Skip to main content

பீகார் பள்ளிக் குழந்தைகள் மரணத்திற்குக் காரணமான பா.ஜ.க. நிர்வாகி போலிஸில் சரண்!

Published on 28/02/2018 | Edited on 28/02/2018

பீகார் அரசு பள்ளி வளாகத்தில் விபத்து ஏற்படுத்தி, ஒன்பது குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமான பா.ஜ.க. நிர்வாகி காவல்துறையில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Manoj

 

பீகார் மாநிலம் முசாஃபர்பூரின் புறநகர்ப் பகுதியில் உள்ளது அரசு பள்ளி. இங்கு கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி குடிபோதையில் வாகனம் ஓட்டிவந்த பா.ஜ.க. நிர்வாகி மனோஜ் பைதா, பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்த குழந்தைகள் மீது ஏற்றினார். இதில் 9 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 20 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து மனோஜ் பைதா அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

 

இதையடுத்து, பீகார் சட்டசபையில் முதல்வர் நிதீஷ்குமாருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். மனோஜ் பைதாவைக் கைது செய்யக்கோரி தொடர்ந்து முழக்கங்கள் எழுந்த நிலையில், அவரை அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக பா.ஜ.க. அறிவித்தது.

 

இந்த கோர விபத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த குழந்தைகளில் ஒருவரின் தாத்தா அளித்த புகாரின் பேரில் மனோஜ் பைதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை மனோஜ் பைதா காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தின்போது காயமடைந்ததால் பாட்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மனோஜ் பைதா சிகிச்சை பெற்றுவருகிறார்.

சார்ந்த செய்திகள்