Skip to main content

அமமுக வேட்பாளரை கைது செய்ய அமைச்சர் அழுத்தமா..?

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

Is the Minister pressuring to arrest the ADMK candidate?

 

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடுகிறார். திமுக சார்பில் மணிமாறன் என்பவரும், அமமுக சார்பில் மருதுசேனா அமைப்பைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவரும் போட்டியிடுகின்றனர். ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் உதயகுமார் தரப்புக்கும் மருதுசேனா அமைப்பைச் சேர்ந்த ஆதிநாரயாணன் தரப்புக்கும் மோதல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமமுக ஆதிநாரயணன், திருமங்கலம் தொகுதியில் இன்று (18.03.2021) காலை வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். இவர் மனுதாக்கல் செய்ய வந்தால் அவரது மனுவை ஏற்க வேண்டாமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

Is the Minister pressuring to arrest the ADMK candidate?

 

அந்த உத்தரவில், ‘ஆதிநாரயணன் மீது திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் கொலைக் குற்ற வழக்கு இருக்கிறது. இந்த வழக்கில், தன்னை கைது செய்யக்கூடாது என 23.12.2020ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எட்டு வாரங்களுக்குத் தடை உத்தரவை பெற்றுள்ளார். அந்த தடை உத்தரவு, 16.02.2021ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு அவர் எந்தத் தடை உத்தரவும் பெறப்பட்டதாக தெரியவில்லை. ஆதிநாரயாணனை கைது செய்ய தொடர்ந்து தேடிவந்த நிலையில் அவர் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை கைது செய்ய வேண்டியுள்ளதால், அவர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தால் அனுமதியளிக்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.   

 

இதுதொடர்பாக நாம் ஆதிநாரயணனிடம் கேட்டபோது, “திருமங்கலம் தொகுதியில் எனக்கு வாக்கு வங்கி அதிகம். நான் உதயகுமாரை எதிர்த்து நின்றால் நிச்சயம் அவர் தோல்வியை தழுவுவார். இதன் காரணமாகவே என்னை கைது செய்ய உதயகுமார் துடிக்கிறார். மேலும் நான் மனு தாக்கல் செய்தால் அதனை நிராகரிக்கச் சொல்லியும் அழுத்தம் கொடுக்கிறார்கள். போலீஸ் தரப்பிலும், ‘நீங்கள் மனு தாக்கல் செய்ய வந்தால் உங்களை கைது செய்வோம்’ என தெரிவிக்கிறார்கள். என்னை கைது செய்தால் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்; தாலுகா அலுவலகத்தைப் பூட்டுவேன். அவர் தோற்பார் என்ற காரணத்திற்காக என்னை கைது செய்வது ஜனநாயக மீறல். களத்தில் நின்று மக்களிடம் வாக்கு கேட்போம். மக்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அதுவே ஜனநாயகம்” என்று தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்