ADVERTISEMENT

பாஜக... பதவி வெறியும் ஊழல் ஒழிப்பும்!

06:04 PM Oct 31, 2019 | santhoshb@nakk…

காங்கிரஸ் பதவி வெறிபிடித்து அலைகிறது என்று கடந்த தேர்தலில் மோடி பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்தான் பொருளாதார சீர்குலைவுக்கே முழுமையான காரணம் என்றும் போகிற இடமெல்லாம் குற்றம்சாட்டினார்.

ADVERTISEMENT

ஆனால், காங்கிரஸைக் காட்டிலும் அம்பானிக்கும் அதானிக்கும், விஜயமல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட கார்பரேட் நிறுவனங்களுக்கும் மக்கள் பணத்தை வாரிக்கொட்டினார் மோடி. பணமதிப்பிழப்பு மூலம் நாட்டின் பொருளாதாரத்தை நாசம் செய்துவிட்டு, நேருதான் இந்தியாவை நாசப்படுத்திவிட்டதாக கூறிக்கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

ஊழலை ஒழிக்கப் போவதாக மார்தட்டிய மோடியும் அமித் ஷாவும் ஊழலை எப்படி ஒழித்தார்கள் தெரியுமா? காங்கிரஸ் கட்சியிலும் பிற கட்சிகளிலும் ஊழல் முடைநாற்றமெடுத்த பழம் பெருச்சாளிகளை மிரட்டியும் விலைகொடுத்து வாங்கியும் பாஜகவில் சேர்த்துக் கொண்டார்கள்.

ஒரே ஒரு எம்எல்ஏவை வைத்துக்கொண்டு கூட்டணி அரசு அமைத்தார்கள். ஒரு உறுப்பினர்கூட இல்லாத மாநிலத்திலும் சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி ஆட்சியையே தனதாக்கினார்கள். கட்சியே இல்லாத மாநிலத்தில்கூட இன்னொரு கட்சியின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி எதிர்க்கட்சி ஆனார்கள். ஆட்சி அமைப்பதற்காக 15 எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து குறுக்கு வழியில் ஆட்சி அமைத்தார்கள். சொந்தக் கட்சியைச் சேர்ந்த கோஷ்டிகளையே சமாளிக்க முடியாமல் துணை முதல்வர் பதவியை வாரிக்கொடுத்து சரிக்கட்டுவார்கள். அடுத்த கட்சியில் கோஷ்டி பூசல் இருப்பதாக குற்றம் சாட்டுவார்கள். காங்கிரஸ் கட்சி தலைவர் இல்லாத கட்சி என்பார்கள். தமிழ்நாட்டில் தனது கட்சிக்கு இரண்டு மாதங்களாக ஒரு தலைவரை அறிவிக்க முடியாமல் இருப்பார்கள். இதெல்லாம் இருக்கட்டும்…

பாஜகவின் பதவிவெறிக்கும், ஊழல் ஒழிப்புக்கும் சமீபத்திய சாட்சியாக மகாராஸ்டிராவும், ஹரியானாவும் மாறியிருக்கின்றன.

முதலில் ஹரியானாவை பார்க்கலாம்… அங்கு ஊழலை ஒழிக்க பாஜக கையாண்டிருக்கும் நடைமுறை ரொம்ப ஸ்பெஷல் ஆகும்.

1999ஆம் ஆண்டு பாஜக கூட்டணியில் இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா அந்த மாநில முதல்வரானார். அந்தக் காலகட்டத்தில் ஹரியானா மாநிலத்தில் 3 ஆயிரத்து 26 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 3 ஆயிரம் பேர் தகுதியில்லாத ஆசிரியர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டது. முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா தேர்வுக் கமிட்டியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சீவ் குமார்தான் தேர்வு பட்டியலை மாற்றிவிட்டதாக கூறினார். இந்த ஊழல் பூதாகரமான நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு, சிபிஐ விசாரிக்கும்படி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு சிபிஐ தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவருடைய மகன் அஜய் சவுதாலா உள்ளிட்ட 53 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்து, அவர்கள் திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இந்நிலையில்தான், ஹரியானாவில் நடைபெற்ற 2019 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 40 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. முந்தைய பேரவையில் 17 இடங்களை மட்டுமே பெற்றிருந்த காங்கிரஸ் 31 இடங்களிலும், இந்திய தேசிய லோக்தளத்திலிருந்து பிரிந்து புதிதாகத் தொடங்கப்பட்ட ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும் இந்திய தேசிய லோக்தளம் 1 இடத்திலும், சுயேச்சைகள் 8 இடங்களிலும் வெற்றிபெற்றனர்.

ஆட்சி அமைக்க 46 இடங்கள் வேண்டும் என்ற நிலையில் முதலில் சுயேச்சைகளை விலைக்கு வாங்கி அரசு அமைக்க பாஜக திட்டமிட்டது. காங்கிரஸோ, துஷ்யந்த் சவுதாலா கட்சி மற்றும் சில சுயேச்சைகள் ஆதரவுடன் அரசு அமைக்க திட்டமிட்டது. இந்நிலையில், சிறையில் இருக்கும் துஷ்யந்தின் அப்பா அஜய் சவுதாலாவுக்கும் தாத்தா ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கும் சலுகைகளை வழங்கும் ஒப்புதலுடன் துணை முதல்வர் பதவியும் என்று பேரத்தை முடித்தது பாஜக.

மகனின் பதவியேற்பை பார்க்க வசதியாக அஜய் சவுதாலாவுக்கு 10 நாட்கள் லீவு உடனே வழங்கப்பட்டது. மத்தியில் இருக்கும் கட்சியால்தான் இது சாதகம் என்பதாலும், பாஜக பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்லும் என்பதாலும்தான் துஷ்யந்த் பாஜகவுடன் கைகோர்த்தார். ஊழல் குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்த ஜெயலலிதாவையே குமாரசாமி என்ற நீதிபதியை நியமித்து ஒரே வார்த்தையில் விடுதலை என்று சொல்ல வைத்த அரசுதானே பாஜக அரசு? ஊழல் குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவிக்கும் சவுதாலாக்கள் இனி சிறையிலேயே இருக்க மாட்டார்கள். அடிக்கடி வெளியே வந்து அரசியலையும் நடத்துவார்கள். சிறையையே கூட ஐந்து நட்சத்திர வசதிகளோடு மாற்றுவார்கள். பாஜகவின் ஊழல் ஒழிப்புக்கும் பதவி ஆசைக்கும் இது ஒரு உதாரணம்.

அடுத்து மகாராஷ்டிராவுக்கு வரலாம். மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனாவுக்கும் கடுமையான மோதல் தொடங்கிவிட்டது. தொகுதிப் பங்கீடு பேச்சு நடக்கும்போதே சிவசேனா தனது தொகுதிகளை தன்னிச்சையாக அறிவித்தது. ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு வேண்டும் என்று அது கூறிவந்தது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே தேசியவாத காங்கிரஸும், காங்கிரஸும் கூட்டணியையும் தொகுதிகளையும் முடிவு செய்துவிட்டன. இந்நிலையில்தான், காங்கிரஸிலிருந்தும், தேசியவாத காங்கிரஸிலிருந்தும் முக்கிய தலைகள் என கருதப்பட்டவர்களை மிரட்டி தன் பக்கம் இழுத்தது பாஜக.

சரத்பவார் மீது விசாரணை என்று பயங்காட்டியது. அவரோ தைரியமிருந்தால் தன்னை கைதுசெய்யும்படி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கே சென்றார். அவரை ஒன்றும் செய்யமுடியாத பாஜக அரசு, அவருடைய செல்லப்பிள்ளையான பிரபுல் படேலை மிரட்டினார்கள். அவருக்கு எதிராகவும் எதுவும் ஆதாரம் பெறமுடியவில்லை.

தேர்தல் முடிவுகள் பாஜகவின் அட்டூழியத்துக்கு பதிலை அளிக்கும் வகையில் அமைந்தது. கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு 122 இடங்களில் வென்ற பாஜக இம்முறை 105 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. கடந்தமுறை தனித்து 63 இடங்களைப் பெற்ற சிவசேனா இந்தமுறை 56 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. ஆனாலும் இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்கப் போதுமான 145 இடங்களைத் தாண்டி 161 இடங்களைக் கைப்பற்றி இருந்தன.

அதேசமயம் காங்கிரஸ் கட்சி 44 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றியிருந்தன. சிவசேனாவை இரண்டு கட்சிகளும் சேர்த்தால் அரசு அமைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தனது அணியில் உள்ள சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் எல்லோரையும் சேர்த்தால்கூட பாஜகவுக்கு 134 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

எனவே, சிவசேனா எடுத்தவுடனேயே ஆட்சியில் இரண்டரை ஆண்டு பங்கு அமைச்சரவையில் சரிபாதி உறுப்பினர்கள் என்று முரண்டு பிடிக்கத் தொடங்கியது. இதை பாஜக ஏற்க மறுத்தது. இதையடுத்து மகாராஸ்டிராவில் இழுபறி நீடிக்கிறது. ஆனாலும், தனிப் பெருங்கட்சி என்ற வகையில் ஆட்சியமைக்கும் உரிமையை பாஜக கோரிவருகிறது.

கடந்தமுறையைப் போல மைனாரிட்டி அரசு அமைத்து காலம் தள்ளிவிடலாம் என்று பாஜக இந்த முறையும் எதிர்பார்க்கிறது. சிவசேனா இல்லாவிட்டாலும், தேசியவாத காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று காலந்தள்ளலாம் என்று பாஜக நினைக்கிறது.

ஆனால், சிவசேனா முதல்வர் பதவியிலும் அமைச்சரவையிலும் பாதி இடம் கொடுக்காவிட்டால் பாஜகவுக்கு ஆதரவில்லை என்று கூறுகிறது. மாற்றுத் திட்டம் தன்னிடம் இருப்பதாக சிவசேனா கூறிவருகிறது.

ஊழலில் சிக்கிய சவுதாலாக்களுக்கு சலுகை காட்டுவதாக உறுதியளித்து துஷ்யந்த் ஆதரவை ஹரியானாவில் பெற்றதைப் போல மகாராஸ்டிராவில் பாஜக ஒன்றும் செய்யமுடியாது. சிவசேனாவில் அப்படி யாரும் ஊழலில் சிக்கியிருக்கவில்லை என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

அவருடைய பேட்டிக்கு தகுந்தபடி காங்கிரஸும் சமிக்ஞை காட்டியுள்ளது. சிவசேனா உறுதியான திட்டத்துடன் வந்தால் ஆதரிப்போம் என்று பிரிதிவிராஜ் சவான் கூறியிருக்கிறார். அதேசமயம், தேசியவாத காங்கிரஸின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அஜித் பவார், “எங்கள் அணியில் 110 பேர் இருக்கிறோம். விவசாயிகள் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. அரசு அமையாத நிலையில் வலுவான எதிர்க்கட்சியாக நாங்கள் இருப்போம்” என்று கூறியிருக்கிறார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸை கலந்துகொண்டே எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியிருக்கிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT