Skip to main content

மாணவர்களுக்கு மனநல ஆலோசனை; தமிழக அரசு ஏற்பாடு!

Published on 06/05/2024 | Edited on 06/05/2024
TN govt arrangement for Mental health counseling for students

தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (06.05.2024) காலை 09.30 மணிக்கு வெளியானது. தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து வருகின்றனர். அதே சமயம் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாணவ - மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏதுவாக பள்ளிகளில் பதிவு செய்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சேவையினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று (06.05.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் தி.சி. செல்வ விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக பள்ளிக் கல்வித் துறை மூலம் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்களில் தேர்ச்சி பெறாத 51 ஆயிரம் 919 மாணவர்கள் (32 ஆயிரத்து164 ஆண்கள் மற்றும் 19 ஆயிரத்து 755 பெண்கள்) எனப் பெறப்பட்ட பட்டியலிட்ட மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்படவுள்ளது. 

TN govt arrangement for Mental health counseling for students

இச்சேவையானது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் 104 என்ற தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் 14416 என்ற நட்புடன் உங்களோடு மனநல சேவை மையம் என்ற சுகாதாரத் துறை மூலம் 30 இருக்கைகள் கொண்ட 100 மன நல ஆலோசகர்களைக் கொண்டு ஆலோசனை வழங்கப்படும். 30 மனநல ஆலோசகர்கள் 3 சுழற்சி முறையில் செயல்படுவர். 104 தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் 10 இருக்கைகளுடன் டி.எம்.எஸ் வளாகம் 30 மன நல ஆலோசகர்களைக் கொண்டும். 14416 நட்புடன் உங்களோடு மனநல சேவை மையமானது 10 இருக்கைகளுடன் மனநல ஆலோசகர்கள், 4 மருத்துவ உளவியல் ஆலோசகர்கள் மற்றும் 1 மன நல மருத்துவரைக் கொண்டு செயல்படுகிறது. 14416 நட்புடன் உங்களோடு மனநல இரண்டாம் கட்ட சேவை மையமானது அரசு மன நல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், சென்னையில் 10 இருக்கைகளுடன் 30 மனநல ஆலோசகர்கள், 3 மருத்துவ உளவியல் ஆலோசகர்கள், மற்றும் 1 மன நல மருத்துவரைக் கொண்டு செயல்படுகிறது.

மேலும் அதிக மன அழுத்தம் உள்ளவர்களாக அடையாளம் காணப்படும் மாணவர்களை அவர்களின் மன நலம் கருதி தொடர் அழைப்புகள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது. அவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபெறுவதற்காக மாவட்ட மனநல திட்டத்தின் கீழ் மன நல உளவியலாளர்கள், மன நல மருத்துவர் சமூக ஆர்வலர்கள் கொண்ட குழுக்கள் மூலம் முன்னுரிமை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்திலிருந்து விடுபெற்று நல்வாழ்வு அமைந்திட ஆலோசனை வழங்கப்படுகிறது. மனநல ஆலோசனைகளுக்கு மருத்துவ உதவி எண் 104 மற்றும் நட்புடன் உங்களோடு மனநல சேவை எண் 14416 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்தப் பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான உடனடி மறுதேர்வு தொடர்பான அறிவிப்பு நாளை (07.05.2024) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்