்டீஸ் லேப், சிப்லா, டிவிஸ் லேப், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஓரளவு ஏற்றம் கண்டிருந்தன. மும்பை பங்குச்சந்தையில் ரியல் எஸ்டேட் துறைகள் அதிகபட்சமாக 7.7 சதவீதம் சரிவை சந்தித்தன. மின்சாரம், உலோகம், வங்கி, ஆட்டோமொபைல் ஆகிய துறைகள் 4 முதல் 5 சதவீதம் வரை சரிவடைந்தன.

‘நிப்டியின் வர்த்தக நிலை 14,500 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளதால் பங்குகளின் மதிப்பு மேலும் 14,100 முதல் 14,000 புள்ளிகள் வரை சரியக்கூடும். அதேநேரம், சந்தை மதிப்பு நேர்மறையாக இருக்கும்பட்சத்தில் ஓரிரு நாளில் 14,650 முதல் 14,800 புள்ளிகள் வரை உயரவும் வாய்ப்பு இருக்கிறது’ என்கிறார் மோதிலால் ஓஸ்வால் நிதிச்சேவை நிறுவனத்தின் தலைமை அலுவலர் சந்தன் டபாரியா.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT