Skip to main content

கவர்னர் உரையை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்!  தொடர் முழுவதையும் புறக்கணிக்க திமுக முடிவு! 

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

                       

ddd


நடப்பாண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் கவர்னர் பன்வாரிலால் உரையுடன் இன்று துவங்கியது. கவர்னர் உரையை புறக்கணித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன! 
                    

காலை 11 மணிக்கு சட்டமன்றம் கூடியது. தனது உரையை கவர்னர் துவக்கினார். அவர் உரையை ஆரம்பிக்கும்  முன்பே திமுக எம்.எல்.ஏ.க்கள் எழுந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது, ’’மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதி போதாது. தமிழகத்திற்கான திட்டங்களும் ஏதுமில்லை ‘’ என்று சொல்லியவாறே பேசுவதற்கு முயற்சித்தார் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். 
                   

அப்போது அதனை எதிர்கொண்ட கவர்னர் பன்வாரிலால், ‘’ மத்திய பட்ஜெட்டில் தமிழக திட்டங்களுக்காக  1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் விவாதிக்கலாம்; முதலில் அவை நடப்பதற்கு ஒத்துழையுங்கள். என்னுடைய உரைக்கு எதிர்ப்பதாக இருந்தால் வெளிநடப்பு செய்து விட்டு மீண்டும் வாருங்கள்; விவாதிக்கலாம்‘’  என்று பதில் அளித்தார். 
                   

ஆனால் அதனை ஏற்க மறுத்தார் மு.க.ஸ்டாலின். உடனே திமுக, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையில் கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து தனது உரையை தொடர்ந்தார் கவர்னர் பன்வாரிலால்! 
                           

சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்த மு.க.ஸ்டாலின், கவர்னர் உரையை புறக்கணிக்கத்ததற்கான காரணங்களை விளக்கியவர், கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக தெரிவித்தார்!

சார்ந்த செய்திகள்