Skip to main content

“எனக்குள்ளும் வேதனை இருக்கிறது” - வெளிப்படையாக பேசிய அமீர்

Published on 06/05/2024 | Edited on 06/05/2024
ameer speech about jaffer sadiq case and his latest issue in Uyir Thamizhukku press meet

இயக்குநர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை ஆதம்பாவா இயக்கி தயாரித்தும் உள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படம் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அமீர், கரு.பழனியப்பன், ஆதம்பாவா, பொண்வண்ணண் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். 

அப்போது அமீர் பேசுகையில், “என்னுடைய திரை பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, அரசியல் பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து நான் சந்தித்திராத ஒரு புதிய மேடை இது. இந்தச் சூழலில் நான் யார் என யோசித்தால், ராமாயணத்தில் வரும் சீதையும் நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போல தான். அவர் அக்னியில் மிதந்து தன்னுடைய கற்பை நிரூபித்தார். அவராவது ஒரு முறை நிரூபித்தார்.. நான் வாரா வாரம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன். மாய வலை பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த போதுதான் பருத்திவீரன் பிரச்சனை துவங்கியது. அதன் பிறகு இப்போது வேறு ஒரு பிரச்சனையுடன் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. என்னைச் சுற்றி என்ன நடக்கிறது ? ஒன்றுமே புரியவில்லை. கோகுலம் ஸ்டுடியோவில் இறைவன் மிக பெரியவன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இன்னும் எட்டு நாட்கள் படப்பிடிப்பிற்காக ஒரு செட் ஒன்றை போட்டு ஒரு நாள் படப்பிடிப்பு நடத்தினோம். மறுநாள் மாலையில் இருந்து இந்தப் பிரச்சனை துவங்கியது. 

தன்னிலை விளக்கமாக ஒரு அறிக்கை ஒன்று கொடுக்கலாமா எனக் கரு.பழனியப்பனிடம் கேட்டேன்... அப்படி ஒரு அறிக்கை கொடுத்த பிறகு எங்கிருந்து அதற்கு எதிர்ப்பு வருகிறது எனப் பார்த்தால் கடந்த 15 வருடங்களில் என்னை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத ஆட்கள் எல்லாம் வெளியே வர ஆரம்பிக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. என்னிடம் நேரில் தொடர்பு கொண்டு பேசும் அளவிற்கு அவர்களுடன் நட்பு இருக்கிறது. ஆனால் இன்று ஊடகங்கள் பெருகிவிட்ட நிலையில், சிலர் வயிற்றுப் பசிக்காக ஏதேதோ செய்ய வேண்டி இருக்கிறது. இறைவன் மிக பெரியவன் தயாரிப்பாளருடன் எனக்கு தொடர்பு இருக்கிறதா என்றால், ஆமாம் இருக்கிறது என்று சொல்வேன். ஆனால் அவர் மீது சாற்றப்பட்ட குற்றத்துடன் எனக்கு தொடர்பு இருக்கிறதா என்று கேட்டால் இல்லைடா வெண்ணைகளா என்று சொல்வேன். அந்தத் தைரியமும் திமிரும் எப்போதும் என்னிடம் இருந்து கொண்டே இருக்கிறது. சந்தேக நிழல் என் மீது விழுவதில் தவறு இல்லை.. ஆனால் நீங்களாகவே தீர்ப்பு எழுதுகிறீர்களே, அதுதான் ரொம்ப ஆபத்தானது. உங்களுக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது ?

2007ல் பருத்திவீரன் முடித்த சமயத்தில் கமல் ரஜினி சார் ஆகியோர் என்னுடன் படம் பண்ண வேண்டும் என்றார்கள். ஆனால் ஹீரோக்களுடன் பயணிக்காமல் நான் எனக்காக ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து எனக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பணம் சம்பாதிப்பதா என் நோக்கம்? ஜாபர் ஒருத்தன்தான் தமிழ்நாட்டிலேயே பணக்காரனா? ஜாபர் வந்த பிறகுதான் இவரது வாழ்க்கை மாறிவிட்டது என்கிறார்கள். 2014ல் தான் அவர் வந்தார். ஆனால் விருமாண்டி ரிலீஸ் ஆன சமயத்திலேயே கொடைக்கானலில் ராம் படப்பிடிப்பு நடந்தபோது மதுரைக்கு இரண்டு லட்சம் செலவு செய்து படம் பார்க்க வந்தவன் நான்.. என்னைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? உதவி இயக்குநர்களாக நானும் பாலாவும் சினிமாவுக்கு வந்தபோது கஷ்டப்பட்டவர்கள் என்பதால் ஏதோ சென்னைக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் போல நினைத்துக் கொள்கிறார்கள். சினிமாவிற்கு வந்ததால் வீட்டில் காசு வாங்காமல் சுயமரியாதையுடன் வந்தவர்கள் நாங்கள்.

ஒரு குற்றவாளி, அவருடன் உங்களுக்கு என்ன தொடர்பு இருக்கிறது என்று கேட்டால் பதில் சொல்ல போகிறோம். ஆனால் உங்களுக்கு இந்த வருமானம் எப்படி வந்தது எனக் கேட்பதற்கு இவர்கள் என்ன வருமான வரித்துறையினரா? காண்ட்ராக்டர் ஆக இருக்கும் என்னுடைய அண்ணன் ஒரு சொத்து வாங்கினாலே இந்தப் பணம் எப்படி வந்தது என நான் அவரிடம் கேட்க முடியாது. நான் இறை நம்பிக்கை கொண்டவன். கரு.பழனியப்பன் ஒரு பெரியாரிஸ்ட். ஜனநாதன் ஒரு கம்யூனிஸ்ட். மூன்று பேரும் ஒன்றாக சுற்றிய காலகட்டத்தில் கூட நீ எப்படி பணம் சம்பாதிக்கிறாய் என ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டதில்லை. பணம் சம்பாதிக்கவா இந்தத் திரையுலகத்திற்கு வந்தேன்? அதற்காக நான் வரவில்லை. என் வாழ்க்கையை என் விருப்பம் போல வாழ வேண்டும் என இந்த நிமிடம் வரைக்கும் நான் ஆசைப்படுகிறேன். 

கடந்த பத்து நாட்களாக ஒவ்வொரு விசாரணைக்கும் சென்று கொண்டு இருக்கிறேன். இடையில் ஷாப்பிங் சென்று எனக்கு பிடித்த ஆடைகளை நான் வாங்குகிறேன். வேறு எந்தப் பழக்கங்களும் எனக்கு இல்லை. இன்னொருவருடைய பணத்தை நம்பி, அதுவும் ஒரு குற்றப் பின்னணி கொண்டவரின் பணத்தை நம்பி வாழ வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்படவில்லை. அப்படி ஒரு வாழ்க்கையை வாழ நான் விரும்பவும் மாட்டேன். இதை உங்களிடம் கூறி நான் நிரபராதி, என்னை நம்புங்கள் என்பதற்காகவும் இதைக் கூறவில்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று அவநம்பிக்கையுடன் நினைக்காமல், எனக்கு ஏன் இது நடந்தது என்று இறை நம்பிக்கையுடன் யோசிக்க கூடியவன் நான். இந்த இடத்தில் இருந்து இன்னும் என்னை சரி செய்து கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதனால் அதை நோக்கித்தான் நான் பயணிக்கிறேன். என்னைப் பற்றி பல தகவல்கள் கிடைத்தது என யூடியூப் சேனலில் பலவாறாக பேசிய ஒரு நபருக்கு, அவரை தேனியில் கைது செய்ய வரபபோகிறார்கள் என்கிற தகவல் மட்டும் எப்படி தெரியாமல் போனது? அந்த நபர் சொல்லும் போய் செய்தியை தினசரி 2 லட்சம் பேர் பார்க்கிறார்கள். பல பேர் கமெண்ட்டுகளில் அமீரை எப்போது கைது செய்யப் போகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். 

சிறை என்ன எனக்கு புதிதா? நான் அப்போதும் தயாராக இருந்தேன். இப்போதும் தயாராக இருக்கிறேன். ஆனால் நான் வெறுக்கின்ற ஒரு குற்றத்தில் என்னை தொடர்பு படுத்துவதைத்தான் குற்ற உணர்ச்சியுடன் உணர்கிறேன். எனக்குள்ளும் வேதனை இருக்கிறது. சமூகத்தை சீரழிப்பது போதை. அதை நான் வெறுக்கிறேன். என்னுடைய உதவியாளர்கள் சிகரெட் பிடித்தாலே என்னுடைய அலுவலகத்திற்குள் நுழைய விட மாட்டேன். கரு.பழனியப்பனும் ஜனநாதனும் என் முன்பாக சிகரெட் பிடிக்காமல் கீழே சென்று பிடித்துவிட்டு வருவார்கள். அப்படி நான் வெறுக்கின்ற ஒரு விஷயத்தில் என்னை தொடர்புப்படுத்தும் போது, அது என்னை மட்டும் அல்ல அதனால் என்னுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது. என்னுடைய பிள்ளைகள் வேலைக்கு போகும் இடத்திலும் கல்லூரி செல்லும் இடத்தில் பாதிக்கிறது. என்னை சந்தேகப்படாதீர்கள் என்று நான் சொல்லவில்லை. விசாரியுங்கள். நன்றாக கேள்வி கேளுங்கள். ஆனால் நீங்களாக தீர்ப்பு எழுதாதீர்கள். கடுமையான விசாரணைகளை சந்தித்து விட்டுத்தான் இங்கே வந்து நிற்கிறேன். 

இத்தனை ஆண்டு வாழ்க்கையில் நான் சந்தித்திராத ஒரு புது அனுபவம். விசாரணை செய்த அதிகாரிகளை பொறுத்த வரை அவர்கள் என்னை கண்ணியமாகத்தான் நடத்தினார்கள். என் மனது வலிக்கின்ற மாதிரியான கேள்விகளைக் கேட்டார்கள் என்பது உண்மைதான். ஓரிடத்தில் கலங்கிப் போய் நின்றேன் என்பதும் உண்மை. ஆனால் அவர்களுக்கு என்னை காயப்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் கிடையாது. அது அவர்களுடைய வழக்கமான கடமை. பின் எப்படி குற்றவாளியைக் கண்டுபிடிப்பது ? இந்த வழக்கு சம்பந்தப்பட்ட விவரங்கள் அதிகாரிகளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது? வேறு யார் சொன்னாலும் நம்பாதீர்கள். இந்த வழக்கு குறித்த விவரங்களை நான் சேகரித்து கொண்டிருந்த சமயத்தில் ரமலான் நோன்பிற்காக என் குடும்பத்தினர் ஊருக்கு சென்று விட்டார்கள். ஒரு நாள் காலையில் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது விழித்து பார்த்தால் திடீரென அமலாக்கத் துறையினர் என் முன்னாடி துப்பாக்கியை நீட்டிக் கொண்டு நின்றார்கள். அதன் பிறகு என்னுடைய அலுவலகத்திற்கு வந்தார்கள். அதை முடித்துவிட்டு தான் ரமலான் நோன்புக்காக மதுரைக்கு சென்று வந்தேன்.

எனக்கு முதலில் வந்த சம்மனைக் கூட எனது வழக்கறிஞர் மூலமாக நான் சொன்ன பிறகுதான் வெளியே தெரிந்தது. ஆனால் தங்களுக்கு ஏதோ டெல்லி வட்டாரத்தில் இருந்த சோர்ஸ் மூலமாக தகவல் வந்தது என்பது போல பலர் பேசினார்கள். இப்போது சொல்கிறேன், எனக்கு இன்னொரு சம்மன் கூட வந்திருக்கிறது. புலனாய்வு புலிகள் என்று சொல்லிக் கொள்கிற பலருக்கு இது இன்னும் தெரியாது. இந்தச் சம்மனுக்கும் நேரில் சென்று பத்தரை மணி நேரம் விசாரணையை முடித்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன். அதிகாரிகள் அவர்களது கடமையை செய்கிறார்கள். நான் அதற்கு முதல் நாளில் இருந்தே ஒத்துழைக்கிறேன். இந்த வழக்கை முடித்து விட்டு தான் எங்கேயும் வெளியே செல்வேன்.. நான் கூறும் கருத்துக்களை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை.. அதனால் என்னை குற்றவாளி ஆக்குகிறீர்கள். அதனாலேயே ஏன் நான் குற்றவாளி ஆகிவிட முடியுமா ?இந்த காலகட்டம் உண்மையிலேயே கடுமையான காலகட்டம் தான். என்னை சுற்றி இருந்த பல நண்பர்கள், உறவினர்கள் ரொம்ப தூரமாக சென்று விட்டனர். என்னிடம் இருந்த 2000 தொலைபேசி எண்களில் 1950 பேரிடம் இருந்து அழைப்பு வருவதே இல்லை.

ஒரு மரத்தின் அருகில் வெடி சத்தம் கேட்டதும் பறவைகள் அனைத்தும் சிதறி ஓடும். அதன்பிறகு வெகு சில பறவைகள் மட்டுமே மீண்டும் திரும்பி வரும். அதுபோலத்தான் என் வாழ்க்கையிலும் சில நண்பர்கள் மட்டுமே தேடி வந்தார்கள். ஆனால் இன்னும் பலர் சந்தேகப்பட்டு கொண்டு தூரமாகவே நிற்கிறார்கள். அவர்களை எல்லாம் தயவுசெய்து இங்கே வந்துவிடாதீர்கள். அங்கேயும் நின்றுவிடுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். என் வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் இந்த வழக்கு, பிரச்சனைகள் எல்லாம் இதுவும் கடந்து போகும் என்று தான் நினைக்கிறேன். இந்தப் படம் பற்றி சொன்னால் பெரிய கலை நயத்துடன் காவியமாக இருக்கும் என்று எதிர்பார்த்து எல்லாம் வர வேண்டாம். ஆனால் உங்களை ஜாலியாக சிரிக்க வைக்கும் என்பது மட்டும் உறுதி. ஒரு சிக்கலான காலகட்டத்தில் இந்தத் திரைப்படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் ஆதம் பாபாவுக்கு நன்றி” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்