Skip to main content

ரவுடி ஃபங்க் பாபு படுகொலை... பழிக்குப் பழியா? போலீஸ் விசாரணை!

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

Thiruvannamalai babu police investigation


திருவண்ணாமலை நகரம், பழைய பைபாஸ் சாலையில் டிசம்பர் 3ஆம் தேதி காலை 11.30 மணியளவில், சுகஸ்தலா மருத்துவமனை எதிரில் உள்ள கும்பகோணம் டீ கடையில், டீ குடிக்க வந்த ரியல் எஸ்டேட் அதிபரும், கொலைக் குற்றவாளியுமான ஃபங்க் பாபுவை, ஒரு இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, தயாராகயிருந்த ஒரு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியுள்ளார்.


கழுத்தில் குறிவைத்து வெட்டப்பட்ட ஃபங்க் பாபு, சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். பாபுவை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தவர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த், தனி டீம்கள் அமைத்து குற்றவாளிகளைப் பிடிக்க உத்தரவிட்டார்.


இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, வெட்டியவர் ஒருவர், அவர் 3 இளைஞர்களோடு இருசக்கர வாகனத்தில் தப்பியுள்ளார். அவர்களைப் பிடித்தால் மட்டுமே எதனால் இந்தக் கொலை நடைபெற்றது எனத் தெரியவரும் என்றார்கள்.


இந்தக் கொலை சரியாக ஸ்கெட்ச் போடப்பட்டு செய்து முடிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் தன் நண்பருடன் பாபு டீ கடைக்கு வர, பின்னால் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த கொலைகாரர், எந்தவிதப் பதட்டமும் இல்லாமல் சென்று, கடை வாசலில் வைத்து, தனி ஒருவனாக வெட்டியுள்ளார், உயிர் போகவேண்டும் என்றே கழுத்தில் குறிவைத்து வெட்டியதாகத் தெரிகிறது. வெட்டியவரோ அவரது நண்பர்களோ யாரும் முகத்தில் எந்த மாஸ்க்கும் போடவில்லை எனக் கூறப்படுகிறது. பாபுவின் நண்பர் வெட்டியவரைப் பிடிக்க முயல, அவர் அங்கிருந்து தப்பி ஒரு இருசக்கர வாகனத்தில் தயாராகயிருந்த தன் நண்பர்கள் மூன்று பேருடன் தப்பியது அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.


கடந்த 2017 பிப்ரவரி 12ஆம் தேதி காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருமஞ்சனகோபுரம் அருகே அ.தி.மு.க பிரமுகரும், முன்னாள் அ.தி.மு.க ந.செவும், மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருந்த கனகராஜை, அவரது நண்பர்களான ஃபங்க் பாபு, ராஜா, சரவணன் என 3 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். கொலை செய்துவிட்டு அங்கிருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள திருவண்ணாமலை நகர காவல்நிலையத்தில் சரணடைந்தார்கள்.


கனகராஜ், ஃபங்க் பாபு இருவரும் நீண்ட கால நண்பர்கள், பாபு தி.மு.க.வில் தொழிலாளர் அணியில் பதவியில் இருந்தார். இருவரும் வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும் தொழில் ரீதியாக பார்ட்னராக இருந்தனர். ரியல் எஸ்டேட் தொழிலில் இருவருக்கும் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் கனகராஜை, பாபுவும் அவரது நண்பர்களும் இணைந்து கொடூரமாகக் கொலை செய்தனர். அந்தக் கொலை வழக்கு, திருவண்ணாமலை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் பாபுவுக்கு ஆதரவாக, வடமாவட்டத்தில் பிரபலமான வழக்கறிஞரான முன்னாள் எம்.பி ஒருவர் ஆஜரானார்.

 

cnc

 

இந்தக் கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பாபு, பல கட்டப் பஞ்சாயத்துகள், ரியல் எஸ்டேட் தகராறுகள், மிரட்டி இடம் வாங்குவது, அடிதடி என நகரை மிரட்டிக்கொண்டு இருந்தார். அதில் பாதிக்கப்பட்ட யாராவது கொலை செய்தார்களா அல்லது பாபுவால் கொலை செய்யப்பட்ட கனகராஜ் தரப்பைச் சார்ந்தவர்கள் கொலை செய்தார்களா என விசாரணை நடத்திவருகிறது காவல்துறை.
 

பட்டப் பகலில் ஒருவர், மக்கள் கண் முன்னால் கொலை செய்யப்பட்டது நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்