Advertisment

1991 - 1996 அதிமுக ஆட்சி மீது வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, தடா சட்டத்தைத் தவறான நோக்கங்களுக்காக அரசு பயன்படுத்தியது என்பதுதான். 1991 தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த ஜெயலலிதா, இந்த தடா சட்டத்தின் மூலம் தனக்கு வேண்டாதவர்களை எல்லாம் கைது செய்ததாக எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டின. மாநிலத்தின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கலாம் எனச் சந்தேகப்படும் ஒரு நபரை இந்த சட்டத்தின்கீழ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்து ஒரு வருடம் வரை எந்தவிதமான விசாரணையும் இன்றி சிறையில் அடைக்க முடியும். பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த சட்டத்தைத் தமிழக அரசும் அக்காலகட்டத்தில் அதிகம் பயன்படுத்தியது.

அதில் குறிப்பாக விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் இந்த சட்டத்தின்கீழ் அதிகம் கைது செய்யப்பட்டனர். அந்தவகையில், 1989 - 1991 ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் உள்துறை செயலாளராக இருந்த நாகராஜன் என்ற ஐஏஎஸ் அதிகாரி இந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி மற்றும் அவரது கணவர் ஜெகதீசன் ஆகியோர் பத்மாநாபா கொலை வழக்கு மற்றும் ஈழத்தமிழர் வழக்கு தொடர்பாகத் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கைது நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நக்கீரன் சுப்புலட்சுமி மற்றும் ஜெகதீசன் இருவரையும் ரகசியமாக சிறைக்குள் சென்று சந்தித்தது. அப்போது அவர்கள் அளித்த பிரத்யேக பேட்டியும், முன்னதாக அவர்கள் கைதின் போது நடைபெற்ற நிகழ்வுகளும் 25.01.1992 தேதியிட்ட நக்கீரனில் வெளியானது.

Advertisment

The incident where Muthulakshmi Jegadeesan was arrested under the TADA Act

சுப்புலட்சுமி கைது

ஜனவரி 9 ஆம் தேதி அதிகாலை.

மார்கழி மாதப் பனியில் ஈரோடு நகரம் நடுங்கியபடி உறங்கிக்கொண்டிருந்தது. அதே நேரத்தில் சென்னையில் இருந்து வந்த ‘‘டான்சிட்’’ என்ற சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் ஈரோடு காளிங்கராயன் பாளையத்தில் உள்ள அந்தத் தோட்டத்து வீட்டைச் சூழ்ந்தனர். சுற்றி வர விவசாயப் பயிர்கள் சூழ்ந்துநிற்க அதற்கு காவல் போல போலீசார் நிற்க போலீஸ் படை மெல்ல மெல்ல முன்னேறி வீட்டுக் கதவை நெருங்கியது.

தட்..தட்...தட்!

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு விழித்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் கதவைத் திறக்க இன்ஸ்பெக்டர் தங்கமுத்து. அவருக்கு சற்று தூரத்தில் மஃப்ளரைக் கழுத்தில் சுற்றியபடி ‘க்யூ’ பிராஞ்ச்எஸ்.பி.ராமகிருஷ்ணன்.

சார்! ‘‘பத்மநாபா கொலை வழக்குல அரெஸ்ட் பண்ண வந்துருக்கோம்.’’

என்ன ‘தடா’வா?

ஆமாம்.

நினைத்துக் கொண்டிருந்தது நடந்து விட்டது என நினைத்த ஜெகதீசன் வேகமாக உள்ளே சென்று சுப்புலட்சுமியை எழுப்பி விபரம் சொல்கிறார். இதற்குள் வீட்டுக்குள் வந்து விட்டனர் டி.எஸ்.பி.அரங்கநாதன். இன்ஸ்பெக்டர் தங்கமுத்து, எஸ்.பி.ராமகிருஷ்ணன் மூவரும்.

இதோ வாரண்ட்!

வாங்கிப் பார்த்த சுப்புலட்சுமி அதை முழுவதும் படிக்கவில்லை. திருப்பித் தந்து விட்டு புறப்பட ஆயத்தம் செய்கிறார். கொட்டாவி விட்டபடி வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார் ஜெகதீசன்.

சார்! உங்களையும்தான் அரெஸ்ட் பண்ணப் போறோம்!.. நீங்களும் ரெடியாயிருங்க. - என்று ஒரு அதிகாரி சொன்னவுடன்தான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ரகசியம் இருவருக்கும் புரிந்தது.

கருணாநிதிக்கும் கட்சிக்காரர்களுக்கும் தகவல் சொல்ல போனை எடுக்கிறார் சுப்புலட்சுமி. அது ஏற்கெனவே ‘கட்.’ யாருக்கும் தகவல் சொல்ல முடியாமல் சோகமாக சுப்புலட்சுமி மற்றும் அவரது கணவர் ஜெகதீசன். வந்த வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்ட திருப்தியில் கியூ பிராஞ்ச்சும் வேனில் அமர வேன் திருச்சி நோக்கி தன் ஓட்டத்தைத் தொடங்கியது.

திருச்சியில்

திருச்சி கோர்ட்.

சுப்புலட்சுமி ஜெகதீசனின் கைது திருச்சியையே ஒரு கலக்கு கலக்க கோர்ட் வாசலில் தி.மு.க.வின் திருச்சி பிரமுகர்கள் உட்பட ஏகப்பட்ட கூட்டம். எல்லோர் முகங்களிலும் எப்ப கொண்டு வருவாங்க! என்ற எதிர்பார்ப்பு. இருவரையும் கொண்டு வந்த வேன் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் ஸ்டேசன் முன் நிற்க பயங்கர போலீஸ் பாதுகாப்புடன் இறக்கப்பட்ட இருவரும் அருகில் உள்ள போலீஸ் கிளப்பில் அமர்த்தப்பட்டனர். இருவரிடமும் விசாரணை என்ற பெயரில் காலம் கடத்திக் கொண்டிருந்தனர் போலீசார்.

கோர்ட் முன் கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. ஏற்கெனவே தடாவில் கைது செய்யப்பட்ட ஃபோட்டோ கிராபர் ஜானி உட்பட பதினாறு பேர் நீதிபதி சித்திக் முன் ஆஜர் படுத்தப்பட்டு மார்ச் 3 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டனர். இருவரையும் ஏற்றிக் கொண்டு வந்த வேன் சரியாக 12.2௦ க்கு கோர்ட் முன் வந்து நின்றது. கைது பாதிப்பு ஏதும் இன்றி சிரித்த முகத்துடன் இறங்கினர் தம்பதிகள்.

கோர்ட்டின் பின்புற வாசல் வழியாக உள்ளே கொண்டு செல்லப்பட்டு நீதிபதி சித்திக் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். இருவரையும் ஜனவரி 3௦ தேதி வரை மதுரை சிறையில் ‘ரிமாண்ட்’டில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி சித்திக். சிரித்த முகம் மாறாமல் வேன் ஏறி வந்த சுப்புலட்சுமி தன்னைப் பார்க்க வந்த பாலகிருஷ்ணனிடம், ‘‘தைரியமா இருக்கேன், தலைவரிடம் சொல்லுங்க’’ என்று கையாட்டி விட்டு வேனில் ஏறினார். வேன் போலீஸ் கிளப் சென்று பின்னர் மதுரை நோக்கி விரைய ஆரம்பித்தது.

அடக்குமுறை நீடித்தால் – வை.கோ.எச்சரிக்கை!

சுப்புலட்சுமி கைது செய்யப்பட்ட 9 ஆம் தேதி ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் வை.கோபால்சாமியின் பொதுக்கூட்டம் ஏற்பாடாகி இருந்தது. ‘‘வை.கோ.வும் ஈரோட்டில் கைது செய்யப்படலாம்’’ என்ற புரளி ஒன்று கிளப்பி விடப்பட ஈரோடு தி.மு.க.வினரே எதிர்பார்க்காத அளவில் அபாரமான கூட்டம். பேசியவர்கள் எல்லாம் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சித்தனர். வை.கோ. மிக ஆவேசமாகத் தன் பேச்சை ஆரம்பித்தார். ‘‘எங்கு அடக்குமுறை பிரயோகிக்கப் படுகிறதோ அங்கே ஆயுதக் கலாச்சாரத்தைத் தடுக்க முடியாது. நான் வன்முறையைத் தூண்டுபவன் அல்லன். ஜெயலலிதா செய்கின்ற தவறுகளுக்கு அவர் ஏழு கடல், ஏழு மலை தாண்டிப்போய் ஒளிந்தாலும் கொண்டு வந்து நிறுத்துவோம். 12ஆம் தேதி தி.மு.க. நிர்வாகக்குழுக் கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ஊருக்குள் நுழைய விடக் கூடாது என்று முடிவெடுத்தால் நுழைய விட மாடோம்! மந்திரிகள் வரக்கூடாது என்றுமுடிவெடுத்தால் வரவிட மாட்டோம். ஜெயலலிதாவை நுழைய விடக் கூடாது என்று முடிவெடுத்தால் வரும் 22ஆம் தேதி ஜெயலலிதா காங்கேயத்துக்குள் நுழைய முடியாது’’ என்று மிக ஆவேசமாகப் பேசினார். வை.கோ. பேசிய அந்த மிகப் பெரிய ஜனத்திரளில் பெண்கள் எண்ணிக்கை மிகச் சரியாக ஐந்து பேரமட்டுமே!

ஜெகதீசனுக்கு செட்டப் வாரண்ட்!

சுப்புலட்சுமியைக் கைது செய்யக் கொண்டு வந்த வாரண்ட்டில் ‘சுப்புலட்சுமி ஜெகதீசன்’ என்று இருந்திருக்கிறது. சுப்புலட்சுமி எப்பொழுதுமே தன் பெயருடன் ஜெகதீசன் பெயரையும் இணைத்தே எழுதுவது வழக்கம். அதன் அடிப்படையில் வாரண்ட்டிலும் இருந்திருக்கிறது. ஈரோடு போலீஸ் அதிகாரிகளிடம் வாரண்ட் சீட்டைக் காட்டிய ‘க்யூ’ பிராஞ்ச் போலீஸ் சுப்புலட்சுமி ஜெகதீசன் என்று இருப்பதில் சுப்புலட்சுமியை மட்டும் அரெஸ்ட் செய்வதா அல்லது ஜெகதீசனையும் சேர்த்து அரெஸ்ட் செய்வதா? என்று மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டபின் ‘‘சரி இருவரையும் அரெஸ்ட் செய்வோம்’’ என்று முடிவு செய்து நடைமுறைப் படுத்தியது. பின் திருச்சி சென்றதும் சுப்புலட்சுமிக்கு மட்டுமே அரெஸ்ட் வாரண்ட் என்று தெரிந்து கொண்டு இனி ஜெகதீசனை வெளியில் விட்டால் அசிங்கம் என்று கருதி அவசர அவசரமாக ஜெகதீசன் பெயரிலும் வாரண்ட் தயாரித்து உள்ளனர். இருவரையும் திருச்சிக்கு கொண்டு வந்தவுடனே நீதிபதி சித்திக் முன் நிறுத்தப் படாததற்கு காரணம் இதுதான். தனக்கு திருச்சியில் வைத்துதான் வாரண்ட் தயாரிக்கப்பட்டது என்பதை ஜெகதீசன் தனது பேட்டியில் கூறியது குறிப்பிடத் தக்கது.

நான் துணிந்து விட்டேன்...அனுபவிப்பார் ஜெயலலிதா!

ஜெயில் பேட்டி.. மைக்ரோ டேப் ஆதாரத்துடன்...

11.1.92 காலை 11.3௦ மணிக்கு மதுரை சிறையிலுள்ள சுப்புலட்சுமியை ‘வக்கீல் போர்வை’யில் மனோகரன்,ஹக்கீம் பெயரில் சந்திக்கச் சென்றோம். ஜெயிலில் சுப்புலட்சுமியை சந்தித்து விட்டு பொன்.முத்துவும், பி.டி.ஆரும் அப்போதுதான் வெளியே வந்தார்கள். நாம் உள்ளே நுழைந்தவுடன் ஜெயில் அதிகாரிகள் தங்கவேல், செல்வராஜ், பெண்கள் ஜெயிலர் கல்யாணி ஆகியோரால் பரிசோதிக்கப் பட்டோம். இறுதியாக நாம் வக்கீல்தான் என்று உறுதி செய்து சுப்புலட்சுமியை சந்திக்க அனுமதி தந்தார்கள்.

அவரிடம் நாம் நக்கீரனில் இருந்து வந்திருப்பதை பக்குவமாகச் சொல்லி பேட்டி கேட்டபோது புன்சிரிப்போடு பேச ஆரம்பித்தார். நமது கேள்விகளை முதலில் மெல்லிய குரலில் சொல்லி தெளிவு படுத்தியவுடன் உற்சாகமாக நம்மிடம் மனம் திறந்தார். பத்மனாபா கொலை வழக்கில் க்யூ பிராஞ்ச் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களில் நான் 28 வது ஆள். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட விடுதலைப்புலிகள் குண்டு சாந்தன், சிவத்தான், வசந்தன் போன்றவர்கள்தங்குவதற்கு எனது தங்கச்சி உத்தமி வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாக என் மீது பொய் புகார் ஜோடித்து கைது செய்திருக்கிறார்கள். ஜெயலலிதா தனக்கு எதிர்ப்பானவர்களைப் பழிவாங்கவே தடா சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். சம்பந்தமே இல்லாத என்னையும் இவ்வழக்கில் சேர்த்து கைது செய்துள்ளனர்.

எனக்கும் ஜெயலலிதாவுக்கும் தனிப்பட்ட முறையில் விரோதங்கள் கிடையாது. இருப்பினும் அரசியல் மேடைகளில் காரசாரமாக விமர்சித்துள்ளேன். இப்படி தடா பெயரில் கைது செய்தால் நான் தி.மு.க.வில் இருந்து விலகி விடுவேன் என கனவு காண்கிறார். விதவையான என் தங்கை உத்தமியிடம் சோதனை என்ற பெயரில் அராஜக முறையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.மேலும் இந்த கேஸில் என்னைக் கடுமையாக சிக்க வைக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது. அதன் ஆரம்பமாக எட்டு பிரிவுகளில் எங்கள் மேல் வழக்குப் போட்டுள்ளார்கள்.

முன்னாள் உள்துறைச் செயலர் நாகராஜன் தனது வாக்குமூலத்தில் என்னைக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறுகின்றனர். நாகராஜன் சுய நினைவில் வாக்குமூலம் கொடுத்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். எனக்கு பணஆசை இருந்திருந்தால் புலிகளுடன் தொடர்பு வைத்துதான் சம்பாதிக்க வேண்டும் என்பது இல்லை. எம்.ஜி.ஆர்.உயிருடன் இருந்த போது அவருடனே நான் இருந்த்திருந்தால் மந்திரி பதவி மீண்டும் எனக்குக் கிடைத்திருக்கும். அதன் மூலம் சம்பாதித்திருக்கலாம். மாறாக பெரியார், அண்ணா, கலைஞர் கட்டிக்காத்த தி.மு.க. கொள்கைகளின் மீதான ஈடுபாடு காரணமாக பத்து வருடமாக பதவியில்லாமல் இருந்தேன். போன தேர்தலில் ஈரோட்டில் முத்துசாமியைத் தோற்கடித்து நான் மந்திரியானேன். அந்தப் பகையின் காரணமாக முத்துசாமி என் மீது அபாண்டமாக பழி சுமத்தி இருக்கலாம். கடந்த டிசம்பர் மாதம் தருமபுரி கூட்டத்திலும், பவள விழா மாநாட்டிலும் ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்ததோடு அல்லாமல் என்னைக் கைது செய்தால் நான் புரட்சிப் பெண்ணாக மாறுவேன் என்று பேசினேன். எங்கள் ஆட்சியின் போது கூட முன்னாள் உள்துறைச் செயலர் நாகராஜனை ஒரு டிரான்ஸ்பருக்காகக் கூட நான் சந்தித்ததில்லை. என்னையும் என் கணவரையும் போலீஸ் கஸ்டடியில் வைத்து அடித்து துன்புறுத்தி கலைஞருக்கு எதிர்ப்பாக ஸ்டேட்மெண்ட் வாங்கி மக்களிடம் நல்ல பெயர் எடுக்க அரசியல் ஆதாயம் தேடுகிறார் ஜெயலலிதா. அது ஒரு நாளும் நடைபெறாது.

மக்களுக்கு விரோதமாக விலைவாசி ஏற்றத்தையும் கர்நாடக தமிழ் மக்கள் படும் அவதியையும் மறந்துவிட்டு எங்களைப் பழிவாங்க துடிக்கிறார் ஜெயலலிதா. இவைகளை மத்திய அரசு கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தப் பழிவாங்கும் நோக்கத்துக்கு மக்கள் ஒருநாள் முடிவு கொடுப்பார்கள். ‘‘நான் பனக்காட்டு நரி.ஜெயலலிதாவின் சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன். ஒரு பெண்ணுக்குக் கொடுக்கும் கொடுமை இதைவிட அதிகமாக வேறு எந்த ஆட்சியிலும் இருக்க முடியாது’’ என்று ஆவேசத்துடன் பொறுமையாக மெல்லிய குரலில் கூறினார்.

நாம் சுப்புலட்சுமியுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது நந்தியாக வந்து நின்று கொண்டு நம் பேச்சை ஒட்டுக் கேட்கலாயினர் ஜெயிலர்கள். அந்த மாதிரி சமயங்களில் ‘சட்டரீதியாக சுப்புலட்சுமியிடம் லா’ பற்றிப் பேசினோம். அவர்களது குறுக்கீடுகள் சுப்புலட்சுமிக்கு கோபத்தை கிளறி விட்டன. இப்படித்தாங்க! நான் பெருமூச்சு விட்டாக்கூட ஓடி வந்து பாக்குறாங்க. பத்துக்கு எட்டு ரூமுல என்னை அடைச்சுருக்காங்க. இவங்க என்னை அடிச்சாலும், உதைச்சாலும், ஏன் இங்கேயே கொலை செய்ய முயற்சித்தால் கூட நான் கவலைப்பட மாட்டேன். உண்மைக்குப் புறம்பான எதையும் என்னிடம் வாக்குமூலமாக அவங்களால வாங்க முடியாது. நான் துணிஞ்சிட்டேன்.

ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டு பேச்சுரிமை எழுத்துரிமையை எல்லாம் வேரோடு வெட்டிப்புதைக்கும் ஜெயலலிதாவுக்கு மக்கள் விரைவில் பாடம் கற்பிப்பார்கள். அப்பொழுது. என்னைப் போன்ற துன்பத்தை. ஜெயலலிதா அனுபவிப்பார். (சுப்புலட்சுமி பேட்டி அப்படியே நமது மைக்ரோ டேப்பில் பதிவாகியுள்ளது)

வாழ்விலும் சாவிலும் ஒன்றாக உள்ளோம்.

ஜெகதீசனை ஜெயிலில் சந்தித்தபோது...

அதிகாலை கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தேன். போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுத்துவும் கோவை டி.எஸ்.பி. அரங்கசாமியும் நின்றிருந்தனர். என்ன விஷயம்? என்று கேட்டபோது ‘‘உங்களையும் முன்னாள் அமைச்சரும் உங்கள் மனைவியுமான சுப்புலட்சுமியையும் தடா சட்டத்தில் கைது செய்ய அரசு உத்தரவு போட்டுள்ளது’’ என்றனர்.

எங்களைக் கைது செய்ய வாரண்ட் உள்ளதா என்று கேட்ட போது ‘க்யூ’ பிராஞ்ச் எஸ்.பி.ராமகிருஷ்ணன் கையில் வைத்துக் கொண்டு வெளியே இருப்பதாக சொன்னார்கள். ராமகிருஷ்ணனை சந்தித்தபோது வாரண்ட்டைக் காட்டினார். ‘அரைமணி நேரத்தில் தயாராகி விடுகிறோம்’ என்று சொல்லிவிட்டு எனது மனைவியை தூக்கத்தில் எழுப்பச் சொன்னேன். திருச்சிக்கு அழைத்துப்போகும் போது எஸ்.பி.ராமகிருஷ்ணன் எங்களிடம், ‘‘என் மீது எந்த தப்பும் இல்லை. நான் ரிட்டையர்ட் ஆக எட்டு மாதம்தான் உள்ளது. அதற்குள் உங்களைப் போன்றோரைக் கைது செய்து சிக்கலில் என்னை மாட்டி விட்டது அரசு.நான் என்ன செய்ய?’’ என்று தன்னிலை விளக்கம் அளித்தார்.

திருச்சியில் வைத்துதான் எனக்கு வாரண்ட்டு அளிக்கப்பட்டது. எங்களுக்கு ஜெயிலில் ஸ்பெஷல் கிளாஸ் என்றார்கள். ஸ்பெஷல் கிளாசில் பெட் இல்லை. மற்ற வசதிகள் கிடையாது. முன்னாள் அமைச்சர் பொன். முத்து ராமலிங்கம்மற்றும் கட்சிக்காரர்கள் வந்து சந்தித்து மெத்தை மற்ற வசதிகள் வாங்கிக் கொடுத்தார்கள். ‘‘எங்கள் ஜோடி போல யாருக்கும் அமையாது.வாழ்விலும் சாவிலும் ஒன்றாக இருக்க ஜெயலலிதா இருவரையும் ஒன்றாக ஜெயிலில் அடைத்துள்ளார்’’ என்றார். தன்னை சந்திக்கவரும் ஊர்க்காரர்களிடம் ‘‘அந்த வயலுக்கு தண்ணி பாச்ச சொல்லு. பம்ப்புக்கு முக்கால் இஞ்ச்ல பைப்பு வாங்கிப் போடு. மறக்காம மருந்து அடிக்கச் சொல்லுப்பா’’ என கேஷுவலாக உத்தரவு போட்டுக் கொண்டிருந்தார் ஜெகதீசன்.