ADVERTISEMENT

’’விடிய விடிய காத்துக்கிடந்தோம்...!’’ -தமிழகமெங்கும் தவிப்பு!

09:40 PM Aug 18, 2019 | kalaimohan

அருப்புக்கோட்டையில் எங்கெங்கும் வாடிப்போன முகங்களாகவே தென்பட்டன. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் எனப் பலரும், சைக்கிளிலும் கால்நடையாகவும், தண்ணீர் கிடைக்கும் இடம் தேடி, காலிக்குடங்களோடு அலைந்தவண்ணம் இருந்தனர்.

ADVERTISEMENT


இப்படியே போச்சுன்னா சாக வேண்டியதுதான்!

குடிநீரினைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென்று அருப்புக்கோட்டை நகராட்சி அறிவிப்பு செய்திருந்த சொக்கலிங்கபுரம் குடிநீர் மேல்நிலைத் தொட்டியின் கீழ் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த நாகராஜன் “இந்த ஊருல இப்ப தண்ணீர்ப் பஞ்சம் மக்களை ஆட்டி வைக்குது. இப்படியே போச்சுன்னா.. அடுத்து சாப்பாட்டுக்கும் பஞ்சம் வந்து மக்கள் சாக வேண்டியதுதான்.” என்று தான் வாழும் ஊரின் உயிர்ப் பிரச்சனையாக தண்ணீர் பற்றாக்குறை ஆகிவிட்டதை வேதனையுடன் சொன்னார்.

ADVERTISEMENT


“உடம்பெல்லாம் அப்படி ஒரு அரிப்பு. நாங்கள்லாம் குளிச்சு எத்தனை நாளாச்சு தெரியுமா?” நத்தலிங்கம் தெருவில் வசிக்கும் வீரலட்சுமி உள்ளிட்ட பெண்கள் கேட்ட இந்தக்கேள்வி, அம்மக்களின் பரிதாப நிலையை உணர்த்தியது. “உப்புத் தண்ணிக்கே மாசம் ஆயிரம் ரூபாய் செலவழிக்கிற நிலைக்கு எங்களைக் கொண்டுவந்து விட்ருச்சு இந்த அரசாங்கம். குழாய்ல தண்ணி வரும்னு நேத்து விடிய விடிய காத்துக் கிடந்தோம். வரவே இல்ல. இன்னிக்கும் தூக்கம் போயிரும். தண்ணி பிடிக்கிறதுக்கே எங்க நேரத்தையெல்லாம் செலவழிச்சிட்டா.. பிழைக்கிறதுக்கு உழைக்கிறதுக்கு எங்கே நேரம் இருக்கு? இந்தமாதிரி ஒரு கொடுமை இதுவரைக்கும் வந்ததில்ல.” என்று தலையில் அடித்துக்கொண்டார்கள்.


“நாங்க இருக்கிறது நாலாவது வார்டு. எங்க ஏரியாவுக்குத் தண்ணி விட்டு 25 நாளாச்சு. பாருங்க.. தண்டவாளத்தைத் தாண்டி, தண்ணி பிடிக்கிறதுக்காக இம்புட்டு தூரம் வந்திருக்கேன். தாமிரபரணில தண்ணி ஓடுதுங்கிறாங்க. ஆனா.. அந்தத் திட்டத்துல எங்க ஊருக்கு மட்டும் ஏன் தண்ணி வராம இருக்கு? அருப்புக்கோட்டை நகராட்சி சுத்த மோசம். அதிகாரிங்க கண்ணுக்கு முன்னாலதான தண்ணிக்காக மக்கள் இம்புட்டு அவதிப்படறோம். எங்கிட்டு எவ்வளவு கிடைக்கும்னு அவங்களுக்கு அவங்க தேவைதான் பெரிசா இருக்கு. அடிச்சிப் பிடிச்சு வரி வாங்குற நகராட்சி மக்களின் துயரத்தை ஒரு பொருட்டாவே நினைக்கிறதில்ல.” என்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார்.


வேகவேகமாக சைக்கிள் மிதித்து வந்த ராகசுதாவை, ரயில்வே பீடர் ரோட்டிலுள்ள தலைமை குடிநீர் மேல்நிலைத் தொட்டியின் கீழ் நின்ற நகராட்சி லாரியில் தண்ணீர் பிடிக்க விடவில்லை. “எங்க வீட்ல மொத்தம் 8 பேர். ஒரு நாளைக்கு மூணு குடம்தான்னு விரட்டுறீங்களே?.” என்று அங்கு நியாயம் கேட்க, தன்னை எம்.எல்.ஏ. ஆக்கிய அருப்புக்கோட்டை தொகுதி மக்களின் தண்ணீர் தேவைக்கு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். என்ன செய்தார்? என்ற கேள்வி எழுந்தது.

அருப்புக்கோட்டை மட்டுமல்ல. விருதுநகர் மாவட்டம் முழுவதுமே தண்ணீர்ப் பற்றாக்குறையால் அல்லாடுகிறது என அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர். தலைமையில், தங்களின் திருச்சுழி, விருதுநகர், ராஜபாளையம் தொகுதிகளுக்காக, எம்.எல்.ஏ.க்கள் தங்கம் தென்னரசு, சீனிவாசன், தங்கப்பாண்டியன் ஆகியோர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானத்திடம் மனு அளித்தனர். கே.கே.எஸ்.எஸ்.ஆரோ, நகராட்சி அதிகாரிகளோடு கலந்தாலோசித்துவிட்டு, அருப்புக்கோட்டை தொகுதி முழுவதும், சொந்த செலவில் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் தன் பெயரைப் பொறித்து குடிநீர் விநியோகம் செய்துவருகிறார். ஆனாலும், யானைப் பசிக்கு சோளப்பொரி போல, குடும்பத்துக்கு மூன்று குடம் தண்ணீர் என்பது எப்படி போதுமானதாகும்? அதனால்தான், அருப்புக்கோட்டையில் தண்ணீர்ப் பிரச்சனை இன்னும் தலைவிரித்தாடுகிறது.

அருப்புக்கோட்டை நகராட்சி என்னதான் செய்கிறது?


தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 35 லட்சம் லிட்டர் தண்ணீரும், வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 23 லட்சம் லிட்டர் தண்ணீரும் அருப்புக்கோட்டைக்கு கிடைத்து வந்தது. தற்போது, வைகைக் குடிநீர் அடியோடு வருவதில்லை. தாமிரபரணி குடிநீரும் குறைந்த அளவிலேயே திறந்துவிடப்படுகிறது., அருப்புக்கோட்டையில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென்றால், 60 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவையாக உள்ளது. தாமிரபரணி குடிநீர் வருவது வெகுவாகக் குறைந்துவிட்டதால், ஒரு பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை என்றும், இன்னொரு பகுதியில் 20 நாட்களுக்கு ஒருமுறை என்றும் குடிநீர் விநியோகம் சீரற்று போய்விட்டது.

ரயில்வே பீடர் ரோட்டிலுள்ள அருப்புக்கோட்டை நகராட்சி தலைமைக் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் ஏற்றப்படும் குடிநீரானது கடைசிப் பகுதியான தெற்குத் தெருவுக்கு வந்து சேர்வதற்குள், இடையிலுள்ள நெசவாளர் காலனி, முஸ்லீம் தெரு, மணி நகர் போன்ற ஏரியாக்கள் தண்ணீரைப் பிடித்துவிடுகின்றன. அதனால், போய்ச்சேர வேண்டிய பகுதிகளுக்கு முழுமையாகப் போவது தடுக்கப்படுகிறது. எந்தெந்த நாளில் எந்தெந்தப் பகுதிக்கு சரியான அளவில் குடிநீர் போய்ச் சேரவேண்டும் என்ற விஷயத்தில் நகராட்சி அக்கறை செலுத்துவதில்லை. அதனால், ஒரு பகுதியில் 10 மணி நேரமாகவும் இன்னொரு பகுதியில் 6 மணி நேரமாகவும் குளறுபடியாக குடிநீர் விநியோகம் நடக்கிறது. 13, 14 மற்றும் 15-வது வார்டுகளில் 20 நாட்களுக்கு ஒருமுறை வரும் குடிநீரும் வராமல் போனதால், கடந்த 6-ஆம் தேதி, அந்தப்பகுதி மக்கள் பந்தல்குடி சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.

அருப்புக்கோட்டை நகராட்சி உதவி பொறியாளர் காளீஸ்வரியைச் சந்தித்து ‘மக்களை ரோட்டுக்கு வரவைத்து விட்டீர்களே?’ என்றோம்.

மழை, காற்று, மின் தடை, குழாய் வெடிப்பு, நீர்க்கசிவு என குடிநீர் விநியோகிக்கும் நாட்கள் தள்ளிப்போவதற்கும், விநியோகம் குறைந்துபோனதற்குமான காரணங்களை விளக்கிவிட்டு “கடந்த ஆண்டு நல்ல மழை. வைகையில் இருந்து தண்ணீர் வந்ததால், 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க முடிந்தது. தற்போது, 9 நாட்களுக்கு ஒருமுறை என்றாகிவிட்டது. இங்கே யார் வீட்டு போர்லயும் தண்ணீர் இல்லை. 200 அடி வரையிலும் தண்ணீர் இல்லை. நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துபோனது. ட்வாட் போர்டுல இருந்து எந்தக் குறுக்கீடும் இல்லாமல், உரிய அளவில் அருப்புக்கோட்டைக்கு தண்ணீர் வந்தால், விநியோகத்தில் ஒரு சிக்கலும் இருக்காது. எல்லாவற்றுக்கும் மழை ஒன்றுதான் தீர்வு.” என்று கைகளை விரித்து மேலே பார்த்தார்.

தமிழகம் முழுவதுமே அருப்புக்கோட்டை நிலைதான்! தற்போது மக்களின் தவிப்புக்கு இயற்கை தற்காலிமாக துணை நிற்கிறது. ஆம். தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT