Skip to main content

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

Teenager jailed for seven years for refusing to marry girlfriend

 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ளது அந்திலிகிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் சுரேஷ்(35). இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2009ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணிடம் உன்னையே திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசை வார்த்தை கூறி நெருங்கிப் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நெருக்கம் காரணமாக அந்த இளம்பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். அதன்பிறகு சுரேஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப்பெண் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் சுரேஷ் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

 

இதையடுத்து அந்தப் பெண் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு ஜாமீனில் வெளி வந்துள்ளார் சுரேஷ். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த அந்தப் பெண்ணை பிரசவத்திற்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவர் இல்லாமல் குழந்தை பிறந்தது அந்தப் பெண்ணுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. குழந்தை இறந்த 10 நாட்கள் கழித்து உடல்நலம் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் இறந்துபோனார்.

 

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அவரது தீர்ப்பில் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி நடந்து கொண்ட குற்றத்திற்காக சுரேஷுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் 25 ஆயிரம் அபராதமும் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுரேஷ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு சென்ற அடைக்கப்பட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்