ADVERTISEMENT

இளம்பெண்ணால் பாதிக்கப்பட்டது சிறார்கள்தான்! - விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கில் புதிய திருப்பம்! 

03:51 PM Apr 18, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விருதுநகரைச் சேர்ந்த இளம்பெண், ஆபாச வீடியோ மிரட்டலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். சிபிசிஐடி போலீசார் விசாரித்துவரும் இவ்வழக்கில் ஹரிஹரன், ஜுனத் அகமது, பிரவீன், மாடசாமி ஆகிய நால்வரோடு, சிறார்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர். கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சிறார்கள் நால்வர், விருதுநகர் இளஞ்சிறார் குழும நீதிபதி ஜாமீன் வழங்கியதும் விடுவிக்கப்பட்டனர். அதேநேரத்தில், ஹரிஹரன் உள்ளிட்ட நால்வரும், விருதுநகர் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையினருடைய பரிந்துரையின் பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 15 வயதே ஆன 9-ஆம் வகுப்பு மாணவன் போக்சோ நீதிமன்றத்தில், பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அந்த இளம்பெண்ணுக்கு எதிராக அனுப்பியிருக்கும் புகார் பகீர் கிளப்புவதாக இருக்கிறது. இந்தப் புகாரானது, ‘ரஷோமோன் விளைவு’ பாணியில் அமைந்துள்ளது. அதாவது, ஒரே நிகழ்வு (பாலியல் வன்கொடுமை) சம்பந்தப்பட்ட வெவ்வேறு நபர்களால், தன்முனைப்பாக - முரண்பாடாக – வேறுபட்டு விவரிக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான 15 வயது சிறுவன் அளித்துள்ள புகார், பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இளம்பெண்ணே குற்றம் புரிந்தார் என அந்தப் பெண் பக்கம் திரும்பியுள்ளது.

அச்சிறுவன் தரப்பு கூறுவதென்ன?

எங்கள் தெருவில் குடியிருக்கும் ஹரிஹரன் அண்ணனை எங்களுக்குத் தெரியும். நானும் அவரும், என்னுடன் பள்ளியில் மேல்வகுப்பு படிக்கும் நண்பர்கள் இருவரும், செல்போனில் பப்ஜி விளையாட்டு மூலம் பழகி வந்தோம். ஹரிஹரன் எங்களிடம் “வாழ்க்கை என்றால், எப்போதும் சந்தோஷமாகவும் உல்லாசமாகவும் இருக்கவேண்டும்.” என்று கூறிவந்தார். மேலும் ஹரிஹரன், அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று, பணம் கொடுத்து உல்லாசமாக இருப்பதாகச் சொன்னார். அப்பெண்ணின் கைப்பேசி எண்ணை ஹரிஹரனிடமிருந்து பெற்று நாங்களும் பேசி வந்தோம்.

அந்தப் பெண், சிறுவனான என்னுடைய நண்பனின் செல்போனில் பேசியபோது, “வாழ்க்கை என்றால் கடைசிவரை பல ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்து சாகவேண்டும். அதுதான் எனது வாழ்க்கையின் லட்சியம்.” என்று ஆசை வார்த்தைகளைக் கூறினார். சிறுவர்களான எங்கள் மூவரையும் தனித்தனியாக வெவ்வேறு நாட்களில் அவருடைய வீட்டுக்கு வரச் சொன்னார். பெத்தனாட்சி நகரிலுள்ள ஒரு இடத்துக்கும் வரவைத்தார். அங்கு வைத்து, அவருடைய கைப்பேசியில் இருந்த ஆபாசப் படங்களைக் காண்பித்து, எங்களைத் தவறாக வழிநடத்தினார். 2021 ஜூலை மாதத்திலிருந்து 5 மாதங்களாகக் கட்டாயப்படுத்தி எங்களை அழைத்து, தவறான வழிகாட்டுதலைத் தொடர்ந்தார். அவர் சொன்னதைக் கேட்டு, எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் பணத்தைக் கொண்டுபோய்க் கொடுத்தோம். அந்தப் பணத்தில்தான், அழகு சாதனப் பொருட்களும் ஆணுறைகளும் வாங்குவதாகச் சொன்னார். ஒருகட்டத்தில், இந்தத் தவறை வெளியில் சொல்லக்கூடாது. வெளியில் தெரிந்தால், எங்களுடைய எதிர்கால வாழ்க்கை கெட்டு, படிப்பிற்குப் பிரச்சனை ஆகிவிடும் என்று மிரட்டினார்.

கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்தில், ஹரிஹரனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது எங்களுக்குத் தெரியாது. கடந்த மார்ச் 19-ஆம் தேதி, ஊரகக் காவல்நிலையப் போலீசார், வீட்டிலிருந்த என்னைக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஹரிஹரன் அண்ணன் அங்கு இருந்தார். விசாரணை நடத்தியபோது, அந்தப் பெண் எங்களைக் கட்டாயப்படுத்தி தவறாக நடத்தியதைச் சொன்னேன். அப்போது காவல்நிலையப் பணியிலிருந்த சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளருடன் டி.எஸ்.பி. அர்ச்சனாவும் இருந்தார். அர்ச்சனா மேடம் என்னிடம் “அந்தப் பெண் உங்கள் மீது புகார் கொடுத்திருக்கிறார். இந்த விவரம், பத்திரிக்கைகளில் செய்தியாக வெளியாகி மேல் அதிகாரிகள் வரை சென்றுவிட்டது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவுசெய்து, உங்களைச் சிறையில் அடைக்கவுள்ளோம்.” என்று தெரிவித்தார். நாங்கள் அர்ச்சனா மேடத்திடம் “நாங்கள் வயதில் இளையவர்கள். தவறாக வழிநடத்தியது அந்தப் பெண்தான். பாதிக்கப்பட்டது சிறுவர்களாகிய நாங்கள்தான். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, அந்தப் பெண் யார் யாரிடம் பேசினார் என்பதை அறிய, அவருடைய கைப்பேசியை ஆய்வுக்கு உட்படுத்துங்கள். உண்மை தெரியவரும்.” என்றோம். நாங்கள் சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தார்கள்.

அடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தபோது, அந்தப் பெண்ணால் தவறாக நடத்தப்பட்டதைச் சொன்னேன். அவர்களோ “இந்த வழக்கு பெரிய அளவில் பத்திரிக்கைச் செய்தியாக வெளிவந்துவிட்டது. அரசியல் கட்சியினர் வேறு போராட்டம் நடத்துகின்றனர். எங்களிடம் சொன்னதை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது” என்று அவர்கள் பங்கிற்கு மிரட்டினார்கள்.

18 நாட்கள் சிறையில் இருந்ததால், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி, மன வேதனையுடன் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். விருதுநகர் ஊரகக் காவல்நிலையப் போலீசார், இளவரான என்னைக் கட்டாயப்படுத்தி தவறாக வழிநடத்திய அந்தப் பெண் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. அதனால், இந்த வழக்கில் தாங்கள் (போக்சோ நீதிமன்றம்) தலையிட்டு, விசாரணை மேற்கொண்டு, அந்தப் பெண் மீது வழக்கு பதிவுசெய்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி கிடைக்கச் செய்யுங்கள் என்று புகாரில் முறையிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அந்தப் பெண் வசிக்கும் பகுதியில் களவிசாரணை மேற்கொண்டபோது நமக்குக் கிடைத்த ‘முரணான’ தகவல்களை, தொடக்கத்திலிருந்தே நீக்குபோக்காகத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். சிறுவனின் புகாரிலும்கூட, அத்தகைய குற்றச்சாட்டே அந்தப் பெண் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை வழக்காகப் பதிவுசெய்து வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த விருதுநகர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனாவிடம் ‘சிறார்கள் மிரட்டப்பட்டார்களா? அவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டதா?’ எனக் கேட்டு விளக்கம்பெற, அவருடைய கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டோம். தொடர்ந்து நம்மைத் தவிர்த்தார். குறுந்தகவலும் அனுப்பினோம். எந்த பதிலும் இல்லை. தனது விளக்கத்தை டி.எஸ்.பி. அர்ச்சனா பகிர முன்வந்தால், வெளியிடத் தயாராகவுள்ளோம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT