Skip to main content

வயிற்றிலும், சோற்றிலும் கை வைத்து விட்டு முன்னேற்றம் பற்றி பேசுகிறார்கள்!  தமிமுன் அன்சாரி கண்டன பேச்சு!

Published on 29/01/2019 | Edited on 29/01/2019
THAMIMUN ANSARI


 

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில், ஹைட்ரோ கார்பன் எடுப்பு திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் இரவு நேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி.
 

அப்போது அவர்கள் முன் பேசிய தமிமுன் அன்சாரி, 
 

''தங்கள் மண்ணில் மீத்தேன் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று நியுயார்க் நகர மேயர் அறிவித்தார். அவருக்கு தன் மக்களின் மீது கரிசனம் இருந்தது. இது அமெரிக்கர்களின்  நிலைபாடு.

 
ஆனால் இங்கே நமது மத்திய அரசும், பிரதமரும் நமது தஞ்சை சமவெளி மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி கவலைப்படவில்லை. தென்னிந்தியாவுக்கு சோறு போடும் டெல்டா மாவட்ட மண்ணை சூறையாட துடிக்கிறார்கள்.
 

 நெடுவாசல், மன்னார்குடி, கும்பகோணம், மயிலாடுதுறை என அவர்கள் முகம் காட்டிய போதெல்லாம் போராட்டங்கள் மூலம் மக்கள் அதை முறியடித்தார்கள்.
 

 இப்போது டெல்டா மாவட்டங்களின் 40% விவசாய நிலத்தை மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுப்புக்காக அழிக்க நினைக்கிறார்கள்.
 

THAMIMUN ANSARI


விவசாய நிலம் அழிந்தால், நெல் உற்பத்தி குறையும். உணவு தட்டுப்பாடு அதிகரிக்கும். உணவுப் பொருட்களின் விலைவாசி உயரும். பசி, பட்டினி பெருகும். சமூகவியல் சிக்கல்கள் அதிகரிக்கும்.
 

 இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்று ஏமாற்றுகிறார்கள். வயிற்றிலும், சோற்றிலும் கை வைத்து விட்டு முன்னேற்றம் பற்றி பேசுகிறார்கள்.
 

திருக்காரவாசல், தலைஞாயிறு, கச்சனம், திருக்குவளை, கட்டிமேடு, கரியாப்பட்டினம் என பல விவசாய கிராமங்களை பாழ்படுத்த மத்திய அரசு, வேதாந்தா நிறுவனத்தோடு மீத்தேன் எடுக்க போட்டுள்ள ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். இத்திட்டங்கள் எந்த வடிவில் வந்தாலும் எதிர்ப்போம்.
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சுதந்திர தின உரையின்போது, விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்திற்கும் நிலத்தை அளிக்க மாட்டோம் என சூளுரைத்தார். அந்த வழியில் தமிழக அமைச்சரவை இவ்விஷயத்தில் கொள்கை முடிவெடுக்க வேண்டும்.

 

THAMIMUN ANSARI


எங்கள் மண்ணையும், விவசாயத்தையும் பாழ்ப்படுத்த அனுமதிக்க மாட்டோம். விவசாய அறுவடை நடைபெறும் இந்நிலையிலும் கூட, வேலைக்குப் போய் விட்டு, மாலை நேரப் போராட்டத்தில் இக்கிராம மக்கள் ஈடுபட்டிருப்பது நம்பிக்கை ஊட்டுகிறது.
 

காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தை தொடக்கியபோது, ஆரம்பத்தில் சில நூறு பேரே இணைந்தனர். அது பின்னர் மக்கள் போராட்டங்களாக, வெவ்வேறு வடிவங்களில் மாறியது.
 

 அது போல இம்மக்களின் போராட்டமும் வெல்லும். பி.ஆர்.பாண்டியனோடு, மஜகவும் இணைந்து உங்களோடு ஜனநாயக வழியில் போராடுவோம்'' என்றார். 
 

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், ''இப்போராட்ட களத்துக்கு வந்த முதல் அரசியல் தலைவர் தமிமுன் அன்சாரிதான். சட்டமன்றத்தில் இடதுசாரிகள் இல்லாத குறையை, இவர் போக்கி வருகிறார். தொடர்ந்து இப்போராட்டம் விரிவடையும்'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்