ADVERTISEMENT

சபரிமலை தடையை உடைத்து எழுவோம்! - கனகதுர்கா பேட்டி

05:25 PM Jan 03, 2019 | Anonymous (not verified)

சமீப காலமாக கேரளாவில் சூட்டைக் கிளப்பிக் கொண்டிருந்த சபரிமலை கோவில் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கோரி சம உரிமை முழக்கமிட்டு, வனிதா மதில் என்கிற மாபெரும் மனிதச் சங்கிலியை கேரள பெண்கள் முன்னெடுத்தது இந்தியா முழுவதும் பேசுபொருளானது.

ADVERTISEMENT

அதேநாளின் நள்ளிரவில் கேரளாவைச் சேர்ந்த பிந்து மற்றும் கனகதுர்கா ஆகிய இரண்டு பெண்கள், சபரிமலைக் கோவிலில் வழிபட்டு வரலாற்றைத் திருத்தி எழுதினர். சம உரிமை, சமத்துவம் பேணும் பலரும் இதனைப் பாராட்டி வாழ்த்தி வரும் நிலையில், பாஜகவினர் கேரளாவில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றனர்.

ADVERTISEMENT

பிந்து மற்றும் கனகதுர்கா


இந்நிலையில், சபரிமலைக் கோவிலில் வழிபட்டுவிட்டு, தற்போது தலைமறைவாக இருக்கும் கனகதுர்காவிடம் ‘தி க்விண்ட்’ ஆங்கில இணைய இதழின் சார்பில் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பேட்டியின் தமிழாக்கம் இதோ...

இரவு 1.00 - 1.30 மணியளவில் பம்பை ஆற்றில் இருந்து சன்னிதானத்தை நோக்கி நடந்து சென்றோம். 3.00 - 3.30 மணியளவில் சன்னிதானத்தை அடைந்தோம். அங்கு ஐயப்ப சாஸ்தாவைக் கண்டு மனமுறுக வழிபாடு செய்துவிட்டு திரும்பினோம். இதற்கிடையில் எங்களோடு வழிபாட்டிற்காக வந்திருந்த பக்தர்கள் யாரும் அச்சுறுத்தல் செய்யவில்லை. எந்த வன்முறையும் நிகழவில்லை. நாங்கள் அவர்களோடு சேர்ந்தே வழிபாடு செய்தோம். அதுதான் நாங்கள் கண்ட அற்புதம்..

பிரச்சனை செய்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்.-ன் ‘ராஷ்டிர’ அஜென்டாவை மையமாகக் கொண்டு செயல்படுகிறார்கள். அவர்கள்தான் சச்சரவை உண்டு பண்ணுகிறார்கள். சாதாரண பக்தர்களால் எந்தவித பாதிப்பும் அங்கு கிடையாது. கடந்த டிசம்பர் 23ஆம் தேதி நாங்கள் இதேபோல் சன்னிதானத்தை நெருங்கும்போதுகூட, பலர் கூச்சலிட்ட படியே எங்களைச் சுற்றி வளைத்தனர். எங்கே எங்களைத் தாக்கிவிடுவார்களோ என்று பயந்தபோது, போலீசார் பாதுகாப்பளித்து வெளியில் கூட்டி வந்தனர். அப்போது நாங்கள் எப்படியாவது மற்றவர்களோடு சேர்ந்து சாஸ்தாவை வழிபட்டாக வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டோம். அதற்காகவே, நள்ளிரவைத் தேர்வுசெய்து கிளம்பினோம்.

பாரம்பரியங்கள், ஆச்சாரங்கள் காலத்திற்கு ஏற்றது போல் மாற்றியமைக்கப் படவேண்டும். முன்காலங்களில் பெண்கள் அனுபவிக்காத கொடுமைகளே கிடையாது. ஆனால், அவற்றையெல்லாம் கால மாற்றங்களால் வென்றெடுத்திருக்கிறோம். நாம் ஒவ்வொரு முறை உரிமைகோரி முன்வந்த போதெல்லாம், இதுபோன்ற எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி இருந்ததை மறுக்க முடியாது.

எனக்கு அரசியல் பின்புலம் இருப்பதாகவும், மாவோயிஸ்டு என்றும் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமே கிடையாது. சபரிமலைக் கோவிலில் பெண்களை வழிபட அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோதே முடிவு செய்ததுதான் இது. அதற்கு முன்புதான் பெண்களுக்கு தடை போட்டிருந்தார்களே.

பெண்கள் தங்களது தேவைகளை, விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்ள நினைக்கும்போது, அவை தோற்றுவிடுமோ என்று அஞ்சுகின்றனர். குடும்பமோ, சமூகமோ அவர்களது விருப்பத்தை அங்கீகரிப்பதில்லை. உடனே அவர்கள் அவற்றைக் கைவிட்டு விடுகிறார்கள். ஒரு பெண்ணாகப் பிறந்த காரணத்திற்காகவே எனது உரிமைகளும், விருப்பங்களும் நிராகரிக்கப்படுவதை, என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனிவரும் காலங்களில் சபரிமலையில் பெண்கள் சக பக்தர்களோடும், கணவன்மார்களோடும் சேர்ந்து வழிபடக் கூடிய சூழல் ஏற்படும் என்று நம்புகிறேன்.

நன்றி - ‘தி க்விண்ட்’ ஆங்கில இணைய இதழ்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT