ADVERTISEMENT

“சுயமரியாதை தான் முக்கியம்” - பதவியை ராஜினாமா செய்த பா.ஜ.க எம்.எல்.ஏ

02:40 PM Mar 19, 2024 | mathi23

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ADVERTISEMENT

அந்த வகையில், அ.தி.மு.க, பா.ஜ.க, உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில், கட்சி மீதி அதிருப்தி ஏற்பட்டும், மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்காமல் மறுக்கப்பட்டதாலும், தங்களுடைய கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில், முதல்வர் புபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 182 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், அதிக பெரும்பான்மையாக 156 இடங்களை கைப்பற்றி பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது. இதில் ஒரு முறை சுயேட்சையாகவும், இரண்டு முறை பா.ஜ.க சார்பில் வதோதரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ஜ.க எம்.எல்.ஏ கேதன் இனாம்தார், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து கேதன் இனாம்தார் கூறுகையில், “எனக்கு எந்தவித அழுத்தமும் தரவில்லை. நீண்ட காலமாக, சிறியவர்கள், முதியோர்கள் மற்றும் கட்சியில் நீண்டகாலமாக தொடர்புள்ளவர்களை கட்சி கவனிப்பதில்லை என்பதை உணர்ந்தேன். இது குறித்து நான் தலைமைக்கு தெரிவித்துள்ளேன். நான் 11 ஆண்டுகளுக்கு மேலாக சவ்லி தொகுதியை பிரதிநிதிப்படுத்தியுள்ளேன். பாஜகவின் தீவிர உறுப்பினரானதில் இருந்து, கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். ஆனால் 2020ல் நான் சொன்னது போல் சுயமரியாதையை விட பெரியது எதுவுமில்லை. இது என்னுடைய குரல் மட்டுமல்ல, ஒவ்வொரு கட்சித் தொண்டர்களின் குரல். மூத்த கட்சிக்காரர்களை புறக்கணிக்கக் கூடாது என்று நான் முன்பே கூறியிருக்கிறேன். நமது மக்களவைத் தேர்தல் வேட்பாளர் ரஞ்சன் பட் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்காக இரவு பகலாக உழைப்பேன். ஆனால் இந்த ராஜினாமா எனது ஆழ்மனதின் விளைவு” என்று கூறினார்.

கடந்த 2020ஆம் ஆண்டில், கேதன் இனாம்தார் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கட்சி மேலிடத்திற்கு அனுப்பியபோது, கட்சி அதை நிராகரித்துவிட்டது. இந்த நிலையில், மீண்டும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்ற கேதன் இனாம்தார், அதன் பின்னர் பா.ஜ.கவில் இணைந்து 2017 மற்றும் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT