Skip to main content

“தமிழ்த்தாய் வாழ்த்து நிறுத்தப்பட்டதை நான் ஏற்கவில்லை” - பொன் ராதாகிருஷ்ணன்

Published on 30/04/2023 | Edited on 30/04/2023

 

"I don't agree with the discontinuation of Tamil mother greetings" Pon Radhakrishnan

 

கர்நாடகத் தேர்தலில் பாஜக 130 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். 

 

ஈரோடு பாஜக அலுவலகத்தில் 29ந் தேதி மாலை பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "பிரதமர் மோடி தமிழ் மீது மிகவும் பற்று வைத்துள்ளார். அவரது நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகிறது. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியர்கள், ஏன் உலக மக்களுக்கே பெருமை தரும் விஷயமாகும். இன்று உலக தலைவர்களின் ஒருவராக மோடி உயர்ந்துள்ளார். இது நம் அனைவருக்கும் பெருமையானது தமிழ் மொழியை மிகவும் போற்றி புகழும் பிரதமர் தமிழகத்தின் மீது அதிக கவனம் செலுத்துகிறார். தமிழ் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும். ஹிந்தி மொழியை படித்தால் எந்த தவறும் இல்லை. அனைத்து மொழிகளையும் கற்று உலகில் மேலோங்கி வர வேண்டும்.

 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவினர் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் திமுகவினர் அவர் மீது வழக்கு தொடுப்பதற்கும் வருங்காலத்தில் நீதிமன்றத்தில் அதிக வேலை இருக்கும் என்று நினைக்கிறேன். கர்நாடகத்தில் பாஜக நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டு நிறுத்தப்பட்டதை நான் ஏற்கவில்லை. தமிழ் மொழிக்கு உரிய மரியாதை அனைவரும் வழங்க வேண்டும். 

 

மாநில நிதி அமைச்சர் வெளியிட்ட ஆடியோ குறித்து எனக்கு தெரியாது. அதேபோன்று கர்நாடகத்தில் பாஜக முன்னாள் தலைவர் ஈஸ்வரப்பா பேசிய பேச்சு குறித்தும் எனக்கு தெரியாது. ஆனால், கர்நாடகாவில் பாஜகவின் சில தலைவர்கள் விலகியதால் பாஜகவுக்கு வலிமை கூடியுள்ளது. பாஜக 130 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடிக்கும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாக்குறுதிகளை மக்கள் நம்ப தயாராக இல்லை. தமிழகத்தில் கூட அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூபாய் ஆயிரம் உரிமைத்தொகை வழங்குவோம் என்று திமுக கூறியது. ஆனால் இப்பொழுது தகுதி படைத்தவர்களுக்கே என்று மறுக்கிறது. இதையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும். கலைஞர் ஒரு மூத்த தலைவர் அவருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைத்தால் தவறில்லை." என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்