Skip to main content

நேர்த்தியாக ஆடிய நெதர்லாந்து; சிதறடிக்கப்பட்ட சவுத் ஆப்பிரிக்கா

Published on 17/10/2023 | Edited on 18/10/2023

 

 Nicely played Netherlands; Dispersed South Africa

 

உலகக் கோப்பையின் 15வது லீக் ஆட்டம் சவுத் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே தரம்சாலா மைதானத்தில் இன்று தொடங்கியது. மழையின் காரணமாக ஆட்டம் 43 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

 

பின்னர் தொடங்கிய ஆட்டத்தில், டாஸை வென்ற சவுத் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்குத் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் களம் இறங்கினர். விக்ரம்ஜித் சிங் இரண்டு ரன்களிலும் மேக்ஸ் 18 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து அந்த அணியின் மிடில் ஆர்டரில் களம் இறங்கிய ஆக்கர் மேன், லீடே, சைப்ரண்ட் ஆகியோர் முறையே 13, 2, மற்றும் 19 ரன்களில் அவுட் ஆக நெதர்லாந்து 82 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

 

நெதர்லாந்து அணியில், கேப்டன் எட்வர்ட்ஸ் மட்டும் அரைசதம் கடந்து 72 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடங்கும். அவருடன் இணைந்து டெயிலெண்டர்களான தேஜா எடுத்த 20 ரன்களும், வான்டர் மெர்வே அதிரடியாய் சேர்த்த 29 ரன்களும் சேர்த்து, நெதர்லாந்து அணி 43 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எடுத்தது. சவுத் ஆப்பிரிக்கா தரப்பில் சிறப்பாகப் பந்து வீசிய இங்கிடி, ஜான்சன், ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஜெரால்ட், மஹராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

 

பின்னர் 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான டி காக் 16 மற்றும் பவுமா 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க அடுத்து வந்த டுஸைன் 4 ரன்களிலும் மார்க்ரம் 1 ரன்னிலும் வெளியேறினர். சவுத் ஆப்பிரிக்கா அணி 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அடுத்து வந்த கிளாசன் மற்றும் மில்லர் ஓரளவு நிலைத்து ஆட ஸ்கோர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த கிளாசன் 28 ரன்களில் ஆட்டம் இழக்க, அடுத்து வந்த ஜான்சனும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் மில்லருடன் ஜெரால்ட் இணைந்தார். ஜெரால்டும் 22 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த டெயிலெண்டர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இறுதியில் சவுத் ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. நெதர்லாந்து அணியில் பீக் 3 விக்கெட்டுகளும், வான்டர் மெர்வே, மீகெரென், லீடே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஆக்கர்மென் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

 

இதன் மூலம் வலிமை வாய்ந்த சவுத் ஆப்பிரிக்கா அணியை, அனுபவம் குறைந்த நெதர்லாந்து அணி வீழ்த்தி, வெற்றி வாகை சூடி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி, சவுத் ஆப்பிரிக்கா அணியை முதல் முறையாக ஒரு நாள் போட்டிகளில் வீழ்த்தியுள்ளது. இதுவரை இரு அணிகளும் 7 முறை மோதிக்கொண்ட நிலையில், 6 முறை சவுத் ஆப்பிரிக்கா அணியே வெற்றி பெற்றுள்ளது.

 

நெதர்லாந்து அணியின் கேப்டன் எட்வர்ட்ஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சவுத் ஆப்பிரிக்கா அணி தோல்வியைத் தழுவ, நெதர்லாந்து அணியின் வான்டர் மெர்வேவும் ஒரு முக்கிய காரணமாகத் திகழ்ந்தார். நெதர்லாந்து அணிக்கு விளையாடும் இவர், முன்பு சவுத் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அனுபவம் இவருக்கு பவுலிங் மற்றும் பேட்டிங்கில் கை கொடுக்க, ஐபிஎல் அனுபவமும் இவருக்கு கூடுதல் பலமாக அமைந்தது.

 


 வெ. அருண்குமார்