ADVERTISEMENT

நீட்: ஆங்கில வினாத்தாளை கொண்டு சரிபார்க்க வேண்டியது தானே: உச்சநீதிமன்றம்

02:36 PM Jul 20, 2018 | Anonymous (not verified)


தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, எதிராக சிபிஎஸ்இ தொடர்ந்த வழக்கில் கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.

முன்னதாக, நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்த பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், மே 6ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் தமிழில் மொழிமாற்றம் செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தது என்றும், இதனால் தமிழ் மொழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பில், பிழையாக கேட்கப்பட்ட 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களாக வழங்க வேண்டும் என்றும் மேலும் 2 வாரத்தில் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும் என சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து சி.பி.எஸ்.இ. நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, மொழிபெயர்ப்பில் பிழை இருந்தால் ஆங்கில வினாத்தாளை கொண்டு சரிபார்க்க வேண்டியது தானே என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு டி.கே.ரங்கராஜன் தரப்பு, வினாக்கள் பிழையாக இருந்தால் கருணை மதிப்பெண் தருவதுதான் வழக்கமாக உள்ளது என்றும் சிபிஎஸ்இ பிழையாக கேள்விகள் கேட்டதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அதிகம் என தெரிவித்துள்ளனர்.

அப்போது, 196 கூடுதல் மதிப்பெண் வழங்குவதால் பாதிப்படையும் மாவணர்களை கருத வேண்டியுள்ளது என நீதிபதிகள் கூறியுள்ளனர். 40க்கும் மேற்பட்ட கேள்விகளில் பிழை உள்ளதால் சிறிய தவறாக கருத முடியாது என டி.கே.ரங்கராஜன் தரப்பு வாதங்களை வைத்தனர். இருப்பினும் சிபிஎஸ்இ அடுத்தமுறை இவ்வாறு செயல்படாமல் இருக்க வழிகாட்டுதல்களை தர முடியும் எனக்கூறி 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, இடைக்காலத்தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT