Skip to main content

தண்ணீரை திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை அதிமுக அரசு இதுவரை வலியுறுத்தவில்லை... விவசாயிகள் வேதனை!!!

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து விவசாயிகளை காத்தது நாங்கள்தான் என மார்தட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்தது அதிமுக அரசு.
 

cauvery issue


ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு பிறகு 2018 டிசம்பரிலிருந்து மாதம் தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு இன்று வரை திறந்து விடவில்லை.  சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி டிசம்பரில் 7.3 டி.எம்.சி. தண்ணீரும், ஜனவரியில் 3 டி.எம்.சி. தண்ணீரும், பிப்ரவரியில் 2.3 டி.எம்.சி. தண்ணீர் என மொத்தம் 14.9 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு சொட்டுக்கூட திறக்கவில்லை. தங்களுக்கான தண்ணீரை திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு இதுவரை வலியுறுத்தவில்லை. என கவலை கொள்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.
 

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு வரலாறு கண்டிராத வகையில் மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வயிற்றில் மண்ணை அள்ளிப்போட்டது போன்ற நிலை. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஏற்கனவே எட்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடியையும், 5 ஆண்டுகளாக சம்பா சாகுபடியையும் தொடர்ந்து இழந்து வரும் டெல்டா விவசாயிகளுக்கு அதிமுக அரசின் இத்தகைய நிலை எங்களுக்கு கவலை அளிக்கிறது." என்கிறார்கள் விவசாயிகள்.
 

மேலும் அவர்கள் கூறுகையில், "மேட்டூர் அணையில் இருந்து கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி முதல் குடிநீருக்காக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணை வரலாற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்திருப்பது இதுவே முதன்முறை. இவ்வளவு தண்ணீரை இதுவரை திறந்து விட்டதில்லை. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடி மட்டுமே இருக்கிறது. இந்த ஆண்டு பருவ மழையும் குறைவாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகபட்சமாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பதே வழக்கமாக இருந்தது ஆனால் இப்போது வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. தொடர்ந்து நீர் மட்டம் குறைந்து வந்தால் நடப்பாண்டும் குருவை போய்விடும். டெல்டாவில் குடிநீருக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்."என்றனர்.
 

இவ்வளவு தண்ணீர் திறக்க காரணம் என்ன பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம், "ஒரு காலத்தில் கொள்ளிடம், காவிரி ஆற்றில் சலங்கை போல் மணல் குவியலாக இருக்கும். தண்ணீரை தண்ணுள் வைத்து நீலத்தடி நீர்மட்டம் குறையாமல் நீர்ஆதாரத்தை காத்துவைத்திருக்கும், ஆனால் தற்போது அரசு ஒருபுறம் மணல் குவாரிகள் மூலம் மணலை கொள்ளை அடித்துவிட்டது. மறுபுறம் காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு இரவு, பகல் தெரியாமல் மணலை கொள்ளை அடித்து செல்ல அனுமதித்துவிட்டனர். இதனால் ஆறுகள் முழுவதும் தண்ணீரை காத்துவைக்கும் மணல் இல்லாமல் தரைதட்டி கிடப்பதால், விடப்படும் தண்ணீர் முழுவதும் வெயிலில் ஆவியாக சென்றுவிடுகிறது." என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்