Skip to main content

“ஆளுங்கட்சி உறுப்பினரின் அனுமதியுடன்தான் அத்துமீறியுள்ளார்கள்...” - காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
"The Congress MP accused  trespassers have come only with the permission of the ruling party member

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக இரண்டு நபர்கள் திடீரென அத்துமீறி மக்களவைப் பகுதியில் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று (13-12-23) வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசியதாகக் கூறப்படுகிறது. மேலும், 'சர்வாதிகாரம் கூடாது' என அந்த இருவரும் முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றனர்.

அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்பிக்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.  நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான இன்று இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

போலீசார் நடத்திய விசாரணையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே வண்ணப் புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டவர் மனோரஞ்சன், சாகர் ஷர்மா என்பது தெரியவந்தது. மேலும், இந்த 2 பேர் எவ்வித ஆவணமும் இன்றி நாடாளுமன்றத்திற்குள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கு வெளியே பிடிபட்ட இருவரும் செல்போன், கைப்பை என எதையும் எடுத்து வரவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் நாடாளுமன்றத்துக்குள் நடந்த அத்துமீறல் தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உட்பட எந்த ஆவணமும் இன்றி நாடாளுமன்றத்துக்குள் இருவரும் நுழைந்தது எப்படி என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து பாதுகாப்புத் துறை பதிலளிக்க வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். இது குறித்த விவாதங்கள் ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “புதிய நாடாளுமன்ற கட்டடம் பாதுகாப்பானதாக இல்லை. ஆளுங்கட்சி உறுப்பினரின் அனுமதியுடன்தான் அத்துமீறியவர்கள் வந்துள்ளனர்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

குற்றவாளிகளுக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்த டெல்லி போலீஸ்? - நீதிமன்றத்தில் புகார்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Delhi police gave electric shocks to criminals and Complaint in court

நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். 

இதனையடுத்து நாடாளுமன்றத்தில் வண்ணப் புகைக் குப்பிகளை வீசியதாகக் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 6 பேரையும் 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு அனுமதி கோரியது. மேலும் நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் என்பது திட்டமிடப்பட்ட சதி என டெல்லி போலீசார் வாதத்தை முன் வைத்தனர். இதனையடுத்து 4 பேருக்கும் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில், அவர்களுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்றக் காவல் நேற்றுடன் (31-01-24) முடிவுக்கு வர, அவர்களின் நீதிமன்றக் காவலை வரும் மார்ச் 1 ஆம் தேதி நீட்டிப்பு செய்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில், கைதான 6 பேரில் 5 பேர் தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் அளித்த அந்த புகாரில், ‘இந்த சம்பவத்தில் அரசியல் கட்சித் தலைவர்களுடன் தொடர்பு உள்ளதாக ஒப்புக்கொள்ள வேண்டும் என எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து போலீசார் கொடுமைப்படுத்துகின்றனர். 70க்கும் மேற்பட்ட வெற்றுக் காகிதங்களில் கையெழுத்திட வேண்டும் என்று வற்புறுத்தி கையெழுத்து வாங்கினர்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரை கருத்தில் கொண்ட நீதிபதி ஹர்தீப் கவுர், இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பான விசாரணை பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

Next Story

புதிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக குடியரசுத் தலைவர்; துவங்கியது பட்ஜெட் கூட்டத்தொடர்!

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
President for the first time in the new Parliament and Budget session started

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (31-01-24) தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து, நாளை (01-02-24) மத்திய அரசின் 2024 -2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தொடரின் போது விலைவாசி உயர்வு, ராமர் கோயில் திறப்பு விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல், குளிர்கால கூட்டத் தொடரின்போது 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, அமலாக்கத்துறையினர் மீதான புகார்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் மோடி நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த வேண்டும் என எதிர்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே, கடந்த ஆண்டு மே மாதம் நடந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் இருந்தது. மேலும், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரதமர் மோடியே கட்டிடத்தை திறந்து வைத்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பழங்குடியினர் என்பதாலேயே பாஜக தலைமையிலான மத்திய அரசு அவருக்கு அழைப்பு கூட விடுக்காமல் இருந்தது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர். அது பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு முதல் முறையாக புதிய நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தார். மேலும், பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் புதிய நாடாளுமன்றத்திற்கு வருகை வந்த குடியரசுத் தலைவரை பிரதமர் மோடி வரவேற்றார். மேலும், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் முன்பு நாடாளுமன்ற ஊழியர்கள் செங்கோலை ஏந்தியபடி வரவேற்பு அளித்தனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அலுவல்கள் தொடங்கப்பட்ட நிலையில், இன்று தான் முதல்முறையாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வருகை புரிந்து உரையாற்றினார். 

அப்போது அவர், “ புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உரையாற்றுவதில் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி20 மாநாட்டை மத்திய அரசு வெற்றிகரமாக நடத்தியது. நமது அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. உலகளவில் இந்தியாவின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறது. அனைத்து கட்சியினரும் ஒத்த கருத்துடன் பயணிப்பார்கள் என நம்புகிறேன். அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்பட்டது பெருமைக்குரியது. வறுமையில் இருந்து 25 கோடி மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற நோக்கத்துடன் பயணித்து வருகிறோம்” என்று கூறினார்.