Skip to main content

போட்டியிட விரும்பியவர்களை அவமானப்படுத்திய போட்டியாளர். அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்.

Published on 17/03/2019 | Edited on 17/03/2019

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் எனக்கு எம்.பி சீட் தாருங்கள் என திமுகவைச் சேர்ந்த பலர் திமுக தலைமை கழகத்தில் விருப்பமனு தந்துள்ளனர். அவர்களுக்கான நேர்காணல் நடந்து முடிந்துள்ளது. வேட்பாளர் யார் என்பதை ஓரிரு நாளில் அறிவிக்கவுள்ளனர்.  இந்நிலையில் கட்சிக்குள் சர்ச்சை எழுந்துள்ளது.

 

stalin

 

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்குள் திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், கலசப்பாக்கம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை என ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இதில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய இரண்டு தொகுதிகளும் வேலூர் மாவட்டத்துக்குள் வருகின்றன. இந்த 2 தொகுதியில் உள்ள திமுக பிரமுகர்கள், நீண்ட வருடங்களாக இந்த பகுதியில் இருந்து திமுகவில் யாரையும் வேட்பாளராக நிறுத்தவில்லை, அதனால் இந்த முறை எங்கள் பகுதிக்கு வாய்ப்பு வழங்கி எங்கள் பகுதியில் இருந்து யாராவது ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

இது தொடர்பாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கழகப் பொருளாளர் துரைமுருகன், ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக இருந்த ராணிப்பேட்டை காந்தி போன்றவர்களை சந்தித்து முறையிட்டனர். அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வேலுவை சந்தித்து முறையிட சொல்லி அனுப்பினர்.  அதன்படி அவர்களும் திருவண்ணாமலை மாவட்ட செயலாளரை சந்தித்து தங்களது விருப்பத்தைத் தெரிவித்தனர்.  தகுதியுள்ளவர்கள் விருப்பமனு தாக்கல் செய்யுங்கள் கட்சி தலைமை பரிசீலிக்கும் என வேலுவும் கூறி அனுப்பி வைத்துள்ளார்.

திருப்பத்தூர் திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் உட்பட அப்பகுதியை சேர்ந்த சிலர் சீட் வேண்டும் என விருப்பம் மனு கட்சித் தலைமையிடம் வழங்க திருப்பத்தூர், ஜோலார்பேட்டை பகுதி நிர்வாகிகள் தலைமைக் கழகத்திற்கு சென்றிருந்தபோது, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் சிலர், திருப்பத்தூர் பகுதி திமுக நிர்வாகிகளிடம், நீங்க என்ன பெரிய இதுவா, நீங்க வந்து எம்.பி சீட் கேட்டு பணம் கட்டறிங்க ? இரண்டு தொகுதி மட்டுமே இருக்கும் அந்த மாவட்டத்துக்காரங்களுக்கு எம்பி ஆசை வரக்கூடாது என மிக மோசமான முறையில் நக்கலடித்து உள்ளனர். அதேபோல் நேர்காணல் நடந்த அன்றும் எங்களுக்கு தான் சீட் ஓடிப்போயிடுங்க என சீண்டியுள்ளனர். இந்த தகவல் தற்பொழுது திருப்பத்தூர் ஜோலார்பேட்டை பகுதி நிர்வாகிகளிடம் காரசாரமாக விவாதிக்கப்படுகிறது. 

மார்ச் 15ஆம் தேதி திருப்பத்தூர் நகரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தபோது இதுதொடர்பாக தங்களது மனக்குமுறலை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். அப்போது, இந்த இரண்டு தொகுதி ஓட்டு இல்லாம, அங்கயிருக்கிற நான்கு தொகுதி ஓட்டுக்களை வைத்து திமுக வேட்பாளர் ஜெயித்து விடுவாரா ?, சீட் யாருக்கு என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யட்டும், அதை விட்டுவிட்டு எனக்கு தான் சீட், நீங்க யார் வந்து விருப்ப மனு தாக்கல் செய்கிறது என கேட்பது எந்த விதத்தில் நியாயம் முன்னாள் அமைச்சர் வேலுவின் ஆதரவாளராக இருப்பதாலேயே அந்த இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் எங்களிடம் இப்படி பேசினார்கள் என்றார்கள். 
 

 

 

சார்ந்த செய்திகள்