Skip to main content

ஆன்லைன் பாடம்... செல்போன் இல்லாததால் கல்லூரி மாணவி தற்கொலை... 

Published on 02/09/2020 | Edited on 02/09/2020
dddd

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது மேட்டுநன்னாவரம் கிராமம். விவசாயி ஆறுமுகம் என்பவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நித்யஸ்ரீ திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டாவது மகள் பனிரெண்டாம் வகுப்பும், மூன்றாவது மகள் பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் கரோனா நோய் தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ஆறுமுகத்தின் மூன்று மகள்களுக்கும் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுவதாக பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

ஏழை விவசாயியான ஆறுமுகம் ரூபாய் 20 ஆயிரம் செலவில் ஒரு செல்போன் வாங்கி 3 மகள்களும் ஒரே செல்போனில் ஆன்லைன் மூலம் பாடம் கற்பித்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் சகோதரிகள் 3 பேருக்கும் ஒரே நேரத்தில் வகுப்பு நடத்தப்படுவதால் ஒருவர் மட்டுமே ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி பயில முடியும். மற்ற 2 பேரும் கல்வி பயில முடியாத நிலையில் தங்களுக்கும் தனித்தனியே ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கி கொடுக்க வேண்டும் என ஆறுமுகத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

 

ஆனால் ஆறுமுகம் மேலும் இரண்டு ஆண்ட்ராய்டு செல்போன் வாங்க முடியாத நிலையில் மூத்த மகளுக்கும், இரண்டாவது மகளுக்கும் குடும்ப நிலைமையை சொல்லி அறிவுரை கூறி அனுசரித்து செல்லுமாறும், மூன்று பேரும் ஒரே செல்போன் மூலமாக ஆன்லைன் படிப்பு படிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த நித்யஸ்ரீ 29ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது விட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து அருந்தியுள்ளார்.

 

வயலில் வேலை செய்துவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்த ஆறுமுகம் மற்றும் அருகில் உள்ள வீடுகளில் விளையாடி விட்டு வீட்டிற்கு வந்த இரு சகோதரிகளும் நித்யஸ்ரீயை நேரில் பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் இருந்தைதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அருகில் உள்ள உறவினர்கள் உதவியோடு நித்யஸ்ரீயை உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் சாலையில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நித்யஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

அங்கு தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருந்த நித்யஸ்ரீ திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த 6 மாதத்திற்கு மேலாக மூடப்பட்டதால் தற்போது நடந்து வரும் ஆன்லைன் வகுப்பு ஆறுமுகம் குடும்பத்தினர் போன்ற ஏழை எளியவர்களுக்கு எந்த அளவுக்கு தங்கள் பிள்ளைகளுக்கு ஆண்ட்ராய்டு செல்போன்கள் வாங்கிக் கொடுத்து அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தமிழக அரசு தொலைக்காட்சிகள் மூலம் வகுப்புகளை நடத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்