ADVERTISEMENT

விரைவில் தண்ணீர் தீரப்போகும் நகரங்கள்...  இந்தியாவிலும் இருக்கிறது!!! 

09:50 AM Feb 14, 2018 | Vasanth

22 மார்ச் - உலக தண்ணீர் தினம்

"நீர் இன்றி அமையாது உலகு" இவ்வுலகில் நீர் இல்லையெனில் எந்த ஒரு உயிரும் வாழ இயலாது என்பது வள்ளுவனின் கூற்று, நாம் நாள்தோறும் காணும் உண்மை. அதில் முதல் நகரமாக தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன், தண்ணீர் தீர்ந்துகொண்டே வரும் நகரமாக உருவெடுத்துள்ளது. தென்ஆப்பிரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய சுற்றுலா நகரமான கேப்டவுனில் கடந்த பிப்ரவரி 1 முதல் ஒரு நாளுக்கு ஒரு நபருக்கு 50 லிட்டர் தண்ணீர்தான் வழங்கப்படுகிறது. குளிப்பதற்கு 15 லிட்டர் அதுவும் 90 நொடிகளுக்குள் குளித்து விட்டு வந்து விட வேண்டும், துணி துவைப்பதற்கு 18 லிட்டர், குடிப்பதற்கு 2 லிட்டர் ,நாய்க்கு 1லிட்டர் குடிப்பதற்கு , சமைக்க 2 லிட்டர் ,கழிவறை பயன்பாட்டிற்கு 9 லிட்டர்,கைகளை கழுவுவதற்கு 3 லிட்டர்என்று பிரித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் உள்ள தண்ணீர் வரும் ஏப்ரல் 16 வரை தான் இருக்கும் என்றும், அன்று "டே ஜீரோ" ஆகிவிடும் அதனை எதிர்க்கொள்ளவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் பின் கேப்டவுன் பக்கத்தில் உள்ள கிரபவ் கிராம விவசாயிகள் உதவியதால் "டே ஜீரோ " தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை எதிர்காலத்தில் சந்திக்கப் போகும் 11 நகரங்கள் என்ற பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் நீர் மேலாண்மை பிரிவு வெளியிட்டுள்ளது. இதில் கேப்டவுன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் தொழில்நுட்ப நகரமான பெங்களூரு மூன்றாவது இடத்தில் உள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கு ஒரு அபாய மணி ஒலித்தது போல் உள்ளது. இதனை சேர்த்து மற்ற 10 நகரங்களின் நிலை என்னவென்று பார்ப்போம்.

ADVERTISEMENT

சா பாலோ

ADVERTISEMENT


சா பாலோ பிரேசில் நாட்டின் பொருளாதார நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு 2016 கணக்கெடுப்பின் படி 12 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். பிரேசில் நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் இதுவும் ஒன்று. கேப்டவுன் போலவே 2015 ஆம் ஆண்டில் இங்கு தண்ணீர் பஞ்சம் உச்சக்கட்டத்தில் இருந்தது. அப்பொழுது லாரிகள் மூலம் தண்ணீரானது கடத்தப்பட்டு வீட்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த தண்ணீர் திருட்டை தடுக்க போலிஸ் நடவடிக்கை எடுத்தது. ஆனாலும் திருட்டை தடுக்க போலீசார் பெரும்பாடுபட்டனர். தண்ணீர் பிரச்சனை 2016 ஆம் ஆண்டு தீர்க்கப்பட்டு பின்னர் மீண்டும் அரசின் மெத்தனத்தால் தண்ணீர் பஞ்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளது சா பாலோ நகரம்.

பெங்களூரு


இந்தியாவின் தொழில்நுட்ப நகரமான பெங்களூரு எதிர்காலத்தில் தண்ணீர் இல்லா நகரமாகும் நிலை உருவெடுத்து வருகிறது. பெங்களூரு நகரத்தில் தொழில் வளர்ச்சியாலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மக்கள்தொகை பெருக்கத்தாலும் அந்நகரத்தின் நீர் மற்றும் கழிவு நீர் மேலாண்மை நிர்வாகிகளுக்கு பெரும் சிரமத்தை அளித்துள்ளது. இங்குள்ள பெரும்பாலான ஏரிகள் மாசடைந்த நிலையில் உள்ளன. மேலும் 85% தண்ணீரானது குடிப்பதற்கு உகந்தது இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூரில் 1970களில் 285 ஏரிகள் இருந்துள்ளன. ஆனால் 2017 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் 194 ஏரிகள் மட்டும் தான் உள்ளன. இதுவே மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது. அரசு மீண்டும் குழாய் முறையை கொண்டுவர வலியுறுத்தியுள்ளது. 2030க்குள் இந்தியா முழுவதும் 50% நீரானது குறையும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங்


சீன தலைநகரமான பெய்ஜிங்கும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ளவுள்ளது. உலக மக்கள் தொகையில் 20% மக்கள் தொகையுடைய நாடு சீனா, ஆனால் அங்கு 7% தண்ணீர்தான் உபயோகத்திற்கு உகந்ததாக உள்ளது. 1997ஆம் ஆண்டு நீர் மாசுபாடு காரணமாக மிகப்பெரிய நீர்த்தேக்கம் மூடப்பட்டதும் இதற்கு ஒரு காரணமாகும். பெய்ஜிங்கில் 2014ஆம் ஆண்டு 20 மில்லியன் மக்கள்தொகையில் ஒரு நபருக்கு 145 கனமீட்டர் நீர் தான் இருந்தது. 2000 முதல் 2013 வரை மட்டுமே நீரின் அளவானது 13% வரை குறைந்துள்ளது என்று கொலம்பிய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கெய்ரோ


எகிப்தின் தலைநகரமான கெய்ரோவிலும் தண்ணீரின் நிலையானது மிகவும் மோசமாகவுள்ளது. இங்குள்ள உலகப் புகழ்பெற்ற நைல் நதியானது தொழிநுட்ப வளர்ச்சியினால் 95% மாசடைந்துள்ளது. இங்கு வேளாண் கழிவுகள் மற்றும் குடியிருப்புகளின் கழிவுகள் கலப்பதால் நைல் நதி மாசடைந்துள்ளது. ஐ.நா சபையின் கணிப்பின் படி 2025க்குள் தண்ணீர் குறைபாடு அதிகரித்துவிடும் தெரிகிறது.

ஜகார்தா


இந்தோனிஷிய தலைநகரான ஜகார்தாவிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலகில் உள்ள கடற்கரை நகரங்களில் ஏற்படும் கடல் நீர் மட்ட உயர்வு இங்கும் ஏற்பட்டுள்ளது. 40% நீர் கடல் மட்டத்திற்கு கீழ் உள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. சட்டவிரோதமாக கிணறுகள் தொண்டி தண்ணீரை உபயோகிப்பதால் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் தண்ணீர் பற்றாக்குறைக்கு ஆளாகியுள்ளனர். இங்கு மழை பொழிந்தாலும் அதிகமான கான்க்ரீட் தரைகள் உள்ளதால் நீரானது நிலத்தடியில் செல்வதில்லை.

மாஸ்கோ


ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் 35% முதல் 60 % வரையிலான நீரானது தூய்மையாக உள்ளதா என்று இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை என்று சமூக அமைப்புகள் தெரிவிக்கின்றன. அடுத்த காலாண்டிற்கு ரஷ்யாவில் தேவையான தூய்மையான தண்ணீர் உள்ளது. இருந்தாலும் ரஷ்யா இந்த நூற்றாண்டில் அதிகம் மாசினால் பாதிப்படைந்துள்ளது. 70% நீரானது நிலத்தின் மேற்பரப்பை சார்ந்துள்ளது.

இஸ்தான்புல்


துருக்கி நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான இஸ்தான்புல்லில் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து நீரானது 30%குறைந்துள்ளது. இதனால் 14 மில்லியன் மக்கள் பாதிப்படைந்தனர். இந்த நிலை நீடித்தால் 2030க்குள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என அந்நாட்டின் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மெக்ஸிகோ சிட்டி


மெக்ஸிகோ தலைநகரான மெக்ஸிகோ சிட்டியில் தற்போது 2 கோடி மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையானது தற்போது வரை இல்லை. ஆனால் இங்கு வாரத்திற்கு ஒரு முறைதான் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதிலும் சில மணிநேரங்கள் தான் தண்ணீர் அளிக்கப்படுகிறது. 20% மக்கள் தான் அதில் பயனடைகின்றனர். இங்கு சரியான நீர் மேலாண்மை இல்லாததாலும் மோசமான குழாய் வடிவமைப்புகளாலும் 40% நீர் வீணாகிறது.

லண்டன்


இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் ஆண்டுக்கு சுமார் 600 மில்லி லிட்டர் மழைதான் பொழிகிறது. இந்த நிலை நீடித்தால் 2025க்குள் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்க நேரிடும். அதுமட்டுமல்லாமல் 2040களில் தண்ணீர் தேவைக்கு வேறு ஏற்பாடுகளை செய்ய இப்பொழுதே ஆயத்தமாக வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் வல்லுனர்கள். இங்கு மழை பெய்தாலும் 80% தேம்ஸ் மற்றும் லியா நதிகளில் கலக்கிறது.

டோக்கியோ


ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இங்கு வாழும் 3 கோடி மக்கள் தங்கள் நீர் தேவைக்கு ஆறுகள், ஏரிகள் மற்றும் உருகிய பனிக்கட்டிகளை நம்பியுள்ளனர். அத்தனை வழிகளில் கிடைக்கும் நீரும் போதுமானதாக இல்லை. அதே நேரம் 3% நீரானது குழாய்களின் மூலம் சொட்டுவதால் வீணாகிறது. இங்கு 750 தனியார் நிறுவனங்கள் மற்றும் மக்களின் குடியிருப்புகளில் மழை நீரை சேகரித்து பயன்படுத்துகின்றனர்.

மியோமி


அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணம்தான் அதிகம் மழை பெய்யும் மாகாணம். ஆனால் இங்குள்ள மியோமி நகரில் கடல் நீர் மட்டத்தின் உயர்வாலும் உப்பு நீரின் ஊடுருவலாலும் தண்ணீர் வீணாகி மக்களை தண்ணீர் பஞ்சத்திற்கு தள்ளியுள்ளது.

இந்த பட்டியலைப் பார்க்கும்பொழுது சென்னையின் மழையும் நாம் வீணாக்கும் நீரும் நினைவுக்கு வருகின்றன. சென்னை இந்த பட்டியலில் இணையப்போவது எப்பொழுதோ என்ற பயமும் வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT