farmers at delhi border

Advertisment

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஐந்து மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது டெல்லியின் எல்லைப் பகுதிகளில் முகாம் அமைத்து தங்கியுள்ள அவர்கள், மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாதவரை வீடு திரும்பப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர். மேலும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி சாலை மறியல், இரயில்மறியல் போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டனர். மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக குடியரசு தினத்தன்று விவசாயிகள் ட்ராக்டர்பேரணியும் நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து, பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டு அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா, தங்களது போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைவதையொட்டியும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு முதன்முறையாக பதவியேற்ற 7ஆம் ஆண்டின் தினத்தையொட்டியும் மே 26ஆம் தேதியைக் கருப்பு தினமாக அனுசரிக்கப் போவதாக அறிவித்தது.மேலும் அன்றைய தினத்தன்று மக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலும், வாகனங்களிலும், கடைகளிலும் கறுப்புக்கொடி ஏற்ற வேண்டும் எனவும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டது.

விவசாயிகளின்இந்தக் கருப்பு தின போராட்டஅறிவிப்புக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 12 கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்தன. இந்தநிலையில், டெல்லி எல்லையில் விவசாயிகள் இன்று (26.05.2021) கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.