Skip to main content

அன்புமணி ராமதாஸ் முதல் அமைச்சராகக்கூடாது என்று நான் சொல்லவில்லை: திருமாவளவன் பேச்சு 

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

 

பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

Protest



இதில் பேசிய திருமாவளவன், ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அது தானாக அழித்துவிடும். திமுகவை அழிக்க வேண்டும். திமுக, அதிமுகவை ஒழித்தால்தான் நாம் ஆட்சிக்கு வர முடியும் என்று ராமதாஸ் கூறினார். அதற்கு நான் உடன்படவில்லை. இதிலிருந்துதான் எனக்கும் அவருக்கும் முரண்பாடு ஏற்பட்டது. திமுகவை அழிக்க வேண்டும் என்பதுதான் அவரது ஒரே நோக்கம். ராமதாஸின் உளவியல் எப்படிப்பட்டது என்பதை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. 
 

திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோடு கொள்கை அளவில் நூறு விழுக்காடு பொருந்தி போகிறதா இல்லையா என்பது அல்ல. ஒரு கருத்தில் திமுக எங்களோடு உறுதியாக இருக்கிறது. சமூக நீதியை பாதுகாப்பதற்கு திமுகவோடு இருப்பு தேவை. கொள்கை ரீதியாக பல வேறுபாடுகள் இருக்கலாம். 
 

இதுதான் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு பிடிக்கவில்லை. எப்படியாவது திமுகவை அழித்துவிட்டால் தனது மகனை முதல் அமைச்சராக்கிவிடலாம் என்று கனவு காண்கிறார். அவர் அடுத்த ஜென்மத்தில் கனவாகக்கூட அதனை பார்க்க முடியாது. நான் காழ்ப்புணர்ச்சியில் சொல்லவில்லை. நல்ல எண்ணத்தின் அடிப்படையில் ஒரு முயற்சியை செய்ய வேண்டும். 

 

அன்புமணி ராமதாஸ் முதல் அமைச்சராகக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஜனநாயகத்தில் ஆசைப்படுவதற்கு உரிமை இருக்கிறது. உங்கள் எண்ணம் நல்ல எண்ணமாக இல்லையே என்பதுதான். தனிப்பட்ட முறையில் நான் உங்களுக்கு என்ன பழி செய்தேன். என்ன குற்றம் இழைத்தேன். நான் நாடாளுமன்ற உறுப்பினராவதால் உங்களது வாய்ப்பு என்ன பறிபோகப்போகிறது. 
 

நான் என்ன உங்களைப்போன்று போட்டிப்போட்டுக்கொண்டு முதல் அமைச்சர், முதல் அமைச்சர் என்று வண்டியிலா ஏறுகிறேன். என்னையும் கைது செய்யுங்கள், என்னையும் கைது செய்யுங்கள். நானும் ரவுடிதான். நானும் ரவுடிதான் என்றா நான் சொல்லுகிறேன். நான் அந்தப் போட்டிக்கே வரவில்லையே. காலம் கனிந்தால், மக்கள் நினைத்தால் திருமாவளவனுக்கு தகுதி இருந்தால், திருமாவளவனுக்கு அந்த ஆற்றல் உண்டு என்று மக்கள் நம்பினால் அவர்கள் அந்த இடத்தில் அமர வைப்பார்கள். நானாக போட்டிப்போட்டுக்கொண்டு அந்த இடத்தில் நிற்க முடியுமா. 
 

நீங்கள் முதல் அமைச்சராகுங்கள். நான் வாழ்த்துகிறேன். நான் மக்களுக்கு தொண்டு செய்கிறேன். சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ குரல் கொடுக்க வாய்ப்பு கிடைத்தால் போதும் அவ்வளவுதான். பாமகவில் இருந்து உங்கள் சின்னய்யாவை அனுப்புங்கள். நான் எங்கள் கட்சியின் ஒன்றிய செயலாளரை அனுப்புகிறேன். கொள்கையைப் பற்றி பேசுவோம். வாக்குவாதத்திற்கு அல்ல. தமிழ் தேசியம் குறித்து, சமூக நீதி குறித்து பேச வேண்டும்.

டாக்டர் ராமதாஸைவிட வன்னியர் சமுதாயத்திற்கு தலைநிமிர்வை தந்தவர்கள் இரண்டு பேர். எஸ்.எஸ்.ராமசாமி, மாணிக்க வேல் நாயகர். இவர்களை என்றைக்காவது ராமதாஸ் மேடையில் சொல்லியிருக்கிறாரா? ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்பே அவர்கள் கட்சி தொடங்கியவர்கள். உழவர் உழைப்பாளி கட்சியை எஸ்.எஸ்.ராமசாமி உருவாக்கினார். காமன் வீல் கட்சியை மாணிக்கவேல் நாயகர் உருவாக்கினார். சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்களையும் பெற்றிருந்தனர். ஒரு கட்டத்தில் தனியாக நாம் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்யப்போகிறோம் என்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்கள். 

 

வன்னியர்கள் உள்ள வடஆற்காடு மாவட்டத்தில் மாணிக்கவேல் நாயகர் தலைமையில் காமன் வீல் கட்சியும், தென்னாற்காடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியும் கட்சி நடத்தினார்கள். இவர்களால் வன்னியர்களுக்கு தலைநிமிர்வு ஏற்பட்டது. இவர்களால் ஒரே ஒரு நபர் கூட உயிரிழக்கவில்லை. வன்முறை வெறியாட்டத்தில் மக்களை வழிநடத்தவில்லை. தலித் சமூகத்திற்காக பாடுபட்ட இளையபெருமாள் காங்கிரஸ், வன்னியர்கள் தலைவர்களோடு நட்பாக இருந்தார்கள். எந்த வன்முறையும் நிகழவில்லை. ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இவ்வாறு பேசினார்.  

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்