ADVERTISEMENT

பாஜக அரசால் ஸ்கிராப்புக்கு போகும் லாரிகள்! தற்கொலைக்கு தள்ளப்படும் அதிபர்கள்!! 

11:25 AM May 18, 2018 | Anonymous (not verified)

சுங்கக் கட்டணக் கொள்ளை, அபரிமிதமான டீசல் விலை ஏற்றம், இன்சூரன்ஸ் பிரீமியம் உயர்வு போன்றவற்றால் நாளுக்கு நாள் லாரி தொழில் நசிந்து வருவதாகவும், தமிழகம் முழுவதும் மாதம் 350 லாரிகள் பழைய இரும்பு கடைக்கு எடைக்குப் போடப்படும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT


தமிழகத்தில் லாரி பாடி பில்டிங் கட்டும் தொழில் மற்றும் சரக்கு லாரி பயன்பாடு இரண்டுக்குமே சேலம், நாமக்கல் மாவட்டங்கள் பெயர் பெற்றவை. ஒரு காலத்தில், லாரி அதிபர் என்றாலே தனி கவுரவம். ஆனால், இன்றைய நிலை அப்படி அல்ல. லாரி அதிபர்களில் பலர், விவசாயிகளைப் போலவே அதீத கடன் சுமையில் சிக்கித் தவிப்பதாகச் சொல்கின்றனர், லாரி உரிமையாளர்கள். இந்த துறையில் அப்படி என்னதான் நடக்கிறது? தெரிந்து கொள்ள முற்பட்டோம். தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் தனராஜ், நம்மிடம் விரிவாக பேசினார்.

ADVERTISEMENT


''தமிழ்நாடு முழுவதும் நாலே முக்கால் லட்சம் லாரிகள் இருக்கின்றன. இவற்றில் பாதிக்குப்பாதி லாரிகள், வாடகை கிடைக்காததால் சும்மாதான் நிறுத்தப்பட்டு உள்ளன. சொல்லப்போனால் இன்னும் எத்தனை வருஷத்துக்கு இந்த தொழிலில் நாங்கள் எல்லாம் நீடிப்போம் என்றே தெரியாது. லாரி தொழில் நசிந்து போக மூன்று முக்கிய காரணங்கள் இருக்கின்றன. பாஜக அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் முடிவை அறிவித்தது.


இந்த திட்டம் அமலுக்கு வந்த பிறகு, டீசல் விலை லிட்டருக்கு 9.80 ரூபாய் அதிகரித்துள்ளது. கர்நாடகா தேர்தலையொட்டி கடந்த 18 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. தேர்தல் முடிந்த கடந்த மூன்று நாளில் டீசல் விலை 72 பைசா உயர்த்தப்பட்டு உள்ளது. இது போதாதென்று, மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை மல்டி ஆக்சில் வண்டிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 11 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

மூன்றாவது முக்கிய காரணம். சுங்கக் கட்டணம். தமிழ்நாட்டில் மொத்தம் 43 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 13 சுங்கச்சாவடிகளின் ஒப்பந்தக்காலம் முடிந்த பிறகும்கூட, இன்னும் லாரிகளுக்கு அடாவடியாக கட்டணம் வசூலிக்கின்றனர். இதுபற்றி முன்பே அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் சுங்கக் கட்டணத்தை உயர்த்தினர். இப்போது மீண்டும் வரும் செப்டம்பர் மாதம் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.


இந்த காரணங்களால் இன்றைய நிலையில் லாரி தொழிலை தொடர்ந்து நடத்துவதில் கடும் சவால்களும், சிக்கல்களும் உள்ளன. மொத்த வாடகையில் 15 சதவீதம் சுங்கக் கட்டணமாக சென்று விடுகிறது. பிறகு எரிபொருள், டிரைவர் சம்பளம், படி, பராமரிப்பு செலவுகள் எல்லாம் போக லாரி உரிமையாளருக்கு 12-15 சதவீதம்தான் வருமானமாக கிடைக்கிறது. பலர் வாடகை கிடைக்காமல் லாரியை சும்மாவே நிறுத்தி வைத்திருந்ததால் அவை எடைக்குப் போடும் நிலைக்கு வந்து விட்டன. அந்த லாரிக்கு தரச்சான்றிதழ் (எப்சி), இன்சூரன்ஸ் எல்லாம் சேர்த்து ஆண்டுக்கு 85 ஆயிரம் ரூபாய் செலவழிக்கணும். அதை எடைக்குப் போட்டால் ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும். அதனால் பலர் பழைய லாரிகளை உடைத்து விற்க தொடங்கிவிட்டனர். சேலத்தில் மட்டும் மாதம் 150 முதல் 200 லாரிகள் ஸ்கிராப்புக்கு போடப்படுகிறது. மாநிலம் முழுவதும் 350 லாரிகள் இவ்வாறு எடைக்குப் போடப்படுகின்றன,'' என்றார் தனராஜ்.

சுங்கக் கட்டணத்தை, ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் சலுகையை அறிவித்தால் அதை தாராளமாக வரவேற்கத் தயாராக இருப்பதாக புதிய யோசனையையும் தெரிவித்தார் தனராஜ்.


லாரி உரிமையாளர்கள் சங்க சேலம் மாவட்ட பொருளாளர் செந்தில்செல்வன் கூறுகையில், ''எங்கள் தொழிலைப் பொருத்தவரை லாரி டிரைவர்களை நம்பித்தான் இருக்கிறோம். அவர்களில் பலரும் டீசல் திருடக்கூடியவர்கள்தான். ஒருபுறம் அரசின் கொள்கை முடிவுகளாலும், மற்றொரு புறம் டிரைவர்களாலும்கூட இந்த தொழில் நசிந்து வருகிறது. ஒரு காலத்தில் 20 லாரிகளை வைத்திருந்தவர்கள்கூட இன்றைக்கு ஒரு சில லாரிகள் இருந்தால் போதும் என்று அவற்றை விற்கத் தொடங்கிவிட்டனர். சில பேர், தொழில் நசிந்து கடன்மேல் கடன் வாங்கி, கடும் மன உளைச்சலால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதும் உண்டு,'' என்று வேதனையுடன் கூறினார்.

மற்றொரு லாரி அதிபரான துரைசாமி, ''நான் 15 லாரிகள் வெச்சிருந்தேன். சமீபத்துலதான் 10 லாரிகளை வரிசையாக நிக்க வெச்சி வித்தேன். சுங்கக் கட்டணம், டீசல் விலை, இன்சூரன்ஸ் போன்ற பிரச்னைகள் இருந்தாலும், டிரைவர்கள் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக இருக்கு. இன்னிக்கு ரோட்டுல போற எந்த வண்டிய வேணும்னாலும் பாருங்க... ஒரு டிரைவர் வண்டியாத்தான் இருக்கும். டிரைவருங்க எல்லாருக்குமே குடிப்பழக்கம் இருக்கு. அவர்கள் தினமும் கறி இல்லாமல் சாப்பிடறதே இல்ல. கறியும், மதுவும் உள்ளே போனவுடனே நைட்டு நல்லா தூங்கிடறாங்க. பகல் வேளையில் வண்டி ஓட்டினா அவ்வளவுகாக மைலேஜ் கிடைக்காது. அதனால டீசல் செலவும் அதிகமாகுது. நடைக்கு நடை டோல்கேட் செலவு ஏழாயிரம், எட்டாயிரம்னு ஆகுது. அது இல்லாம போலீஸ்காரங்களுக்கு மாமூலும் அழ வேண்டியிருக்கு. இப்படி பல தொந்தரவுகளாலதான் லாரிகளை விற்கணும்கிற முடிவுக்கே வந்தேன்,'' என்று புலம்பினார்.

பிரதமர் மோடி அடிக்கடி சொல்லும் 'அச்சே தின்' என்பதும்கூட வெறுமனே
'ஜூம்லா'தான் போல!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT