கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகப் பிரதமர் மோடி அறிவித்துள்ள சூழலில், ஏழைகளுக்கு உதவும் வகையிலான நிதியுதவி குறித்து அரசு எதுவும் அறிவிக்காதது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dsfdsfd.jpg)
உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரசால் இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 4.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கிப்போயுள்ள சூழலில், இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ஊரடங்கை மே மூன்றாம் தேதி வரை நீட்டிப்பதாகப் பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.
இன்று காலை நாட்டு மக்களிடம் இதுகுறித்து உரையாற்றிய பிரதமர் மோடி கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே மூன்றாம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்படுவதாகவும், ஏப்ரல் 20 வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் தொடரும் இந்த ஊரடங்கு, அதன்பின் ஒவ்வொரு பகுதியில் உள்ள கரோனா பரவல் நிலையைப் பொருத்து பகுதிவாரியாகத் தளர்த்தப்படலாம் எனவும் தெரிவித்தார்.
பிரதமரின் இந்த உரையில் மக்களுக்கான நிதியுதவி குறித்தும் எதுவும் அறிவிக்கப்படாத சூழலில், இதனைக் கடுமையாக விமர்சித்துள்ள ப.சிதம்பரம், "மார்ச் 25-ம் தேதி அறிவித்த சொற்ப நிதியுதவி திட்டத்தைக் கடந்து ஒரு பைசா கூட அதற்கு மேல் அறிவிக்கப்படவில்லை. பணத்தேவை, புழக்கம் குறித்த முதல்வர்களின் கோரிக்கைகளுக்கு ஒரு பதிலும் இல்லை.
ரகுராம் ராஜன் முதல் ஜான் ட்ரீஸ் வரை, பிரபத் பட்னாயக் முதல் அபிஜித் பானர்ஜி வரை யாருடைய ஆலோசனைகளும் உங்கள் காதுகளில் விழவில்லை. ஏழை மக்கள் 21+ 19 நாட்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும். பணம் உள்ளது, உணவும் உள்ளது, ஆனால் அரசு இரண்டையும் வெளியே விடாது" எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)