
அண்மையில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் சோகத்தையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி முடிவுகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. அதில், பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு, எல்லை மூடல், சிந்துநதி நீர் பங்கீடு தடை உள்ளிட்ட முடிவுகளை எடுத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் வான்வெளியை இந்தியா பயன்படுத்த தடை, சிம்லா ஒப்பந்தம் உள்ளிட்ட முடிவுகளை பாகிஸ்தானும் எடுத்தது. இரு நாடுகளின் இந்த அதிரடி நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியின் இல்லத்தில் முக்கிய ஆலோசனை நேற்று இரவு நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சிடிஎஸ் ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் இந்திய விமானப்படைத் தலைவர், விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதில் முப்படைகளுக்கும் முழு சுதந்திரத்தை தருவதாக பிரதமர் மோடி உறுதியளித்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், இன்று (30-04-25) பிரதமர் மோடி தலைமையில் டெல்லி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்ததாவது, “மாநில அளவில் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அவசியம் இல்லை. மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசின் வரம்பில் தான் வரும். மாநிலங்கள் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் குழப்பம் ஏற்படும். எனவே, பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கை உள்ளிட்டவை குறித்து கருத்தில் கொண்டு அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்