Skip to main content

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குறித்து ஸ்டீவ் ஸ்மித் கருத்து! 

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

Steve Smith comments on Indian spinners!

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.

 

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் உலகக்கோப்பை போட்டியின் 5 வது லீக் ஆட்டத்தில் நேற்று (8ம் தேதி) மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

 

இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 199 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவிற்கு 200 ரன்களை ஆஸ்திரேலியா அணி இலக்காக நிர்ணயித்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களும், டேவிட் வார்னர் 41 ரன்களும் எடுத்தனர். 

 

இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் ஜடேஜா 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், அஸ்வின், ஹர்திக் பாண்டியா, சிராஜ் தலா ஒரு விக்கெட்களையும் எடுத்தனர்.

 

அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ஆட்டத்தின் முதல் 2 ஓவர்களிலேயே இந்திய அணி வீரர்கள் இஷான் கிஷன், ஷ்ரேயாஸ், ரோஹித் ஷர்மா அடுத்தடுத்து டக் அவுட் ஆனதால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் விராட் கோலி, கே.எல். ராகுலின் நிதானமான ஆட்டத்தினால் 41.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 201 ரன்களை குவித்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் 97 ரன்களும்,  விராட் கோலி 85 ரன்களும் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

 

இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி குறித்து அந்த அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது; “இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்கள் அனைவரும் சிறந்த தரமான பந்து வீச்சாளர்கள் என்பதால் அவர்களது பந்து வீச்சை எதிர்கொள்வது சவாலாக இருந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம்” என்றார். 

 

முன்னதாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும், வீரருமான ஆரோன் பின்ச், சுழல் பந்துகளுக்கு எதிரான மனநிலையை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். அதிரடியான ஆட்டை வெளிப்படுத்தாதே இதற்கு காரணம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

Ind Vs Aus: மைதானத்திற்கு மின் விநியோகம் நிறுத்தம்! 

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Electricity supply to India vs Australia match stadium in Raipur stopped today

 

சத்தீஷ்கர் மாநிலம், ராய்பூரில் உள்ள வீர் நாராயண மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி.20 போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது. 

 

ஐந்து டி.20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. அதன்படி தற்போது வரை மூன்று டி.20 போட்டிகளை விளையாடியுள்ளது. அதில் இந்தியா இரு போட்டிகளில் வென்றுள்ளது. இறுதியாக நடந்த போட்டியில், ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளது. இதன் மூலம், இன்று நடைபெறவிருக்கும் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வென்றால் ஐந்து போட்டிகளைக் கொண்ட டி.20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிடும். மாறாக ஆஸ்திரேலியா இன்று நடக்கும் போட்டியில் வென்றால் இரு அணிகளும் 2க்கு - 2 வெற்றி என இறுதிப் போட்டி இன்னும் சுவாரஸ்யமாக மாறும். 

 

இந்நிலையில், இன்று டி.20 போட்டியின் நான்காவது ஆட்டம் சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள வீர் நாராயண மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. ஆனால், அந்த மைதானத்திற்கு இன்று முதல் மின் விநியோகம் செய்யப்படமாட்டாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

இது குறித்து மின் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது; ராய்பூர் வீர் நாராயண மைதான நிர்வாகம் ரூ. 3.16 கோடி மின் கட்டணத்தை இன்னும் கட்டாமல் வைத்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டே அந்த மைதானத்திற்கு மின்சாரம் தடைசெய்யப்பட்டது. இந்த மைதானம் கட்டி முடிக்கப்பட்டதும், இதனை பராமரிக்கும் பொறுப்பு பொதுப்பணித்துறைக்கும், மற்ற செலவுகள் விளையாட்டுத் துறைக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை மின் கட்டணம் தொடர்பாக அணுகும்போதும், பொதுப்பணித்துறையும், விளையாட்டுத்துறையும் ஒருவரை ஒருவர் கைகாட்டுகின்றனர். இருந்தபோதும் இருவருக்கும் முறையாக தெரியப்படுத்தியும் மின் கட்டண நிலுவைத் தொகையைக் கட்டாததால், கடந்த 2009ம் ஆண்டே மின் விநியோகம் தடை செய்யப்பட்டுவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதேசமயம், மின் விநியோகம் நிறுத்தப்பட்டதும் தற்காலிக மின் இணைப்பு மூலம் மின்சார வசதி பெற்று வந்தது. ஆனால் தற்போது அதுவும் தடையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முக்கிய போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில், ஜெனரேட்டர் மூலம் மின் விநியோகத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 

 

Next Story

“எனக்கு வருத்தம் அளிக்கிறது” - ஆஸ்திரேலிய வீரரின் செயல் குறித்து முகமது ஷமி கருத்து

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Mohammed Shami comments on the Australian player's action

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், பிரதமர் மோடி இந்திய அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதே சமயம் ஆஸ்திரேலிய அணியின்  மிட்செல் மார்ஷ், வென்ற உலகக் கோப்பை மீது தனது காலை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த இந்திய ரசிகர்கள் சிலர், உலகக் கோப்பையின் மீது எப்படி கால் வைக்கலாம் என்று மிட்செல் மார்ஷ்க்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். 

 

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் முகமது ஷமி, மிட்செல் மார்ஷின் செயலுக்கு தனது வேதனையை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முகமது ஷமி, “நான் காயமடைந்திருக்கிறேன். அந்த உலகக் கோப்பைக்காக தான் உலக நாடுகள் அனைத்தும் போட்டியிடுகிறது. அந்த கோப்பையை தலைக்கு மேல் உயர்த்தி தூக்கிக்காட்ட வீரர்கள் விரும்புகின்றனர். அப்படி தலைக்கு மேல் வைக்க வேண்டிய கோப்பையில், காலை வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை” என்று கூறினார். ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷின் செயல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.