Supreme Court question on Bilkis Bano case

Advertisment

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரின் மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த வழக்கில் கைதாகி நீதிமன்றத்தினால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த 11 குற்றவாளிகளை குஜராத் அரசு சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்தது.

வழக்கு தொடர்பாக குஜராத் அரசு அமைத்த சிறப்புக் குழுவின் பரிந்துரையின் படி நன்னடத்தை அடிப்படையில் குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை செய்யப்படுவதாகக் கூறி குஜராத் அரசாங்கம் அவர்களை ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது. குற்றவாளிகளின் விடுதலைக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். அதிலும் குறிப்பாக, அவர்கள் விடுதலையின் போது சிறை வாசலிலேயே மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தது சர்ச்சையாகி மேலும் பல விவாதங்களைக் கிளப்பியது.

இதனையடுத்து, இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் தண்டனைக்காலம் முடிவதற்குள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு இன்று உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, 11 பேரின் விடுதலைக்கான அடிப்படை காரணங்களைக் கேட்ட உச்சநீதிமன்றம், அதற்கான உரிய ஆவணங்களைத்தாக்கல் செய்யுமாறு குஜராத் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

Advertisment

இந்த நிலையில், நீதிபதி கே.என்.ஜோசப் -நாகரத்தினா அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘11 பேர் விடுதலை ஆவணங்களைத்தாக்கல் செய்ய குஜராத் மற்றும் மத்திய அரசுகள் மறுப்பு தெரிவித்தது. மேலும் இது தொடர்பாக மறுசீராய்வு மனு ஒன்றையும் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதாக அரசு தரப்பு’ தெரிவித்தது. இது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், “குற்றவாளிகளும் வழக்கின் தீர்ப்பை தாமதப்படுத்த முயற்சி செய்கின்றனர். 11 பேர் விடுதலை குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டை மாநில அரசு அப்படியே ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. சுயமாக சிந்தித்து முடிவு எடுத்திருக்கலாம். கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கூட்டுப் படுகொலை நிகழ்வுகளை ஒரு கொலை சம்பவத்துடன் ஒப்பிடக்கூடாது. இன்று பில்கிஸ் பானுவிற்கு நடந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட காரணத்தை அரசு கூறாவிட்டால் உச்சநீதிமன்றமே ஒரு முடிவுக்கு வர நேரிடும்” எனக் கடுமையாக எச்சரித்துள்ளனர். பின்பு இந்த வழக்கை மே 2 ஆம்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.