ADVERTISEMENT

தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதா ‘என்னென்ன’ செய்தார்? - தமிழ்நாட்டு அரசியலும் ஜோதிடமும்! #2  

04:19 PM Mar 10, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘அம்மா.. அடுத்தும் நீங்களே முதல்வர்..’ என்று எட்டு ஜோதிடர்கள் சொன்னது பலித்ததா? போயஸ் கார்டன் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த ஒரு ஜோதிடர் கணித்தது பலித்ததா?

2006 தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. 188 இடங்களில் போட்டியிட்ட அதிமுக, 61 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. அதிமுக கூட்டணியில் (ஜனநாயக மக்கள் கூட்டணி) இடம்பெற்ற மதிமுக 6 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 இடங்களிலும் வெற்றிபெற்று, மொத்தம் 69 இடங்கள் மட்டுமே, அக்கூட்டணிக்கு கிடைத்தன. திமுக கூட்டணியில் (ஜனநாயக முற்போக்கு கூட்டணி) திமுக 96 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் 67 இடங்களிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கலைஞர் முதலமைச்சரானார்.


‘அழைத்து வாருங்கள் அந்த ஜோதிடரை..’ என்று ஜெயலலிதா உத்தரவிட, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவந்த நாளன்று, அதிமுக மாவட்டச் செயலாளர் ஒருவர், ஜோதிடர் ஜமால் ஜாகிப் வீட்டுக் கதவைத் தட்டினார். டாக்டர் வெங்கடேஷின் அம்மா சந்தானலட்சுமி மூலம் ஜெயலலிதாவுக்கு அறிமுகமான, இஸ்லாமியரான ஜமால் சாகிப், ‘சரவணன்’ என்றே ஜெயலலிதாவால் அழைக்கப்பட்டார். அவர் முன்னால் போய் நின்றார் சரவணன். ‘60லிருந்து 65 வரும்னு சொன்னீங்க. மொத்தம் 69 இடங்களில் வந்திருக்கிறோம். இந்த அளவுக்கு துல்லியமாக உங்களால் எப்படிச் சொல்ல முடிந்தது?’ என்று ஜெயலலிதா கேட்க, ‘எனக்கு ஜோசியம்தான் சொல்லத் தெரியும். பொய் சொல்லத் தெரியாது’ என்றிருக்கிறார் சரவணன்.

விருதுநகரைச் சேர்ந்த ஜமாலின் குடும்பத்தில், ஒவ்வொரு தலைமுறையிலும், ஒருவர் மட்டுமே ஜோதிடராக இருந்துள்ளனர். இவர், ஏழாவது தலைமுறை ஜோதிடர் ஆவார். 2006 தேர்தல் கணிப்பு குறித்து அவர் ‘உலகத்தில் எத்தனையோ பெருமாள் கோவில்கள் உள்ளன? ஏன் திருப்பதியில் மட்டும் உண்டியல் வசூல் கோடி கோடியாகக் கொட்டுகிறது? எல்லாம் நேரம்தான்! மிகச் சிறப்பான ஒரு நல்ல நேரத்தில் திருப்பதி கோவிலைத் தொடங்கியதுதான்! அதுபோல, ஒவ்வொரு கட்சிக்கும் ஆரம்பித்த நாளும் நேரமும் உண்டு. அதிமுக உருவானது மகர ராசியில். அந்தக் கட்சியின் பிறந்த (அறிவிக்கப்பட்ட) நாளையும் நேரத்தையும், கட்சித் தலைமை பிறந்த நாளையும் நேரத்தையும், தேர்தல் நடைபெறும் நாளையும் ‘மேட்ச்’ செய்தேன். எல்லாமே ஜோதிட கணிதம்தான்’ என்று விளக்கியிருக்கிறார்.

2006 சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியோடு அதிமுக கூட்டணி அமைத்தது தோல்விக்கான பிரதான காரணமாக, ஜோதிட ரீதியாக ஜெயலலிதாவிடம் விவரிக்கப்பட்டது. அதனால், அதிமுகவோடு நட்பு பாராட்டி வந்த அந்தக் கட்சியை, 2011 தேர்தலில் எப்படியாவது கழற்றிவிட வேண்டும் என்று ஜோதிட ஆலோசனை சொல்லப்பட்டது. மிகக் குறைவான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கினால், அந்தக் கட்சி தானாகவே முறைத்துக்கொண்டு போய்விடும் என்பதை அறிந்தே, அந்தக் கட்சியிடம் தொகுதிப் பங்கீட்டின்போது வேண்டுமென்றே சிக்கலை ஏற்படுத்தி, கூட்டணியிலிருந்து விலகச் செய்தனர். அக்கட்சியின் தலைமையை, அதிமுக கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதால், அந்தத் தேர்தலை அக்கட்சி புறக்கணிப்பு செய்து, கோபத்தை தணித்துக்கொண்டது.

அந்த 2011 தேர்தலில், அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளும் 203 இடங்களில் வென்று ஜெயலலிதா முதலமைச்சரானாலும் கூட, 27-09-2014-ல் கர்நாடக சிறப்பு நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருட சிறைத்தண்டனை விதித்தது. அதனால், அவருடைய எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டு, முதலமைச்சர் பதவியை இழந்தார்.


அந்த 27-ஆம் தேதி நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா வழங்கவிருக்கும் தீர்ப்பு தனக்கு சாதகமாகத்தானே இருக்கும்? என்று முன்கூட்டியே ஜோதிட ஆலோசனை கேட்ட ஜெயலலிதாவிடம், ‘இந்த நாள் உங்களுக்கு நன்றாக இல்லை. எலியைப் பிடிக்கிற மாதிரி உள்ளே பிடிச்சு போட்ருவாங்க..’ என்று சரவணன் கூற, ‘மோடி என்னுடைய பிரதர். அப்படியெல்லாம் நடக்காது..’ என்று ஜெயலலிதா சிரித்திருக்கிறார். ‘அதெல்லாம் மோடியா? இந்த லேடியா? என்று நீங்கள் பேசுவதற்கு முன்பு வரையிலும்தான்.. இந்த நாளில் நீங்கள் சிறைபுக வேண்டியிருக்கும்?’ என்று சரவணன் சொல்ல.. அந்தக் கணிப்பை அலட்சியம் செய்தார்.

அவர் சொன்னது போலவே ஜெயலலிதா (பெங்களூரு) சிறையில் அடைக்கப்பட, ‘எந்த நாளில் பிணையில் வெளிவர முடியும்? எந்த நாளில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடுதலை கிடைக்கும்?’ என்பதை, சிறைக்கே சென்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்தார் சரவணன். மேல்முறையீட்டில், விசாரணை நீதிமன்றத் தீர்ப்பை 2015-ல் நீதிபதி குமாரசாமி தள்ளுபடி செய்துவிட, விடுதலையானார் ஜெயலலிதா. கணிப்பு பிரகாரம் எல்லாம் நடந்துவிட, ஜெயலலிதாவுக்கு ஜோதிடத்தின் மீதிருந்த நம்பிக்கை பன்மடங்கு அதிகமானது.

சிறைத்தண்டனை, விடுதலை என அரசியல் வாழ்க்கை புரட்டிப் போடப்பட்ட நிலையில், 2016 தேர்தலை வேறு ஜெயலலிதா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தமிழகத்தில் 5 வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் பழகிவிட்ட நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் கடும் விமர்சனத்துக்கு ஆளான தன்னை எப்படி 2016-லும் தொடர்ந்து முதலமைச்சர் நாற்காலியில் அமரவைப்பார்கள்? என உள்ளுக்குள் ஜெயலலிதாவுக்கு சந்தேகம் வலுத்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், ‘என்ன செய்தால் மீண்டும் ஆட்சியை அதிமுகவால் கைப்பற்ற முடியும்?’ என்று சரவணனிடம் ஜோதிட ஆலோசனை கேட்டார்.

‘இந்தியாவில் எந்த மாநிலத்திலும், எந்தவொரு பிரதான கட்சியும், செய்யாத ஒரு காரியத்தை, இந்தத் தேர்தலில் நீங்கள் செய்ய வேண்டும்?’ என்று சரவணன் கூற, சசிகலா அதிர்ந்தார். ‘அக்கா.. நீங்களும் சரவணனுமாச்சு..’ என்று பின்வாங்கினார். ஜெயலலிதாவோ, மிகத் துணிச்சலாக ஒரு முடிவெடுத்தார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக என்ன செய்தது தெரியுமா?

எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் வென்று ஆட்சியமைக்கும்? - தமிழ்நாட்டு அரசியலும் ஜோதிடமும்! #3

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT