ADVERTISEMENT

ஒரு ஓட்டுப் போட ஒரு லட்சம் செலவு செய்து கடல் கடந்து பறந்து வந்த இளைஞர்கள்

02:57 PM Apr 02, 2019 | bagathsingh




ADVERTISEMENT

ஒவ்வொரு வாக்காளர்களும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். உங்கள் ஓட்டு உங்கள் உரிமை. ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது. பணம் கொடுக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் பல கோடிகளை செலவு செய்து பல்வேறு வகையிலும் 100 சதவீதம் வாக்கு பதிவிற்கு பிரச்சாரங்களும், விளம்பரங்களும் செய்து வருகிறது. தன்னார்வ அமைப்புகளும், கல்லூரி, பள்ளி மாணவர்களும் விழிப்புணர்வு நாடகம், பேரணி, கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். அப்படியும் முழு வாக்கு பதிவு நடந்துவிடவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அரசியல் கட்சிகளும் நிறுத்தவில்லை. வாக்காளர்களும் வாங்குவதை நிறுத்தவில்லை. பல இடங்களிலும் சிக்கியுள்ள பணத்தால் தேர்தல்களே ரத்து செய்யும் நிலை வரை சென்றுள்ளது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர், அரவாக்குறிச்சி தேர்தல்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப் போய் தான் நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஒரு ஓட்டு போட 3 ஆயிரம் கி.மீ கடல் கடந்து சுமார் ஒரு லட்சம் பணம் செலவு செய்து வாக்களிக்க வந்திருக்கிறார்கள் இளைஞர்கள். அவர்களை எப்படி பாராட்டினாலும் தகும். அவர்களைப் பார்த்து வாக்காளர்களும் விழிப்பணர்வு பெற வேண்டும்.





புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ளது மங்களநாடு கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த பீர்முகமது மகன் முகமது பாரூக் (வயது 46), அரசர்குளம் கிராமத்தைச் சேர்ந்த சேக் இஸ்மாயில் (வயது 43 ) இவர்கள் இருவரும் மலேசியாவில் இருந்து ஓட்டுப் போட சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். இன்றும் சில நாட்களில் சுமார் 50 இளைஞர்கள் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வர உள்ளனர். இதில் பாரூக் கடந்த தனது முதல் ஓட்டை 1991 ல் பதிவு செய்தவர் பிறகு 1995 ல் வெளிநாடு சென்ற பிறகு ஒவ்வொரு பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலுக்கும் சொந்த ஊருக்கு வந்து வாக்களிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் பல்வேறு காரணங்களால் வாக்களிக்க வரமுடியவில்லை என்று மன வேதனையில் இருந்துள்ளார். தற்போது 17 வது மக்களவை தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். வாக்களித்த மறுநாள் மலேசியா செல்கிறார். இவரைப் பற்றி 2016 சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வந்த போது நக்கீரன் இணையத்தில் முதலில் செய்தி வெளியிட்டோம். அதைப் பார்த்த பிறகு பல இளைஞர்களும் தற்போதைய தேர்தலுக்கு வாக்களிக்க சொந்த ஊருக்கு வருகிறார்கள். அதில் முதல் ஆளாக அரசர்குளம் சேக் இஸ்மாயில் வந்துவிட்டார். அவர்கள் சொல்வதை கேட்கலாம்..

மங்களநாடு முகமது பாரூக்..

என் தந்தை வெளிநாட்டில் இருக்கும் போது ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் வீட்டுக்கு தகவல் கொடுப்பார். வாக்காளர் கணக்கெடுப்பு வந்தால் நான் ஓட்டுப் போட வந்துவிடுவேன் என்று பதிவு செய்யுங்கள். வெளிநாட்டில் இருப்பதாக மட்டும் சொன்னால் பெயரை நீக்கிவிடுவார்கள். அது செத்தவனுக்கு சமம் என்று சொல்வார். தவறாமல் வாக்களிக்க வருவார்.


நான் 1991 ல் என் முதல் வாக்கை பதிவு செய்தேன். பிறகு 1995 ல் பிழைப்பிற்காக மலேசியா சென்றேன். நான் அங்கே இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலுக்கு ஊருக்கு வந்து ஓட்டுப் போட்டுவிட்டு போவேன். இது ஜனநாயக கடமை இல்லையா. நான் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம் அது என் விருப்பம். ஆனால் நம் ஓட்டை நாம் போட்டே ஆக வேண்டும்.

நான் ஓட்டுப் போட சொந்த ஊருக்கு போறேன்னு சொல்லும் போது எல்லாம் நண்பர்கள் என்னை கிண்டல் செய்வார்கள். ஒரு மாத சம்பளம் இழப்பு, 35 ஆயிரம் டிக்கெட் செலவு இப்படி ஒரு லட்சம் வரை செலவு செய்து போய் ஒரு ஓட்டு போடனுமா என்பார்கள். நான் அவர்களிடம் சொல்வத எல்லாம் நம் உரிமை அது. ஒரு முறை ஓட்டுப் போடலன்னா ஓட்டு பட்டியலில் பெயரை நீக்கிவிடுவார்கள். அப்பறம் நான் இந்தியன் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை. அதனால் தான் பஞ்சாயத்து தேர்தல் வரை அத்தனை தேர்தலுக்கும் ஓட்டுப் போடுறேன். எனக்கு ஒரு லட்சம் செலவை விட ஒரு ஓட்டு முக்கியம் என்று சொல்வேன்.


அப்படி தான் 2016 ல் நான் வந்து வாக்களித்த போது நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியானது. அதைப் பார்த்து மலேசியாவில் பல பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டது. அதன் பிறகு என்னை கிண்டல் செய்த இளைஞர்கள் விழிப்புணர்வு பெற்றனர். இப்போது பலரும் சொந்த ஊருக்கு வருவோம் ஓட்டுப் போடுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். சிலர் வந்துவிட்டனர். பலர் 18 ந் தேதிக்குள் வந்துவிடுவார்கள் என்றவர்..

முன்பு தேர்தலுக்கு நான் ஊருக்கு வரும் போது எல்லாம் கிராமங்களில் கொடி, தோரணங்கள், வீட்டு சுவர்களில் சின்னங்கள் இருக்கும் வீதிக்கு வீதி விளம்பர வாகனங்கள் அதையெல்லாம் பார்க்கும் போது திருவிழா போல இருக்கும். ஆனா இப்ப ஒரு விளம்பர வண்டிய கூட பார்க்க முடியல். தேர்தல் நாள் பக்கத்தில் வந்துவிட்டதுக்கு கூட அறிகுறி தெரியல.


நான் புதுக்கோட்டை மாவட்டம். அறந்தாங்கி வட்டம். ஆனால் தொகுதி சீரமைப்பில் காலங்காலமாக இருந்த என் மாவத்தின் பெயரில் இருந்த தொகதி பறிக்கப்பட்டு 150 கி.மீ தூரத்தில் உள்ள சிவகங்கை தொகுதிக்கு வாக்களிக்கிறேன் என்ற மன வருத்தம் ஒவ்வொரு முறையும் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. அதனால் மீண்டும் புதுக்கோட்டை என்ற பாராளுமன்றத் தொகுதியை மீட்கப்பட வேண்டும். அதற்கு தற்போது போட்டியிடும் வேட்பாளர்களில் வெற்றி பெறும் வேட்பாளர் அதற்காண முயற்சி எடுக்க வேண்டும் என்றார். மேலும் காசுக்கு ஓட்டுப் போடாதீங்க என்றார்.

அரசர்குளம் சேக் இஸ்மாயில்..


43 வயதான நான் மலேசியாவில் வேலை செய்றேன். பாரூக் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஓட்டுப் போட வரும் போது எல்லாம் நானும் கிண்டல் செய்தவன் தான். ஆனால் அவர் செய்யும் செயல் மிகப்பெரிய செயல் என்பதை செய்திகள் மூலம் அறிந்தேன். அதன் பிறகு நானும் ஓட்டுப் போட சொந்த ஊருக்கு போகனும் என்ற எண்ணம் கொண்டேன்.

இப்ப என் ஒரு மாத சம்பளம், விமான செலவு எல்லாம் சுமார் ரூ. ஒரு லட்சம் எனக்கு இழப்பு தான். ஆனால் ஒரு ஓட்டு போடும் போது விரலில் வைக்கப்படும் மை எனக்கு மன நிறைவை கொடுக்கிறது. அதற்காகவே ஒரு லட்சம் எனக்கு பெரிதல்ல என்பதை உணர்கிறேன். நான் விரும்பியவருக்கு ஓட்டுப் போட உரிமை உள்ளது. யாரையும் பிடிக்கலன்னா நோட்டா இருக்கு. எதில் போட்டாலும் தவறாமல் ஓட்டுப் போடனும்.

டீ கடையில் உக்காந்து ஊழல் பெருகிப் போச்சு என்று பேசிக் கொண்டு ஓட்டுப் போடாமல் வீட்டில் இருந்து முகநூலில் மூழ்கிக் கிடக்கும் இளைஞர்களே.. ஒரு நல்ல தலைவனை நல்ல அரசாங்கத்தை உன்னால் தான் தேர்ந்தெடுக்க முடியும். அதற்கு நீ முதலில் வாக்களிக்க வேண்டும். அப்போது தான் ஊழல் இல்லாத ஒரு அரசாங்கத்தை உருவாக்க முடியும் என்பதை முதலில் நீ நம்ப வேண்டும். ஊழல் என்று சொல்லிக் கொண்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தால் நீ விரும்பும் நல்ல அரசாங்கத்தை உருவாக்க மடியாது. உன் ஒரு வாக்கு அரசாங்கத்தை மாற்றும் என்பதை உணர வேண்டும். அதனால் தேர்தல் நாளில் வாக்குச்சாவடிக்கு செல் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களி..

ஆனால் ஓட்டுக்கு பணம் வாங்காதே.. ரூ. 100, 200 க்கு ஓட்டுப் போடும் போது தான் நல்ல சமூதாயம் உருவாக்க முடியவில்லை. நீ 100 வாங்குவதால் என்ன பலன். என்னைப் போல பல இளைஞர்கள் பல லட்சம் செலவு செய்து வந்து ஓட்டுப் போடுகிறோம். நான் ஊருக்கு வந்த நாளில் ஒரு கட்சி வேட்பாளர் அழைக்கிறார் என்று ரூ. 100 கொடுத்து பெண்களை அழைத்துச் சென்றார்கள். அதைப் பார்த்து என் மனம் தான் வேதனை அடைகிறது. இனிமேல் அதை தடுத்து நிறுத்திவிட்டு சுயமாக சிநத்தித்து வாக்க்களிக்க வேண்டும். பணம் கொடுப்பது குற்றம் என்றால் வாங்குவது அதைவிடப் பெரிய குற்றம் என்றார்.

ஓட்டுக்கு நோட்டு என்ற நிலையில் ஒரு ஓட்டு போட ஒரு லட்சம் செலவு செய்து சொந்த ஊருக்கு வரும் இளைஞர்களை பாராட்டுவோம். வாக்களிக்க வேண்டாம் என்று வீட்டில் இருப்பவர்கள் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிப்போம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT