ADVERTISEMENT

வாக்கு அரசியலா..? வேளாண் நலனா..? பிரதமரின் அறிவிப்பும் பாஜகவின் கணக்கும்!

03:21 PM Nov 19, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

2016ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 8ஆம் தேதி இரவு 8 மணிக்குப் பிரதமர் மோடி தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் பேசினார். அன்று அவர் வெளியிட்ட அந்த அறிவிப்பு நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வையும் பெரும் மாற்றத்திற்கும், இன்னல்களுக்கும் உள்ளாக்கியது.

அதன்பிறகு மோடி தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் என அறிவிப்பு வந்தாலே, ‘எதைப் பற்றிப் பேசப்போகிறார். என்ன சொல்லப்போகிறார்’ என மக்களும், விமர்சகர்களும் தங்கள் மனத்தின் யூகங்களைப் பகிர துவங்குவர். அதுபோல் இன்றும் (19.11.2021) பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் என்ற செய்தி வந்ததும் மக்கள் தங்களின் யூகங்களை அள்ளிவீசத் துவங்கினர்.

குருநானக் ஜெய்ந்தி அன்று மோடியின் உரை என்றதும், எதிர் வரவிருக்கும் பஞ்சாப் தேர்தலையொட்டி ஏதும் உட்பொருளுடன் மோடியின் உரை இருக்கும் எனக் கணித்தனர் அரசியல் அறிந்தோர். அதேபோல், மக்களின் கணிப்புகளை ஏமாற்றாமல் பிரதமர் மோடி அந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். காலை 9 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாகப் பேச துவங்கிய மோடி, “மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ்” என அறிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பெருந்திரளாக விவசாயிகள் ஒன்றுகூடி டெல்லியில், மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராட்டத்தைத் துவங்கினர். இந்தப் போராட்டத்தில் குறிப்பாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். நாட்களில் முடியும் என கணக்குப்போட்ட போராட்டம், வாரங்கள், மாதங்கள் என கடந்தது. விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையை முதலில் முன்னெடுக்க தயக்கம் காட்டிய மத்திய அரசின் மனதை விவசாயிகளின் போராட்டம் தட்டித் திறந்தது. ஆனாலும், விடாப்பிடியாக போராடிய விவசாயிகளின் சொற்கள் வேளாண்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் செவிகளினுள் சென்றதா என சந்தேகப்பட வைக்கும் வகையில், ‘வேளாண் சட்டத்தை ரத்து செய்ய முடியாது. வேண்டுமானால் திருத்தங்களுக்கான கோரிக்கைகளைச் சொல்லுங்கள்; முடிந்ததைப் பார்க்கலாம்’ என்ற பதிலையே பலகட்ட பேச்சுவார்த்தைகளிலும் உறுதியாக தெரிவித்தனர்.

அரசின் உறுதித்தன்மையை மீறி விவசாயிகள் தங்கள் போராட்டத்திலும், குறிக்கோளிலும் உறுதியாய் நின்றனர். தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தனர். குறிப்பாக குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணியை அறிவித்து அதனை நடத்தினர். இந்தப் பேரணியில், டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த சிலர், சீக்கியர்களின் 'நிஷான் சாகிப்' கொடி மற்றும் விவசாயச் சங்க கொடிகளை ஏற்றினர். இது அரசுக்குப் பெரும் நெருக்கடியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. விவசாயிகள் தரப்பிலிருந்து அரசின் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதேசமயம், எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஊடுருவியதாக ஆளும் பாஜகவின் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்த நிகழ்வுக்கு முன்பாகவே, பாஜகவின் தலைவர்களும், பாஜகவினரும், ‘விவசாயிகள் தன்னெழுச்சியாக போராடவில்லை. அவர்களைப் பின்னாலிருந்து இயக்குகிறார்கள்’ என குற்றஞ்சாட்டினர். அதனையே இந்தப் பேரணியின்போது ஏற்பட்ட கலவரத்தின்போதும் அவர்கள் உபயோகித்தனர்.

ஏறக்குறைய ஒரு வருடத்தை நெருங்கிய விவசாயிகளின் போராட்டத்தில் மர்ம மரணங்களும், தற்கொலைகளும் நடந்தன. உத்தரப்பிரேதசம் மாநிலம் லக்கிம்பூரில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகளின் போராட்டத்தின் நடுவே ஆஷிஸ் மிஸ்ராவின் கார் பாய்ந்து 4 விவசாயிகள் உட்பட 9 பேர் பலியாகினர். இப்படி வேளாண் சட்டங்களின் ரத்துக்காக சக விவசாயிகள் உயிர்களை இழந்தபோதும், சோகத்தை மனதில் ஏந்தி உறுதிகுறையாமல் களத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர் விவசாயிகள்.

பல சுற்று பேச்சுவார்த்தைகள், பற்பல உயிரிழப்புகள் என பல்வேறு களேபரங்களின்போதும் வாபஸ் பெறப்படாத சட்டங்கள், தற்போது வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், பல்வேறு கேள்விகளை நம் முன்னால் அடுக்குகிறது. அதனை சாதாரணமாகக் கடக்க முடியுமா என்று தெரியவில்லை. குறிப்பாக, அடுத்த சில மாதங்களில் ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதுவும், 2024இல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளை உறுதி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் தற்போது சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. போராட்டத்தில் பெரும் பங்கு வகிக்கும் பஞ்சாப் மாநிலத்திலும் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கிறது. அங்கு ஏற்கனவே காங்கிரஸின் உட்கட்சி பிரச்சனையால் ஆளும் காங்கிரஸின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது. அதேசமயம், குருநானக் ஜெயந்தி அன்று வெளியான இந்த அறிவிப்பை அரசியல் பார்வை இல்லாமல் கடந்துவிடவும் முடியாது. உ.பி.யில், அயோத்தி கோயிலைக் கையில் எடுக்கும் பாஜகவுக்கு, அங்கு நடந்த தொடர் பாலியல் வன்கொடுமை வழக்குகளும், விவசாயிகள் மீது கார் ஏற்றிய சமீபத்திய நிகழ்வும் பின்னடைவாக கருதப்பட்டாலும், தற்போதைய இந்த வேளாண் சட்ட வாபஸ் அறிவிப்பு மீண்டும் வெற்றி அலையை தங்கள் பக்கம் திருப்பும் என நம்புகிறது பாஜக.

மோடி இன்று தனது உரையில், “வேளாண் சட்டங்களின் நலனை ஒருதரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. எனவே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்திருக்கிறார். அன்றைய மதராஸ் மாகாண முதல்வர் இராஜகோபாலச்சாரியின் குலக்கல்வித் திட்டம் இன்று மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில், ‘திறன் பயிற்சி’ என்ற வடிவில் நுழைய இருப்பதுபோல், இந்த ஒருதரப்பை சமாதானம் செய்து மீண்டும் வேளாண் சட்டம் வேறு வடிவில் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.

வாபஸுக்கும் கைவிடலுக்கும் பொருள் வேறு என்ற கோணமும் இங்கு தவிர்க்க முடியவில்லை. வாபஸ் அறிவிப்பு என்பது தற்போதைக்கான தீர்வு. ஆனால், சட்டப்படி கைவிடல் என்பதே இதற்கான முற்றான தீர்வாக இருக்கும். இதற்கு ஏற்றார்போலவே பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏவுமான வானதி ஸ்ரீனிவாசன், ஒரு தனியார் தொலைக்காட்சியில் வேளாண் சட்டம் வாபஸ் குறித்து கருத்து தெரிவிக்கையில், “இன்றைய சூழலைக் கருத்தில்கொண்டு வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன” என்று தெரிவித்திருக்கிறார்.

"300 நாட்களைக் கடந்து, பல நூறு உயிர்களை இழந்து, அரசின் 9 கட்டப் பேச்சுவார்த்தையிலும் மயங்காமல் தங்கள் முடிவில் உறுதியாக நின்று விவசாயிகள் போராடியது வாபஸ் அறிவிப்புக்காக அல்ல; சட்டப்படியான கைவிடல் தீர்வுக்காகவே" என்ற குரல்களும் எதிரொலிக்க துவங்கியுள்ளன. பிரதமர் மோடியின் இன்றைய வாக்குறுதி அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தல்களின் வாக்குகளுக்கான தற்காலிக தீர்வா அல்லது விவசாய நலன்களுக்கான உறுதியான தீர்வா என்பதை காலம் நமக்கு வெகுவிரைவில் உணர்த்தக்கூடும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT