ADVERTISEMENT

உலகக் கோப்பை தோல்வியும்; அரசியலும்! 

10:48 AM Nov 23, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி அடைந்த படுதோல்வி பல பாடங்களை இந்திய மக்களுக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் இந்த படுதோல்வி இந்திய கிரிக்கெட்டிலும், கிரிக்கெட்டே வாழ்க்கையாக அதை ஒரு மதமாகவே தீவிரமாக வெறித்தனமாகக் கடைப்பிடிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் சனாதனம் என்கிற பா.ஜ.க.வின் கோட்பாடு பெற்ற தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் விளம்பரங்களுடன், கோடிக்கணக்கான மக்கள் பார்த்த உலகக் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டியானது ஒட்டுமொத்த இந்தியாவின் அரசியல் தலையெழுத்தையே மாற்றக்கூடிய பொதுத்தேர்தலில் கூட இத்தனை கோடி மக்கள் ஆர்வத்தோடு பங்கேற்று இருப்பார்களா என்பதாகக் கணிக்க முடியாத அளவிற்கு இருந்தது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்த இந்த கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப் போட்டியில் இந்தியா பரிதாபகரமாகத் தோற்றது. இதுவரை நடந்த அனைத்துப் போட்டிகளிலும் ஜெயித்த இந்தியா அடைந்த படுதோல்வி, அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களை மட்டுமல்ல, கோடிக்கணக்கான இந்தியர்களின் மனதையும் நொறுக்கித் தள்ளியது. கிரிக்கெட் ரசிகர்கள் பலர் கதறிக் கதறி அழுதார்கள்.

ஏன் இந்தத் தோல்வி? என கிரிக்கெட் வல்லுனர்களிடம் கேட்டோம். “முதலில் இவர்கள், கிரிக்கெட்டை குஜராத்துக்கு கொண்டுபோய் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் வைத்து, அதில் இந்தியா வெற்றி பெற்று, அந்த வெற்றி பா.ஜ.க.வின் வெற்றி; நரேந்திரமோடிக்கு கிடைத்த வெற்றி என உலகம் முழுவதும் அடையாளப்படுத்தி பெருமையடைய நினைத்தார்கள். அனைத்து சினிமா நட்சத்திரங்களையும் அழைத்தார்கள். கலைவிழா நடத்தினார்கள். கவர்ச்சி விருந்து படைத்தார்கள். பிளையிங் கிஸ்களை ஸ்டேடியத்தில் பறக்கவிட்டார்கள். ஒலி வேகத்தை விட வேகம் மிக்க இராணுவ விமானங்களின் அணிவகுப்பை வானில் நடத்தினார்கள். வாணவேடிக்கைகள் நடந்தன. ஆனால், பா.ஜ.க.வினர் மல்யுத்த வீராங்கனைகளை சரியாக மதிக்கவில்லை என்றும், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பா.ஜ.க.வுக்கு எதிராக நடத்திய போராட்டத்தை ஆதரித்த ஒரே காரணத்துக்காகவும், முதன்முதலில் உலகக் கோப்பையை இந்தியாவுக்குப் பெற்றுத்தந்த கபில்தேவை அழைக்கவில்லை. அந்த அணியில் இடம் பெற்றிருந்த மொகீந்தர் அமர்நாத் போன்ற வீரர்கள் கூட அழைக்கப்படவில்லை.

அதற்கு மாறாக, சனாதனத்தை உயர்த்திப் பிடிக்கும் சமூகப் பிரிவைச் சேர்ந்த டெண்டுல்கர் அழைக்கப்பட்டிருந்தார். அவர் கையால் உலகக் கோப்பையை மைதானத்தில் வைத்தார்கள். டெண்டுல்கர் அருகில் ஜக்கி வாசுதேவ் அமர வைக்கப்பட்டார். குளோபல் அம்பாசிடராக அறிவிக்கப்பட்டு, இவர்கள் கொண்டாட்டங்களில் கவனம் செலுத்தினார்களே ஒழிய மேட்ச் விளையாடக்கூடிய பிட்ச்சில் கவனம் செலுத்தவில்லை. புற்களே இல்லாத, ஏற்கெனவே விளையாடி உலர்ந்துபோயிருந்த பிட்ச்சை தேர்ந்தெடுத்தார்கள். அந்த ‘பிட்ச்,’ போட்டியின் முடிவுகளைப் பாதித்தது. உயிரோட்டமே இல்லாத ஒரு பிட்ச்சை மிகப்பெரிய பைனல் போட்டிக்கு யாரும் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். இது முதல் கோணல்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அது விளையாடிய அனைத்து மேட்ச்சுகளிலும் ஜெயித்தது. அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது. முதலில் பேட்டிங் செய்த மூன்று வீரர்கள் ஐம்பதுக்கு மேல் அடித்தார்கள். ரோகித், சுப்மன் என இரண்டு ஓப்பனிங் பேட்ஸ் மேன்களும் தங்களது விக்கெட்டுகளை எளிதாகப் பறிகொடுத்த நிலையில், சூர்யகுமார் யாதவ் போன்ற சூழ்நிலைகளை சாதகமாக்கும் வீரரை களமிறக்காமல், ஸ்ரேயாஸ் அய்யரை ஆட வைத்தார்கள். அவர் தோல்வியின் விளிம்பிற்கே அணியைக் கொண்டுசென்றார்.

கே.எல்.ராகுல் பகுதி நேர விக்கெட் கீப்பர். அவருக்கு பின்புறம் இருக்கும் திசைகளில் பீல்டர்களை நிறுத்தாமல் ஸ்பின் பௌலிங்குகளில் அவர் ஏராளமான ரன்களை வாரி வழங்க வைத்தார்கள்.

ஆஸ்திரேலிய அணியில் இடதுகை ஆட்டக்காரர்கள் அதிகம். ஆனால் இந்திய அணியில் அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்து வீழ்த்தும் வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆப் பிரேக் ஸ்பின்னர்களை இடம்பெறச் செய்யவில்லை. இந்திய அணியில் ஜடேஜாவைத் தவிர ஒருவர் கூட ஆல்ரவுண்டர்கள் கிடையாது. ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பல போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை களமிறக்கக்கூடாது என்பதில் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உறுதியாக இருந்தார். அவருக்கும் அஸ்வினுக்கும் நடந்த ஈகோ பிரச்சனையால் அஸ்வினை களமிறக்கவில்லை. ஆல் ரவுண்டரான அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்பட்டிருந்தால் அவர்கள் ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை சாய்த்திருப்பார்கள். ரன்களையும் குவித்திருப்பார்கள். இரண்டுமே போட்டியின் முடிவை மாற்றியிருக்கும். ஒட்டுமொத்தமாக தமிழக வீரர்களை புறக்கணிப்பது என்கிற முடிவை இந்திய கிரிக்கெட் வாரியம் முன்னெடுத்தது தோல்விக்கான காரணங்களில் மிக முக்கியமான ஒன்று.

ஆறு பேட்ஸ்மேன்கள். அதில் ஒருவர்கூட இடதுகை பேட்ஸ்மேன் இல்லை. மற்றொரு தமிழக வீரர் சாய்சுதர்சன் என்ற இடது கை பேட்ஸ்மேனும் புறக்கணிக்கப்பட்டார். இவையனைத்தும் ரோகித் ஷர்மா, ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் எடுத்த முடிவுகள். கே.எல். ராகுலை விக்கெட் கீப்பராக நிறுத்தியதால் மட்டுமே முப்பது ரன்களை இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு அள்ளிக் கொடுத்தது. அவருக்கு மிக நெருக்கத்தில் கோலியை நிற்க வைத்தார் ஷர்மா. அதனாலும் ரன்கள் பறந்தன. டிராவிட்டும் ரோகித்தும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான அமித்ஷாவின் மகனான ஜெய்ஷாவுக்கு நெருக்கமானவர்கள். இறுதி ஆட்டத்துக்கான உயிரோட்டமில்லாத பிட்ச்சை தேர்ந்தெடுத்ததும் இந்த மூவர் அணிதான். இந்தத் தோல்வியோடு இம்மூவருக்கும் கல்தா கொடுத்து துரத்தினால்தான் எதிர்காலம் உருப்படும்.

இதில் இதுவரை இந்தியாவுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த கபில்தேவும், தோனியும் அவர்கள் பிராமணரல்லாதவர்கள் என்பதால் புறக்கணிக்கப்பட்டார்கள். பிராமணரான சச்சினின் சாதனையை தனது ஐம்பதாவது சதத்தின் மூலம் முறியடித்த விராட் கோலியை இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டாடவில்லை. விளம்பரங்களில் தான் கொண்டாடப்பட்டார். அவர் இந்த மேட்ச்சில் 54 ரன்களில் தொங்கிப்போய் நடையைக் கட்டினார். இதனால்தான் இந்தியா தோல்வி அடைந்தது” என்கிறார்கள் நம்மிடம் பேசிய கிரிக்கெட் வல்லுனர்கள்.

பா.ஜ.க. இந்த கிரிக்கெட் போட்டியை மிக முக்கியமான அரசியல் ஆயுதமாகவே பார்த்தது. ஐந்து மாநிலத் தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது நடந்த இந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டி இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, தேர்தலில் வாக்குகளாக மாறி அது பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவும் என அவர்கள் கணக்குப் போட்டார்கள். ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையே கிரிக்கெட் போட்டியைக் காண ஸ்டேடியத்தில் வந்து அமர்ந்திருந்தது. பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் அகமதாபாத்தில் குவிந்தார்கள். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட பல மாநிலத் தலைவர்களையும் பா.ஜ.க. அழைத்திருந்தது. பா.ஜ.க.வின் கட்சி மாநாடு போலவே கிரிக்கெட் ஸ்டேடியம் மாறியிருந்தது.

உலகக் கோப்பைப் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இந்தியாவின் அனைத்து ஸ்டேடியங்களிலும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்கிற கோஷம் ஓங்கி ஒலித்தது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றவுடன் இந்திய வீரர்களுக்கு வரவேற்பு என்ற பேரில் இந்தியா முழுவதும் வெற்றிக் கோப்பையுடன் அவர்களை ஊர்வலமாக அழைத்துச் செல்ல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆடம்பர வெற்றி ஊர்வலத் திட்டங்களை பா.ஜ.க. திட்டமிட்டிருந்தது. வெற்றிக் கோப்பையை பிரதமர் நரேந்திர மோடி விஸ்வரூபம் எடுத்த அயோத்தி ராமன் கைகளில் தரையில் மண்டியிட்டு சமர்ப்பணம் செய்வது போன்ற படங்கள் வெளியிடப்பட்டன. சமூக வலைத்தளங்கள் காவிமயமாகின. கிரிக்கெட் அணியின் வெற்றி அயோத்தி ராமனின் வெற்றி, பா.ஜ.க.வின் வெற்றி எனத் திட்டமிட்டிருந்த பா.ஜ.க.வினர், கிரிக்கெட்டின் அடிப்படை விசயங்களான பிட்ச், ஆப் ஸ்பின்னர், விக்கெட் கீப்பீங் போன்ற அவசியமான ஆயுதங்களைக் கோட்டைவிட்டனர்.

முன்னேறிய சமூகத்தினரால் நிர்வகிக்கப்படும் கிரிக்கெட் போட்டியில் பெறும் வெற்றி, சனாதனத்துக்கு கிடைத்த வெற்றி என்பதைப் போல பறைசாற்ற நினைத்த பா.ஜ.க., இந்த வெற்றி பாராளுமன்றத் தேர்தலிலும் கை கொடுக்கும் என கணக்குப் போட்டிருந்தனர். அதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தனது மிகச்சீரான, திட்டமிட்ட தொழில்முறை ஊக்கத்துடன் கூடிய, ஒருங்கிணைத்த வீரர்களின் ஆட்டத்தால் முறியடித்துவிட்டது என்கிறார்கள் கிரிக்கெட் ஆர்வலர்களும் சமூக நோக்கர்களும்.

- தாமோதரன் பிரகாஷ்

சுந்தர் சிவலிங்கம்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT