Skip to main content

தெறிக்கவிடும் 30 பேர்! திணறும் எடப்பாடி!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

 

தமிழகத்தில் காலியாகும் ஆறு ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 26-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 6ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 13. 

 

ops-eps



பொதுவாக,  தேர்தல் காலக்கட்டங்களில் வேட்பாளர்களை அறிவிப்பதில் அதிமுக முந்திக்கொள்ளும். ஆனால் , ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வேட்பாளர்கள் தேர்வில் அதிமுக பின்தங்க, திமுக முந்திக்கொள்கிறது. அந்த வகையில்,  திமுக சார்பில் தேர்வாக இருக்கும் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகிய 3 வேட்பாளர்களின் பெயரை அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 
 

ஆனால்,  அதிமுக சார்பில் தேர்வாகும் எம்பிக்களின் பெயர்கள்  அறிவிப்பில் இழுபறி நீடிக்கிறது. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுக முகாமில் பலத்த அக்கப்போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
 

 சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 3 எம்பிக்களை அதிமுக எளிதாகப் பெற  முடியும். ஆனால் , அந்த 3 சீட்டுகளுக்காக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் எம்பிக்கள், மாவட்டச் செயலளார்கள், அணித் தலைவர்கள் என 30 பேர் சீட் கேட்டு எடப்பாடியிடம் மல்லுக்கட்டுகிறார்கள்.


 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு லாபியில் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். சீட்டு கேட்கும் பலருக்கு மாவட்ட எம்எல்ஏக்களின் ஆதரவும் இருக்கிறது. அதனால்,  சீட் கேட்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு லாபியை பயன்படுத்துவதும், எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக நெருக்கடி தருவதும் எடப்பாடியை கடுமையாக பாதித்திருக்கிறது.
 

இப்படிப்பட்ட நெருக்கடிகளால்,  3 வேட்பாளர்களை தேர்வு செய்வதில் திணறிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி. இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உள்பட மூத்த தலைவர்களுடன் இதுவரை இரண்டு கட்ட ஆலோசனை நடத்தியுள்ளார். இரண்டு முறை ஆலோசனை நடத்தியும் இதுவரை எந்த முடிவும் எடுக்கமுடியவில்லை. 
 

சீட் கேட்டு நெருக்கடி கொடுக்கும் அதிமுகவினர், ராஜ்யசபா சீட் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் கட்சிக்குள் கலகத்தை உருவாக்குவோம் என்கிற தகவல்களை  கட்சிக்குள்ளேயே பரப்பி வருகிறார்கள். ராஜ்யசபா தேர்தலால்  அதிமுகவில் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு அதிகரித்தப்படியிருக்கிறது.