Skip to main content

'ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு பாருங்க...'-செல்வப்பெருந்தகை பேட்டி  

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
'See after June 4, the BJP tent will be empty' - Selvaperunthakai interview

ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு பாஜக கூடாரமே காலியாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யின் வீடியோவை வெளியிட்டு, “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” எனக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யின் விடியோவை நேற்று (21.05.2024) பகிர்ந்திருந்தார்.அதே சமயம் இந்த வீடியோவை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், ‘அண்ணனுக்கு நன்றி’ எனப் பதிவிட்டிருந்தார். இதற்கிடையே திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் யாரையும் அதிமுகவினர் புகழ்ந்து பேசும் வழக்கம் கிடையாது. அப்படி இருக்க வழக்கத்திற்கு மாறாக செல்லூர் ராஜு செயல்பட்டிருப்பது அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. அதிமுகவின் தலைமையின் மீது ஏதேனும் அதிருப்தி உருவாகியுள்ளதா அந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக செல்லூர் ராஜு இப்படி பதிவிட்டுள்ளாரா? என்று அரசியல் வட்டாரங்களில் விமர்சகர்கள் பல்வேறு கருத்துகளை வைத்திருந்தனர்.

அதோடு திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் பிரபல தலைவரை செல்லூர் ராஜு புகழ்ந்து பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை அதிமுக நிர்வாகிகளின் ஒரு தரப்பு அக்கட்சியின் தலைமைக்குப் புகார் கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்ட வீடியோ பதிவை செல்லூர் ராஜு நீக்கியுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செல்வப்பெருந்தகை பேசுகையில், ''செல்லூர் ராஜு உண்மையை போட்டுள்ளார். ஒரு தொலைக்காட்சிக்கு கூட அவர் பேட்டி கொடுத்தார். காலையில் பார்த்தேன். என் மனதில் என்ன பட்டதோ அதை போட்டு இருக்கிறேன். அவர் எளிமையான தலைவர் என்னை நெகிழ வைத்திருக்கிறது என்று அவர் சொல்லியுள்ளார். அவர் மட்டுமல்ல பாஜகவில் உள்ள தலைவர்களும் ராகுல் காந்தியை புகழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியலுக்காக அங்கே இருக்கிறார்கள். வருகின்ற நான்காம் தேதிக்கு பிறகு பாஜக கூடாரமே காலியாகும். அவர்களுடைய வெறுப்பு அரசியலை எப்படி திட்டமிட்டு செய்தார்கள் என்பதை அவர்களே பேச போகிறார்கள். ராகுல் காந்தி எல்லாரையும் கவர்ந்திருக்கிறார் என்பது செல்லூர் ராஜு மூலம் தெரிகிறது. செல்லூர் ராஜு எப்போதும் உண்மையாகவே பேசுவார். சட்டமன்றத்தில் கூட என்ன தோணுதோ அதை பேசுவார். ரொம்ப மகிழ்ச்சியாக பேசுவார். சில சமயத்தில் கலகலப்பாக பேசுவார். அப்படிப்பட்ட நல்ல மனிதர். அவர் சொன்னதை நாங்கள் வரவேற்கிறோம்'' என்றார்.

சார்ந்த செய்திகள்