Skip to main content

எடப்பாடி அரசுக்கு தலைமேல் தொங்கும் அடுத்த கத்தி !

Published on 27/02/2018 | Edited on 27/02/2018
edappadi1

 

தமிழக சட்டமன்றத்தில் 2017 ஆம்  ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி  சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அரசுக்கு எதிராக வாக்களித்த தற்போதைய துணை முதல்வர் பன்னிர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை  தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக கொறடா சக்கரபாணியும், தினகரன் ஆதரவு வெற்றிவேல் உள்ளிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட  நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.-க்கள் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், இன்று மனுதாரர்கள் தரப்பிலான இறுதி வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

 

திமுக கொறடா சக்கரபாணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி "சபாநாயகர் தன் அரசியல் சாசன கடமையை செய்யத் தவறினால், அதை நீதிமன்றம் தன் அரசியல்சாசன கடமையை செய்ய வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கொறடா உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என இந்த நீதிமன்றத்தில் கூறி விட்டு தேர்தல் ஆணையத்தில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறியது நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளிப்பதற்கு சமமாக கருத வேண்டும்.

 

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள்  தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக புகார் அளித்த நாளிலேயே விளக்கம் கேட்டு  நோட்டீஸ் அனுப்பியதை  சபாநாயகர் எப்படி நியாயப்படுத்த முடியாது. சபாநாயகர் சட்டப்பேரவை தலைவராக செயல்படாமல் கட்சி சார்ந்து தான் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்பதையே வெளிகாட்டுகிறது. எனவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை  தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்" என வாதிட்டார். 

 

அதன் பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தரப்பில்  மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் "கட்சி சார்பில் அறிவிக்கப்படும் முடிவுகள் என்பது அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும். அதன்படி கொறடா உத்தரவு என்பது அனைத்து  சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  பொருந்தும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தகுதி நீக்கம் கோரிய புகார் குறித்து முடிவெடுக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிட இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பி .எஸ். அணியினர் தெரிவித்ததை மட்டும் கணக்கில் கொண்டு அவர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்' என வாதிட்டார்.

 

இதனையடுத்து மனுதாரர்கள் , எதிர் மனுதாரர்கள் தரப்பிலான அனைத்து  வாதங்களும் முடிவடைந்தது.  எழுத்துபூர்வமான வாதங்கள தாக்கல் செய்ய அனைத்து தரப்பினரும்  அவகாசம் கேட்டதை  ஏற்ற நீதிபதிகள், மார்ச் 5ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்