ADVERTISEMENT

''மதுபான தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்க ரூ.90 கோடி லஞ்சம்''- முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு!

05:18 PM Sep 02, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது பேசிய அவர், " அகில இந்திய அளவில் எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகின்றது. பாஜக தன்னை அசைக்க முடியாத சக்தி என்ற மாயையை மக்கள் மத்தியில் உருவாக்கி வருகிறது. காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்டி விட்டு, எதிர்கட்சிகளை பிரித்து மீண்டும் ஆட்சிக்கு பா.ஜ.க முயற்சிக்கின்றது. இதனால் வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த திட்டமிட்டுள்ளார்கள், காங்கிரஸ் கட்சி தலைவர்களும் இதற்கான முயற்சி எடுக்கின்றார்கள்.

இப்போது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் மோடி ஆட்சியில் 25 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் சென்றுவிட்டனர்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வாங்குவேன் என்று வாக்குறுதி கூறி வந்த ரங்கசாமி அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர மத்திய அரசு ஒப்புக்கொள்ளாத நிலையில் மாநில அந்தஸ்து கேட்கும் ரங்கசாமியின் அரசு போலி அரசாக செயல்படுகின்றது. இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு உரிய நிதியை ஒதுக்காததால் இந்த அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது.

புதுச்சேரியில் மதுபானம் தயாரிக்க 6 நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் உரிமம் கொடுக்க ரூ.15 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக ஆளுங்கட்சி உறுப்பினரே சட்டப்பேரவையில் வெளிப்படையாக பேசியும் முதல்வரிடத்தில் இருந்து எந்த பதிலும் இல்லை. ஆளுங்கட்சி உறுப்பினரின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இந்திரா காந்தி காந்தி காலத்திலும் தலைவர்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்றார்கள். அதனால் காங்கிரஸ் எந்த பின்னடைவையும் எப்போதும் அடையாது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி வரவேண்டும் என்பது எனது விருப்பம். அவர் தேர்தலில் போட்டியிட வலியுறுத்தப்படும். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறும்" என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT