Skip to main content

'தமிழ்நாட்டிலேயே இதுதான் முதல்முறை'- விதி எண் 110 - இன் கீழ் முதல்வர் அறிவிப்பு

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

Chief Minister's announcement under 'This is the first time in Tamil Nadu'-110-

 

நேற்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக பேரவை கூடி இருக்கிறது. இதில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் விதி எண் 110-இன் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். உரையில், ''அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரி, அதன் மீதான வட்டி மற்றும் அபராதத் தொகை வணிகர்களின் பெயர்களில் இன்னமும் நிலுவையில் இருந்த வருகிறது. இந்த நிலுவைத் தொகையை வழங்குவதில் சலுகைகள் வழங்கப்பட்டு, இந்த பிரச்சனைகளுக்கும் முடிவு காண வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்கள் நீண்ட நாட்களாக முன்வைத்து வருகிறார்கள். இந்த கோரிக்கைகளை கவனமுடன் பரிசீலித்து இத்தகைய பழைய நிலுவைத் தொகைகளை வசூலிப்பதில் ஒரு சமாதான திட்டத்தை அறிவித்து செயல்படுத்திட அரசு முடிவு செய்துள்ளது.

 

கடந்த ஆண்டுகளில் இந்த நிலுவைத் தொகைகள் குறித்து பல சமாதான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும் புதியதொரு அணுகுமுறையோடு கூடுதல் சலுகைகளுடன் இந்த திட்டம் இப்பொழுது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் 50 ஆயிரத்திற்கு குறைவாக வரி, வட்டி, அபராதத்தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு நிலுவைத் தொகையானது முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். ஒவ்வொரு மதிப்பாண்டிலும் ரூபாய் 50 ஆயிரத்திற்கு உட்பட்ட நிலுவையினங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும். தமிழ்நாட்டின் வரலாற்றில் சிறு வணிகர்களுக்கு இவ்வாறு முழுமையாக வரி நிலுவை தள்ளுபடி செய்யப்படுவது இதுதான் முதல் முறை. அரசின் இந்த முடிவால் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 398 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 95 ஆயிரத்து 502 வணிகர்கள்  தங்களது நிலுவைத் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டு பயனடைவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

Chief Minister's announcement under 'This is the first time in Tamil Nadu'-110-

 

இப்படி நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்பட்ட வணிகர்கள் தவிர இதர வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் அனைவரும் ரூபாய் 50 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை நிலுவையில் உள்ளவர்கள்; ரூபாய் 10 லட்சம் முதல் 1 கோடி வரை வரி நிலுவையில் உள்ளவர்கள்; ரூபாய் ஒரு கோடி முதல் 10 கோடி வரை நிலுவையில் உள்ளவர்கள்; ரூபாய் 10 கோடிக்கு மேலாக நிலுவையில் உள்ளவர்கள் என நான்கு வரம்புகளின் கீழ் கொண்டு வரப்படுவர். மேற்கூறிய வரம்புகளில்  முதல் வரம்பில் உள்ளவர்கள் மொத்த நிலுவைத் தொகையில் 20 விழுக்காட்டை கட்டி நிலுவை வழக்கில் இருந்து வெளியே வரலாம் அல்லது நிலுவையில் உள்ள வணிகவரி, வட்டி மற்றும் அபராதத் தொகையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு தொகையைக் கட்டி நிலுவை வழக்குகளில் இருந்து வெளிவரலாம். இதர மூன்று வரம்புகளில் உள்ள வணிக பெருமக்களும், நிலுவையில் உள்ள வணிகவரி, வட்டி மற்றும் அபராதத் தொகையில் குறிப்பிட்ட விழுக்காட்டை கட்டினால் நிலுவை வழக்குகளில் இருந்து வெளியே வரும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த திட்டத்தின் முக்கிய சலுகையாக நிலுவைத் தொகையினை வணிகர்கள் கட்ட முன்வரும் நாள் வரை அவர்களுடைய கணக்கில் ஏற்றப்பட ஏதுவான திரண்ட வட்டி தொகை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டு வணிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் செயல்படுத்தப்படவிருக்கும் இந்தத் திட்டம் வரும் 16.10.2023 முதல் நான்கு மாத காலம் நடைமுறையில் இருக்கும். 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி வரை இந்த சமாதான திட்டம் நடைமுறையில் இருக்கும். அரசின் இந்த முன்னோடி முயற்சியை முழுமையாக வணிகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்