Skip to main content

டெபாசிட் தொகையை திருப்பிக்கொடு! 'தேர்தல் ஆர்வலர்' பத்மராஜன் உண்ணாவிரத போராட்டம்!!

Published on 20/09/2020 | Edited on 20/09/2020

 

 

election padmarajan deposite not get


உள்ளாட்சித் தேர்தலின்போது தள்ளுபடி செய்யப்பட்ட வேட்புமனுக்கான டெபாசிட் தொகையை திருப்பித் தராவிட்டால், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தேர்தல் ஆர்வலர் பத்மராஜன் தெரிவித்துள்ளார்.

 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரைச் சேர்ந்தவர் பத்மராஜன் (61). கனரக வாகன டயர்களை புதுப்பிக்கும் தொழில் செய்து வருகிறார். 

 

தேர்தலில் போட்டியிடுவதில் பெரும் ஆர்வலரான இவர், இந்தியாவில் நடந்த அனைத்து வகையான தேர்தலிலும் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். இதில், குடியரசுத்தலைவர் தேர்தலும் அடங்கும். 

 

கடந்த 1988ம் ஆண்டு, தனது டயர் புதுப்பிக்கும் தொழில்கூடத்திற்கு தொலைபேசி இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அப்போது அவருக்கு இணைப்பு கிடைக்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு கிடைக்கும் என்று அப்போது தகவல் பரவியது. இதையடுத்து,1989 சட்டமன்ற தேர்தலில் மேட்டூர் தொகுதியில் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதையடுத்து, அவருக்கு உடனடியாக தொலைபேசி இணைப்பு கிடைத்தது. அதுதான் அவர் முதன்முதலில் போட்டியிட்ட தேர்தல்.

 

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் இரண்டு கட்டமாக நடந்த முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மேச்சேரி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். பல்வேறு காரணங்களால் அவருடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

 

ஆனால், இதுவரை அவருடைய டெபாசிட் தொகையான 2400 ரூபாய் திருப்பித் தரப்படவில்லை. இதுகுறித்து அவர் புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து அவர், இன்னும் 7 நாள்களுக்குள் தனது டெபாசிட் தொகையை வழங்காவிட்டால் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்