22 families fined; Holi rain dance performance restricted

கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான ஐ.டி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பகுதியில் வழக்கமாக வழங்கப்படும் அளவை விடக் குறைந்த அளவில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் நோக்கில் பெங்களூரில் காரை குடிநீரில் கழுவ தடை விதித்து பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், தோட்டம், கார் கழுவுதல், கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறினால் 5000 ரூபாயும், தொடர்ந்து தடையை மீறினால் 5000 ரூபாயுடன் தினமும் கூடுதலாக 500 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் குடிக்கும் தண்ணீரை பயன்படுத்தி வாகனங்களை கழுவிய22 குடும்பங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூரில் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூரு நிர்வாகம் விதித்துள்ளது. ஹோலி பண்டிகையை வணிக நோக்கத்திற்காக செயற்கை மழை நடனம், தண்ணீரை பீய்ச்சி அடித்து நடனமாடுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் மற்றும் குழாய், கிணற்று நீரை ஹோலி கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில் பிரபல ஹோட்டல்களில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை நடன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.