Skip to main content

தமிழகத்தில் நடப்பது பாஜகவின் மறைமுக ஆட்சிதான்: திருமாவளவன் 

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

 

தமிழகத்தில் நடப்பது பாஜகவின் மறைமுக ஆட்சிதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.


 

 mk stalin - thirumavalavan


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நாங்குநேரி விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது . விக்கிரவாண்டியில் திமுகவும் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல்களில் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.  இந்த மூன்று தொகுதிகளிலும் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாகப் பாடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். 


 

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும் , நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருந்தனர்.  நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலும் கூட இந்தத் தொகுதிகளில் திமுக அணி கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது. எனவே இந்தத் தொகுதிகளில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் என்பது உறுதி. 


 

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் மக்கள் விரோத கொள்கைகளாலும் கடுமையான பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்டுள்ள  தமிழ்நாட்டு மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர்.  தமிழகத்தில் நடப்பது பாஜகவின் மறைமுக ஆட்சிதான். மத்தியில் ஆளும் பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள தேசியக் கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை பாஜக ஆளும் மாநிலங்களை முந்திக்கொண்டு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவது இதற்கொரு சான்றாகும்.அதிமுக அமைச்சர்கள் தமது தலைவர்களைப்பற்றிப் பேசுவதைவிட பாஜக தலைவர்களைப் புகழ்ந்துபேசி அவர்களிடம் நற்சான்று பெறுவதிலேயே குறியாக உள்ளனர். இவற்றையெல்லாம் மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இந்த இடைத்தேர்தல்களில் பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்ட அதிமுகவுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்பது உறுதி. இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்