Skip to main content

''எதற்கு இத்தனை ஆணையங்கள்...''-ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி!

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

 '' Why so many commissions ... '' - Supreme Court question in the case related to the Arumugasami Commission!

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாகக் கூறி, அது சம்பந்தமாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து கடந்த 2017ம் ஆண்டு அதிமுக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனைத்தொடர்ந்து ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து 11 முறை  நீட்டிக்கப்பட்டது. ஆணையத்தை முடிக்கக்கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கில்கூட 90 சதவீத விசாரணையை முடிந்துவிட்டதாகச்  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த விசாரணை ஆணையத்தில் பல்வேறு தரப்பினர் நேரடியாக ஆஜராகி விளக்கங்கள் கொடுத்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரியிருந்தது. இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரிய அப்பல்லோ மருத்துவமனையின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. அதில் அப்பல்லோ தரப்பில், ஆறுமுகசாமி ஆணையம் எங்களைத் தேவையில்லாமல் இழுத்தடிக்கிறது. ஆறுமுகசாமி ஆணையம் ஆதாரங்கள், ஆவணங்களை சேகரிக்கும் குழுவே தவிர நிபுணர் குழு அல்ல. அந்த ஆணையத்தில் ஒரு வல்லுநர்கள், நிபுணர்கள் கூட இடம்பெறவில்லை. ஒரு மருத்துவர் இல்லாத இடத்தில் எங்கள் தரப்பு மருத்துவர் என்ன தகவல்களைச் சொல்ல முடியும் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

 

 '' Why so many commissions ... '' - Supreme Court question in the case related to the Arumugasami Commission!

 

தமிழக அரசு சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான மக்களுக்குச் சொல்வது மிகவும் முக்கியம். ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை, மருந்துகள் உள்ளிட்டவைகளைப் பற்றி அறிந்துகொள்ளும் வேலையை ஆணையம் செய்கிறது. அப்பல்லோ மருத்துவமனை நல்ல மருத்துவமனைதான் ஆனால் ஒரு அரசால் உருவாக்கப்பட்ட ஆணையத்தின் மீது இப்படியான அவதூறுகளைச் சொல்வது ஏற்கத்தகுந்தது இல்லை. அவர்கள் சொல்வதைப்போல் வேண்டுமென்றால் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நிபுணர்களைச் சேர்த்து விரிவுபடுத்த அரசு தயாராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

 

இந்த வழக்கில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் என்ன மாதிரியான விசாரணை முறைகளை கடைப்பிடிக்கிறது எனக் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், பெரும்பாலான ஆணையங்களின் விசாரணை முடிவுகள் எதுவுமே தெரியாமல்தான் இருந்துள்ளது. முடிவுகள் தெரியாத நிலையில் எதற்கு இத்தனை ஆணையங்களை அமைக்கிறீர்கள். ஆணையங்களின் முடிவு மக்களின் பார்வைக்கு வைக்கப்படவில்லை என்று கருத்து தெரிவித்து, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 

 

 

 

சார்ந்த செய்திகள்