gujarat mla horse trading video goes viral

Advertisment

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலக தலா ரூ.10 கோடியை பாஜக கொடுத்ததாக வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென கட்சி தாவியதால் இந்த தொகுதிகளில் தற்போது தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸிலிருந்து சமீபத்தில் விலகிய 5 எம்எல்ஏ-க்கள் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது குஜராத் காங்கிரஸ் குழு சார்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது.

அதில் லிம்ப்டி தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சோம்பாய் படேல், வேறொரு நபருடன், கட்சி தாவுவதற்கு பாஜக பணமளித்தது தொடர்பாக பேசுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவில் இந்தியில் பேசிக்கொண்டிருந்த எம்எல்ஏ சோம்பாய் படேல், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதற்காகத்தான் அவர்உள்பட 8 எம்எல்ஏக்களுக்கு பாஜக தலா ரூ.10 கோடி கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முந்தைய நாள் வெளியான இந்த வீடியோ குஜராத் மாநில அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டை பாஜக முற்றிலுமாக மறுத்துள்ளதோடு, மக்களை தவறானவழியில் திசைதிருப்பக் காங்கிரஸ் முயல்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளது.