Skip to main content

முறையற்ற உறவு; காதலனை கொடூரமாகக் கொன்ற பெண்!

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

Chennai woman arrested by police in her boy friend passes away case

 

சென்னை, பெரம்பூர் நாராயண மேஸ்திரி 2வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (41), திருமணமாகாதவர். சென்னை, கொசப்பேட்டை சின்னத்தம்பி தெருவை சேர்ந்தவர் காவியா(42) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). காவியாவுக்கு கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் இருக்கின்றனர். ஆனால், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் மற்றும் மகன்களை பிரிந்து காவியா தனியாக வசித்து வருகிறார்.  

 

பிரகாஷும், காவியாவும் கடந்த மூன்று வருடங்களாக ஓட்டேரி பகுதியில் உள்ள ஒரு அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்துவந்துள்ளனர். முதலில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு பிறகு அது உறவாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் பல முறை பல்வேறு இடங்களுக்குச் சென்று தனிமையில் இருந்து வந்துள்ளனர். 

 

இந்நிலையில், கடந்த 8ம் தேதி காலை பெரியமேடு, ஆர்.எம். சாலையில் உள்ள ஒரு விடுதிக்கு இருவரும் தனிமையில் இருக்க சென்றுள்ளனர். அந்த விடுதியில் அறை எடுத்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். பிறகு இருவரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது காவியா வேறு ஒருவருடன் பழகி வந்தது தொடர்பாக பிரகாஷ் அவரிடம் கேட்டுள்ளார். இதில் மது போதையில் இருந்த இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த காவியா, பிரகாஷை சுவற்றில் மோதியுள்ளார். பிறகு பிரகாஷை படுக்கையில் தள்ளி அவர் முகத்தில் தலையணை வைத்து அழுத்தியுள்ளார். இதில் பிரகாஷ் மூச்சு பேச்சின்றி இருந்துள்ளார். 

 

பிரகாஷின் நிலையைக் கண்ட காவியா பயந்துபோய், உடனே விடுதி அறையிலிருந்து கீழே இறங்கி வந்து விடுதி மேலாளர் கபீரிடம், “என்னுடன் வந்தவர் அதிக மது குடித்து மயங்கி விட்டார் எனக்கு பயமாக இருக்கிறது” என சொல்லியுள்ளார். உடனடியாக கபீர் அறைக்குச் சென்று பிரகாஷை பார்த்துள்ளார். அங்கு அவர் மூச்சு பேச்சின்றி அசைவில்லாமல் இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கபீர், பெரியமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் வந்து பார்த்த போது பிரகாஷ் இறந்து கிடந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பினர்.  பின் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து தங்களது விசாரணையை துவங்கினர். 

 

இதற்கிடையில் பிரகாஷின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தது. அதில், பிரகாஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது என்றும், அவரது முகத்தில் ஏதோ வைத்து அழுத்தப்பட்டுள்ளது என்றும் அதனாலேயே மரணம் நிகழ்ந்துள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், உடனடியாக சந்தேக மரணம் என பதிந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அவருடன் அறையிலிருந்த காவியாவை பிடித்து விசாரணை நடத்தினர். போலீஸின் விசாரணையில், காவியா அறைக்குள் அவர்களாக நடந்த அனைத்தையும் காவல்துறையிடம் கூறினார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் காவியாவை கைது செய்து மேல் விசாரணை செய்துவருகின்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்