ADVERTISEMENT

"அத்வானிக்கு அரெஸ்ட்...ராஜீவ் காந்திக்கு கமிஷன்" ஏன் கொண்டாடப்படுகிறார் வி.பி சிங்..?

05:35 PM Jun 25, 2019 | suthakar@nakkh…

"மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவருக்கு சிலரகசிய கோப்புகள் வருகிறது. படித்து பார்க்கிறார், யார் தலைமையின் கீழ் அவர் மத்திய அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கிறாரோ அவர் மீதே ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது. உடனடியாக இதுதொடர்பாக விசாரிக்க ஆயத்தமாகிறார் அவர். குற்றச்சாட்டுக்கு ஆளானவர் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. அவர் மீது விசாரணை குழுவை அமைக்க முயன்றவர் வேறுயாரும் அல்ல மண்டல் நாயகன் வி.பி சிங்தான்.

இட ஒதுக்கீட்டு நாயகன் என்று இன்றளவும் போற்றுப்படும் வி.பி சிங் அவர்களுடைய அரசியல் வாழ்க்கை காங்கிரஸ் கட்சியில் இருந்தே தொடங்கியது. இன்றைய அரசியல்வாதிகளை போல் "துடைத்துக்குவேன்" பேர்வழி அல்ல அவர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனதன் காரணமாக தன்னுடைய முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தவர். அவருக்கு முன் பதவியேற்ற 6 பிரதமர்களால் செய்ய முடியாத பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வெற்றிகரமாக செயல்படுத்தியவர். அதற்காக தன்னுடைய பிரதமர் பதவியை காவு கொடுத்தவர். பிரதமர் பதவி மீண்டும் தனக்கு கிடைத்தபோதும் அதனை, உடல்நிலையை காரணம் காட்டி வேண்டாம் என்று மறுத்தவர் என, பல ஆச்சரிங்களுக்கு சொந்தக்காரரான அவரின் பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT


1969 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர், 1971ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக மக்களவைக்கு சென்றார். இந்திரா காந்தி அமைச்சரவையில் வர்த்தகத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். கொடுக்கும் பதவிகளில் எல்லாம் இவர் காட்டும் அக்கறையை பார்த்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி 1980 ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வராக வி.பி சிங்கை நியமித்தார். உ.பி மாநிலமே அப்போது கொள்ளைகாரர்கள் தொல்லையினால் தத்தளித்தபோது மாநிலத்தின் முதல்வர் பொறுப்பு ஏற்ற அவர், வெகு விரைவில் கொள்ளையர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என்று உறுதி அளித்திருந்தார். ஆனால் மாநிலத்தில் நடக்கும் கொள்ளை சம்பவங்களை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக விரக்தியான அவர், தன்னுடைய முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். " கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாததால் நான் இந்த முடிவை எடுக்கிறேன்" என்று தன்னுடைய ராஜிநாமாவுக்கு காரணம் சொன்னார் வி,பி சிங்.

ADVERTISEMENT

இந்திரா மறைவுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் அதிக முக்கியத்துவத்தை பெற்ற அவர், ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில், நிதியமைச்சராக பொறுப்பேற்றார். நிதி அமைச்சராக வி.பி சிங் இருந்த காலத்தில், முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகாருக்குள்ளான அம்பானி, அமிதாப் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களின் வீடுகளில் ரெய்டு நடத்தினார். ராஜீவ் காந்தியோடு, அமிதாப் பச்சன் நல்ல நட்பில் இருப்பது தெரிந்தும், பதவியை பற்றி சிறிதும் கவலை கொள்ளாது அவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தார். வி.பி சிங்கின் நடவடிக்கையால் கடும் அதிருப்தி அடைந்த ராஜீவ், அவருக்கு அணை போடும் விதமாக அவரிடம் இருந்த நிதியமைச்சர் பதவியை பறித்து பாதுகாப்புத்துறைக்கு அமைச்சர் ஆக்கினார். அங்கேயும் அவரது அதிரடிகள் குறைந்தபாடில்லை. ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்கியதில் சில முறைகேடுகள் நடந்ததாக அவருக்கு தகவல் கிடைக்கிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் ராஜீவ் காந்தி மீதே குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், இதுதொடர்பாக விசாரித்தார் வி.பி சிங். இதனால் கொதித்த பிரதமர் ராஜீவ் காந்தி அவரை மந்திரி சபையில் இருந்து நீக்கினார். இருந்தும், கொண்ட கொள்கையில் இருந்து விலகாத அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, ஜன மோர்ச்சா என்ற தனிக்கட்சியை ஆரம்பித்தார். தனி மரம் தோப்பாகாது என்பதை ஆரம்பத்திலேயே கண்டுப்பிடித்த அவர், மாநில கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க விரும்பினார். அவர் விரும்பியது போன்றே திமுக, தெலுங்கு தேசம் முதலிய கட்சிகளை உள்ளடக்கிய தேசிய முன்னணியை அமைத்தார். தேர்தலில் குறிப்பிடத்தக்க தொகுதிகளை வென்ற தேசிய முன்னணிக்கு, கம்யூனிஸ்ட மற்றும் பாஜக ஆதரவு தரவே இந்தியாவின் 7வது பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார் வி.பி சிங்.


அவர் பதவியில் இருந்த நாட்கள் வெறும் 11 மாதம் 8 நாட்கள் மட்டுமே. ஆனால் இந்த கால கட்டத்தில் அவர் செய்த சாதனைகள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்ற அவர், பி்ற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியது தான். கூட்டணி கட்சியான பாஜகவின் கடும் எதிர்ப்புகளின் மத்தியில் அதை நாடாளுமன்றத்தில் சாத்தியமாக்கினார். தனது பதவிக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தாலும் கொள்கையில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என்பதை நிரூபித்தார். இதற்கு முத்தாய்ப்பாக அத்வானியின் ரத யாத்திரைக்கு தடைவிதித்து அவரை கைது செய்ய உத்தவிட்டார். இதன் காரணமாக தனது பதவி உடனடியாக பறிபோகும் என்பதை அறிந்திருந்தும், அத்வானியின் ரதத்தை நகரவிடாமல் பார்த்துக்கொண்டார். இதன் காரணமாக பாஜக தன்னுடைய ஆதரவை விலக்கிக்கொள்ள, பதவியிழந்தார் வி.பி சிங். " இன்று என்னுடைய கால்கள் உடைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நான் அடைய வேண்டிய இலக்கை என்றோ அடைந்துவிட்டேன். இனி மரியாதையோடு ஆட்சியை விட்டு இறங்குகிறோம். அதற்காக பெருமைபடுகிறோம். அரசியலில் இறுதியானது, கடைசியானது என்று எதுவுமே இல்லை. இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றியதில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட பிரதமர் பதவி ஒன்று எனக்கு சந்தோஷத்தை கொடுக்காது" என்று கர்ஜித்துவிட்டு நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினார்.

இந்த நிகழ்வுகளுக்கு பிறகு அரசியலில் இருந்து விலகி இருந்த அவரை, 1996 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றிருந்த ஐக்கிய முன்னணியை சேர்ந்த தலைவர்கள் பிரதமராக பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு அவரை வற்புறுத்தியும், தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி அதனை மறுத்தார். பதவிக்காக தவளை ஓட்டத்தை பார்த்த தமிழகத்துக்கு வி.பி சிங் அரசியல் பயணம் என்பது ஒரு ஆச்சரியம்தான்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT